புரிதல் வியத்தல் வீழ்தல்


I
என்னிலிருந்து
தெறித்தவை; பூத்திருக்கின்றன
உன் நீலநிறப் புடைவையில்
வெள்ளைப் பூக்களாய்.

II
ஒரு துளைக்குள் எப்படி
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சிறகடிக்கவும்
ஓராயிரம் புரவிகளை சிலிர்த்தெழவைக்கவும் முடிகிறது.

III
பசுந்தளிருதிர்வைத் தவிர்க்க
நினைக்கும் வேளையில்
கிரகங்கள் குளிர் உறைந்திறுகிய 
சோக நாடகமொன்று நிறைவுறுகிறது.
திரை சீலை இறங்குவதற்கு முன்
அடுத்த ஆட்டம் தொடங்கிவிடுகிறது
திரை சீலை போன்றே
வலமும் இடமும் அசைகிறார்கள்
துயரத்திலிருந்து மீள முடியாத பார்வையாளர்கள்
அரங்கத்தின் வெளியே காத்திருப்பவர்களையும்
மீளாத்துயரம் சூழ்வதை மவுனம் சொல்கிறது.
பசுந்தளிர் நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது
ஒரு எரி நட்சத்திரம்.

நன்றி : அதீதம் 

19 comments:

SAN said...

கண்ணா, நீ எழுதுகிற கவிதை புரிகிறது. ஆனால் நீ எழுதிய பின்னூட்டம் புரியவில்லை. அது என்ன " 'எல்லாவிதத்திலும்' நண்பராக ஏற்றுக்கொண்டமைக்கு.." புரியவில்லை

SAN said...

SAN மற்றும் A K T இரண்டுமே நான்தான் - A K T சாந்தமூர்த்தி

SAN said...

முதல் இரண்டு பத்திகள் நன்றாக இருக்கின்றன. மூன்றாவது கவிதையில் "பசுந்தளிருதிர்வைத்" பிரித்து எழுதியிருக்கலாமோ என தோன்றுகிறது. "உறைந்திருகிய" - "உறைந்திறுகிய" என வந்திருக்க வேண்டும். "திரைசீலை" - "திரைச்சீலை". மன்னிக்கவும் - பிழைகளை சுட்டுவதற்கு.. மேலும் ஒரு கருத்து - பொருட் செறிவிற்காக சொற்களை வலிந்து சேர்த்து எழுதுதல் சற்று உறுத்தலாக தோன்றுகிறது. அவசியம் எனில் சரி. ஆனால் ..........? அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றினால் மீண்டும் மன்னிக்கவும்.

மாதவராஜ் said...

ரசித்தேன், வேல்கண்ணன்!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//ஒரு துளைக்குள் எப்படி
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சிறகடிக்கவும்
ஓராயிரம் புரவிகளை சிலிர்த்தெழவைக்கவும் முடிகிறது//

அருமை

உயிரோடை said...

கொஞ்சம் வில்லங்கமா எழுதி இருக்கறது போலபடுது.

இன்றைய கவிதை said...

வேல்கண்ணண்

ஓரு துளைக்குள் புரிதலை விவரித்து பூத்தலில் வியக்கவைத்து எரி நட்சத்திரமாய் வீழ வைத்திருக்கிறீர்கள்

ரசித்தேன்

நன்றி வேல்கண்ணண்

ஜேகே

கோநா said...

முதல் இரண்டு பகுதிகளையும் கடைசி பகுதியுடன் முழுவதும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை வேல் கண்ணன்.
இணைய இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

உயிரோடை said...
கொஞ்சம் வில்லங்கமா எழுதி இருக்கறது போலபடுது.//

கொஞ்சம் என்பதை எடுத்துடுங்கோ!

வாழ்க தோழர்!

ஆதவா said...

நல்லாயிருக்குங்க வேல்கண்ணன்.
முதலிரு கவிதையைக் காட்டிலும் மூன்றாம் கவிதை கொஞ்சம் அடர்த்தியானது.

சிவகுமாரன் said...

முதலிரண்டும் அருமை. மூன்றாவது திரும்ப திரும்பப் படித்தும் புரியவில்லை என் மரமண்டைக்கு.

வைகறை said...

முதற்கவிதை அருமையிலும் அருமை!!

vasan said...

//ஒரு துளைக்குள் எப்படி
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சிறகடிக்கவும்
ஓராயிரம் புரவிகளை சிலிர்த்தெழவைக்கவும் முடிகிறது.//
ஓராயிர‌மாய் விசுப‌ரூப‌ வியாக்கியான‌ம். தூள் வேல் க‌ண்ண‌ன்.
அது உயிர்த் துளையாகிய, உயிரின் துளையா, உயிரில் துளையா?
அற்ப‌ அறிவிய‌ல் நுழையா, அற்புத‌ சுழியோ!

ஆறுமுகம் முருகேசன் said...

ஒரு துளைக்குள் எப்படி
ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சிறகடிக்கவும்
ஓராயிரம் புரவிகளை சிலிர்த்தெழவைக்கவும் முடிகிறது.//

அட்டகாசம் நண்பா :)))

Vel Kannan said...

வணக்கம் SAN @ A K T
முதலில் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
எல்லாவிதத்திலும் = என்னுடைய அபத்தங்களைஎல்லாம் பெறுத்து கொண்டு நட்பு நீடிக்கும் உங்களின் பொறுமையும் பெருமிதமும் என்னை குறுக வைக்கிறது .
// மன்னிக்கவும் - பிழைகளை சுட்டுவதற்கு..// //அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றினால் மீண்டும் மன்னிக்கவும். //இந்த வார்த்தைகள் என்னை சங்கடபடுத்துகிறது.

//ஒரு கருத்து - பொருட் செறிவிற்காக சொற்களை வலிந்து சேர்த்து எழுதுதல் சற்று உறுத்தலாக தோன்றுகிறது. அவசியம் எனில் சரி. ஆனால் ..........?//
வலிந்து எழுதுவது என்பது என்னிடம் ஒருபோதும் கிடையாது.
முதல் இரண்டும் படித்த வேகத்தில்/புரிந்த வேகத்தில் மூன்றாவது படிப்பது/புரிவது எளிதல்ல. இது 'வீழ்தல்' எளிமையாக வீழ்ந்து விட முடியாது என்பது நான் ஏற்றுகொண்ட முடிவே.
தொடர்ந்து வருகை தரவும் நண்பரே

Vel Kannan said...

வணக்கம் தோழர் மாதவராஜ் அவர்களே
உங்களின் தொடர் வருகையும் உற்சாகபடுத்தலும்
எனக்கு பெரும் கவன உணர்வை தருகிறது

நண்பர் தி.பழனிசாமி க்கு மிகுந்த நன்றியும் அன்பும்

மிகுந்த அன்பும் நன்றியும் லாவண்யா
(சரிதான் லாவண்யா, உங்களின் புரிதல்)

மிகுந்த அன்பும் நன்றியும் ஜே.கே

மிகுந்த அன்பும் நன்றியும் கோநா
உங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும்

மிகுந்த அன்பும் நன்றியும் தோழர் சி.கருணாகரசு
உங்களின் புரிதலுக்கு நன்றி

மிகுந்த அன்பும் நன்றியும் ஆதவா
வீழ்தலுக்கு அடர்வு தேவை தானே ஆதவா

Vel Kannan said...

மிகுந்த அன்பும் நன்றியும் சிவகுமாரன்
என்ன இப்படி சொல்லிடீங்க
(உங்கள் உடையது அப்படியென்றால்
இல்லாத நானெல்லாம் எங்கே செல்வது நண்பரே )

வாங்க கவிஞர் வைகறை
மிகுந்த அன்பும் நன்றியும் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

வாங்க வாசன்
மிகுந்த அன்பும் நன்றியும்
உங்களின் பின்னூட்டம் வைத்தே கவிதை எழுதலாம் போலிருக்கிறது
நன்றி வாசன்

வாங்க ஆறுமுகம் ஜெகதிசன்
அடேயப்பா ... நலமா நண்பா
எவ்வளவு நாளாயிற்று உங்களை பார்த்து .....
மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா

தோழி பிரஷா said...

நல்லாயிருக்கு சார்..

Vel Kannan said...

நன்றி தோழி பிரஷா