அவள் பெயர் எனக்கு தெரியாது




முழு நிலவு நாளில்
கடற்கரை செல்லும் போதெல்லாம்
அந்த சிறுமியை பார்ப்பேன்.
கரையில் விளையாடிக் கொண்டிருப்பாள்
சக குழந்தைகளுடன்.

யாரென வினாவினேன்.
பதிலாக, ஓர் பறவையைப் பற்றிச் சொல்லத் துவங்கினாள்.
சிறகசைக்காமல் ரொம்ப தூரம் பறக்கும்..
சிச்சிறுமிகளை கண்டால் கொண்டாட்டம் கொள்ளும்..
கடல்நீரில் உப்பை பிரித்து நன்னீராய் அருந்தும் 
அழகுடல் 
நீளிறகு 
செங்கால் 
மஞ்சள் கூர் மூக்கு
இன்னும்.. இன்னும்..
முழு நிலவிலிருந்து அந்தப் பறவை உதித்ததாம்.
இருகைகளாலும் அளந்தபடியே
நிலவிலிருந்து பறந்து வந்ததென
மண்ணில் பாவித்தபடியே கூறினாள்.
பிரதி மாதம் அதேநாளில் 
விருப்ப மனிதஉருகொள்ளுமாம்.
கால் மட்டும் ஒன்றாம்..
ஏனென்றேன்
நிற்கத்தானே.. ஒன்று போதும்
சொல்லிய கணத்தில் மஞ்சள் நிறமாய் மினுக்கினாள்
பறவையின் பெயரை சொல்லவே இல்லை.
அவள் பெயரும் எனக்குத் தெரியாது.


நன்றி : மலைகள்.காம்.

2 comments: