கருப்பு தேநீர் ஞாயிறு


யாழினி,
இந்த ஞாயிறு எலுமிச்சை 
தேன் கலந்த கருப்பு தேநீரில் 
தொடங்குகிறது
வண்ண சட்டையணிந்த 
அவர் நம்முடன் கலந்து கொண்டார்
எதிர் வீட்டிலிருந்தது வருவதாக சொன்னார்
செம்மண் நிற நீள மயிறு 
ஒன்று ஒட்டி கிடந்தது அவரின் மேல்
எதிர் வீட்டு பெண்ணிற்கு  அப்படித்தானிருக்கும்

நம்முடன் பேச தொடங்கிய அவர் 
எல்லாவற்றையும் எல்லாவற்றிலுமான 
அரசியலை மட்டும் பேசினார்
அவராகவே மரணத்தையும் பேசினார் 
உண்மையில்
எல்லா மரணத்திலும் அரசியல் 
இருப்பதாக தெரிந்தாலும் அரசியலற்றது 
மரணம் தான் என்றார்

திராட்சை மதுவை 
முட்ட முட்ட குடித்தோம்
அவர் உன்னையும் என்னையும் 
கலவி சென்றார்
எதிர்வீட்டுபெண் மரணித்த செய்தி 
வருவதற்கு முன்பே நமக்கு 
தெரிந்திருந்தது வந்திருந்தவர் 
யாரென்று
நாம் மரணிக்க தொடங்கினோம்.
-------------------------------------

நன்றி : தாரணி-இலக்கிய இதழ். 
தொடர்புக்கு: அ . கார்த்திகேயன். 
அலைபேசி: 8870985812.

2 comments:

அப்பாதுரை said...

அரசியலற்ற மரணத்திலும் அரசியலிருப்பது - சிந்திக்க வைத்த வரிகள்.

வந்தவர் யாரென்று தெரிந்தத் தருணம் திடுக்கிட வைத்தது.

Chellappa Yagyaswamy said...

கவிதையைப் படிக்கும்போது ஒரு திரைப்படம் போல் காட்சி கண்முன்னால் விரிகிறது. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.