தொடரும்

என் மீதமர்ந்த பறவை
இளைப்பாறிய பின் பறக்கிறது.

மீண்டும்
அமரும் வரை
பின்
தொடரும்
என் கிளை.

பொலிவற்ற முகங்கள்
இருள் கவிழ்ந்த தேவதைகள்.
இலையசைவு துளியுமில்லை
அனல் சுவாசம்
குளிர் வற்றிய கோடை நிலவு
நிழலற்ற நெடுஞ்சாலை முடிவற்ற வானம்
அயர்ந்த உடல் அசைக்கவியலா கால்கள்
அந்தியில் தொடங்கும் ஒப்பாரி நடுஇரவுக்கும்
வலிமுனகல் நடுவே உறக்கம் மிகவும் கடிது
நாளொன்று நெடுயுகம்
ஊரடங்கில் காலமும் முறுவலித்துக் கொண்டிருக்கிறது
ஓய்வற்ற பசியோ கொடிதினும் கொடிது

கனவில் வந்த சிவன்
---------------------------------
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்

இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்

தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்

ஓவியம் : சீனிவாசன் நடராஜன்

பதங்கமாதல்

Image result for chennai city bus 12b




வெக்கைப் பேருந்தினுள் எழுமிச்சைப் 
பெண்ணொருவர் பச்சை வெள்ளரியை 
முன்பின்பாக நடந்து கூவி விற்கிறார்
மாம்பழ அம்மாவிடம்
கிளை நீட்டி கேட்கிறது வெண்டை பிஞ்சு

எழுமிச்சை இலவசமாகத் தந்த பசேலென்ற 
பாம்பைத் தலை வால் கிள்ளித் தருகிறார் மாம்பழம்

ஒடிந்த பாம்பு
வெண்டைப் பிஞ்சின் வாயில் நலுங்குகிறது 

விஷவெக்கை முறிந்து 
பேருந்தில் குளுமை நிரம்புகிறது

(12B-க்கு)

நன்றி  : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

இரண்டு கவிதை கல்கி அக்டோபர் 13, 2019

Image may contain: 2 people, including Vel Kannan, people smiling

கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை:

1. ரொட்டி
--------------

எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்;
கடைசி மகள் உவர்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்;
அலுவலக நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்;
எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று
முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் நெரூதா,
உங்களின் ரொட்டிகளைப் போல..

2.நம் வீடு
------
என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.

நன்றி : கவிஞர் Amirtham Surya(அட்டகாசமான வடிவமைப்புக்கு நன்றி நண்பா) &
கல்கி வார இதழ்.

உருண்டோடும் மூன்றாம் உலகம்




மடியில் கிடந்த இரண்டு பந்துகளைவிடச்
சின்னஞ்சிறிய சிவப்பு நிறப்பந்து
உன் இடது பிஞ்சுக் கையில் கச்சிதமாய்ப் பொதிந்திருந்தது
'கேட்ச்' என்று என்னை நோக்கி வந்ததைத் தவறவிடுகின்றேன்
கரைபுரண்டு ஓடும் நதியின் குளிர்ந்த கூழங்கற்கள் வந்தடைகின்றன
அடுத்ததாக மூவண்ண பந்தை
வலதுப் பிஞ்சிலிருந்து எறிய, தவறவிடுகின்றேன்
மிதக்கும் நந்தவனத்தில் பதினோரு துளையிட்ட
புல்லாங்குழலை மாயா வாசிக்க கேட்கிறேன்
இறுதியாக உன் இருகைகளிலும் பிடித்தெறிந்த
பலவண்ணமுள்ள பந்தைச் சரியாகப் பிடித்த நொடியில்
கிடுகிடு பள்ளத்தாக்கில் இவ்வுலகை இழுத்துச் செல்கிறது
பெரும்பாதரசக் குண்டு

(சோலைமாயவனின் மாயாவிற்கு )

நன்றி : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:


தற்கொலைக்கு முடிவெடுத்து
கொலை செய்யத் துணிகிறேன்
கொலை
கொலைகள்
கொத்து கொத்தாய் கொல்வதற்கு
சரியான வழி யுத்தமென..
பலனாக கிடைக்கும்
சிதிலமடைந்த நகரங்கள்
அடையாளம் சிதறுண்ட தேகங்கள்
என்பதை நினைவிலும் சகிக்காமல்
தற்கொலையுண்டேன்
புனிதம் தழுவிக்கொண்டது
---
நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு