ரமாவும் உமாவிற்குமான உரையாடலில் வழியே விரியும் உலகம்


திலீப் குமார் - விளக்கு விருதுக்கு பிறகு தான் இவரின் படைப்புகளை தேடி படிக்க தொடங்கினேன். மிக குறைந்த படைப்புகளே இருந்தன. அதில் 'கடவு' சிறுகதை மறக்க முடியாத ஒன்று. இங்கே இதை சொல்வதற்கான காரணம் , அந்த சிறுகதையின் தொடர்சியாகதான் இந்த குறு நாவலை நான் பார்க்கிறேன். கடவு-வை படிக்காதவர்கள் இந்த கதை படித்த பிறகாவது படித்துவிடுவது உத்தமம் என்று நினைக்கிறேன். 

பிரமாண்ட ஆங்கில படத்தில் கதாநாயக(கி)ன் ஒரு மலையுச்சிலிருந்து மறு மலையுச்சிக்கு தாவி செல்வார்கள். சரியாக தாவி விடுவார்கள் என்று நமக்கு தெரிந்திருந்தும் சீட்டின் நுனிக்கு வந்து பார்ப்போம். அதே போல் தான் திலீப் குமாரும் நம்மை முதுகில் சுமந்து தாவுகிறார். ஓரின சேர்க்கையுள்ள பெண்களுக்கு இடையேயான உரையாடலின் வழியாக கதை  சொல்லும்  போது, பிசகினாலும் அதால பாதாளத்தில் விழுந்து விடும் அதிக அபாயம் உண்டு என்பதால் கவனமாக் நம்மை சுமந்து கொண்டு தாவியும் விடுகிறார். இதை வேறு மாதிரியாக சொல்வதென்றால் மலையாள புகழ் எழுத்தாளரிடம் இந்த கதைக்கான பின்புலம் சிக்கியிருந்தால் அடித்து துவைத்து நற நறவென நார் நாராய் கிழித்து தொங்கவிட்டு நம்மை கருங்குழியில் தள்ளியிருப்பார். 

ரமாவும் உமாவிற்குக்குமான உரையாடல்(இடையே இரண்டு இடத்தில் கதைசொல்லியும்) மூலமாகவே இவர்களின் பின்புலம் விவரிக்கப்படுகிறது.  இந்த வடிவம் நாடகத்தன்மைக்கும் விறுவிறுப்புக்கும் காரணமாக அமைகிறது என்பது தனிச்சிறப்பு. பசித்த மானுடத்திலும், காகித மலரிலும் ஆண் ஓரின சேர்க்கை. இதில் பெண் ஓரின சேர்க்கை என்பதால் தமிழில் முதலிடம் பிடித்து கொள்கிறது. அதனை தாண்டி,ஆங்கில, இலக்கியம் படித்த பின்புலம் கொண்ட பெண்-தமது 40  வயதில் ஓரளவுக்குவேணும் முழுமையாக வாழ நினைத்த சராசரி பெண்ணின் மனம்,  மன அழுத்தம் அதிகமுள்ள இளமை பருவத்தை கடந்து வந்த உமா-உப்பு சப்பில்லாத வாழ்வை ஏற்றுக்கொண்ட ரமா இருவரையும் இணைக்கும் ஒரு புள்ளியென  பல அடுக்குகளாக அமைகிறது. ரமா அதிகம் கேள்வி கேட்பவளாகவும், உமா பதில் மற்றும் ஆற்றாமையை வெளிப்படுத்துபளாகவும் இருப்பதால் , சில இடத்தில் உமாவின் மீது ரமா சவாரி செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது. 

தமிழ் பெண் கலாசார காவலர்கள் யாரேனும் திலீப் குமார்க்கு கொலை மிரட்டல் விடுக்க  மாட்டார்கள் என்ற எண்ணம் இருப்பதற்கான காரணம்,  அவர்கள்  படிக்க மாட்டர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. அப்படி வந்தால் அவர்களுக்கான மறுப்பை கதைசொல்லி தனது முன்னுரையில் வைத்து விடுகிறார்.சமகால இணைய உலகில் பெரும் அதிர்ச்சியெல்லாம் இந்த கதை தராது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் குறுநாவலின் பல விஷயங்களை விவாதத்திற்கு உட்படுத்தலாம். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே சொல்லுகிறேன். 
________________
உமா : ''ஒரு விஷயம் கவனித்தாயா? உலகின் எல்லா மொழிகளிலும் பெரும்பாலான எல்லா வசைகளும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பதைப் பற்றியே இருக்கின்றன. இவ்வளவு வன்மம் ஏன்? எப்படி ?
ரமா : பெண்களின் யோனியைக் குறித்து எல்லா மொழி ஆண்களுக்கும் பதற்றம் தான். ஒரு பெண்ணின் யோனியின் வீரியமும் , கலவியின் போது அதன் நுட்பமும் தான் அவர்களது ஆழ் மனதில் இவ்வளவு குரூரத்தை விளைவிக்கிறது. ''
___________________________________________________

இப்படியாக ஒரு கட்டத்தில் இவர்கள் உரையாடல் தொடர்கிறது. இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் பெண் கவிஞர்கள் கடந்து வந்த அல்லது அடைந்த இலக்கின் வரிசையில்  கதை சொல்லியும் சேர்கிறார். அதே போல் ரமாவின் பாத்திர படைப்பு அவளுடைய மழுப்பலான பதிலுக்கு-அனேகமாக இல்லை-அவளது பின்புலம் சுவாரசியமற்ற வாழ்வாக இருந்தாலும் கூட ஒரு ஆளுமை தன்மை இதில் தெரிகிறது. குறுநாவலில், பெண் தனது அந்தரங்களை எவ்வித தடையும்மின்றி வெளிபடுத்தும்  போக்கு ஆணாதிக்க மனநிலைக்கான எதிரடியாக உள்ளது என்று சொல்லலாம். 

மேலும் இந்த தொகுப்பில் மூன்று சிறுகதைகள் உள்ளன. 
அதில் ..............

'ஒரு எலிய வாழ்க்கையில்' - பொறியில் சிக்கிக்கொண்ட எலியும் கடவுளுக்குமான பேச்சு வார்த்தையில் சம கால படைப்பாளர்களை பற்றி குறை சொல்லியும் புறம் பேசுவதையும் வழமையாக் கொண்ட கால்/அரை எழுத்தாளரை 'போட்டு தள்ளுகிறார்' ஆசிரியர்.    யார் மீது கோபமோ? 


அடுத்த சிறுகதையான 'நா காக்க' வில் நம் கண் முன்னே பார்த்து கொண்டிருக்கும் தாழ்ந்து போன மேன்மக்களில் ஒருவரை பற்றியதாகும்.
அவர்களின் மீது பரிவு கொள்ளசெய்யும் கதையிது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட 'ஒரு குமாஸ்தாவின் கதை' நம்மை அந்த சம்பவத்தை நினைத்து பதட்டம் கொள்ள செய்கிறது. மெஹபூப் மனதிலேயே தங்கி விடுகிறார். 

மிக அழகான வயலட் பூக்களை முகப்பு அட்டையில் மட்டுமில்லாமல் நூலையும் சிறப்பாகவே கொண்டு வெளியிட்டுள்ளார்கள் சந்தியா பதிப்பகத்தார்கள். 
என்னளவில் தேடல் வாசகர்களுக்கு நிறைவை தரும் புத்தகம் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை தான்.

நன்றி : வெயில் நதி சிற்றிதழ் 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

செல்வராஜ் ஜெகதீசன் said...

Nice Review Velkannan.
Eppadi irukkeenga?

அப்பாதுரை said...

அறிமுகத்துக்கு நன்றி.

vasan said...

பெண்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ அவ‌ய‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌
ஆணின் அவ‌ய‌ங்க‌ளும் பெரும்பாலும் சீற்ற‌ம் கொண்ட‌
பெண்க‌ளின் வெறி வார்த்தைக‌ளால் வெட்டிசிதைக்க‌ப்படுகின்ற‌
சில இட‌ங்க‌ளை க‌ட‌ந்து சென்றிருக்கிறேன்.

அதீத‌ அழுத்த‌மும், அமுக்க‌மும் அதை அப்ப‌டி
பிர‌க‌ட‌ண‌ப்ப்டுத்த‌, அத்துமீற‌ உள்ம‌னம் நாக‌ரீகக் கோடு
தாண்டும் வேளைக‌ளில் உத்த‌ர‌விடுகிற‌து போலும் .

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html) சென்று பார்க்கவும்...

vel kannan said...

நன்றிஅனைவருக்கும்