ரியாஸ் குராணா(கவிஞர்,விமர்சகர்)வின் பார்வையில் என் தொகுப்பு

ஒரு கவிஞனுக்கு தனது முதலாவது தொகுப்பே ஒரு சிறந்த அடையாளமாக மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. அந்த அசாத்தியம் வேல் கண்ணன் விசயத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நவீன கவிதைகள் அதிகம் அக்கறைகொண்ட சிறு படிமங்களும், அதற்குப் பிறகான கவிதைகள் அக்கரை கொள்ளும் கதைசொல்லலின் நீட்சியும் சந்திக்கும் புள்ளியிலிருந்து, இவருக்கான கவிதை நிகழ்கிறது.

தனது பிரதிகளை கவிதையாக மாற்றிக் காட்டுவதற்கு வேல் கணண்ணன் கடைப்பிடிக்கும் உத்தி மிக முக்கியமான ஒன்று. அதை மிகச் சரியாக இனம் கண்டு கொள்வதினுாடாக, இவரின் கவிதைச் செயலை மேலும் வளர்த்துச் செல்வதற்கு நாம் உதவலாம் என்றே கருதுகிறேன். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடப்பதில்லை.

விமர்சித்து கிடப்பில் போடுவார்கள். அல்லது, கவனிக்காமல் கைவிட்டுவிடுவதினுாடாக ஒதுக்கிவிடுவார்கள்.

அனேகமாக திரைப்படங்களில் பயன்படுத்தும் உத்தி, படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்களுக்குள் அனைத்தையும் அறிமுகம் செய்துவிடுவார்கள். அதிலிருந்து கதையை நகர்த்திச் செல்லுவதினுாடாகவே, பார்வையாளர்களுக்கான சவாலை( வாசிப்பை) நிகழ்த்துவார்கள்.

அதுபோலதான். இவருடைய கவிதைகள் ஆரம்பிக்கும் விதம் மிக முக்கியமானது. எப்படி தனது பிரதியை கவிதையாக மாற்றிக் காட்டப்போகிறார் என்பதற்கான ஒரு முக்கிய சமிக்ஞையை தொடக்கத்திலே உருவாக்கிவிடுகிறார். அதைத் தொடர்ந்து, நழுவிச் செல்லும் சிறு படிமங்களும், மெலிதான ஒரு நறேட்டிவ் ( கதைசொல்லலும்) தொடர்கிறது.

இந்த ஸ்டார்ட்டிங் அதாவது ஆரம்பம் என்பது, அனேகமாக கவிதையை நிறைவடையச் செய்யும்போது பயன்படுத்தும் ஒரு அதிரடிப்புக்கு நிகரானதுதான். பிரதியின் முடிவில் ஒரு சாக் தருகின்ற அதிரடிப்பை குறிவைத்துதான் கவிதைகளை இதுவரை நகர்திக்கொண்டிருக்கிறார்கள். இவருடைய கவிதைகளும் அப்படியேதான் இயங்கினாலும்,

இவருடைய ஸ்டார்டிங் மிக முக்கியமானது. அந்த ஆரம்பம் என்பது நம்மை கவிதையைப் பின்தொடர அழைப்பதற்குப் பதிலாக புதியதொரு வேலையைச் செய்கிறது. அந்த இடத்திலிருந்து, இந்தப் பிரதி எப்படி தன்னைக் கவிதையாக நிறைவடையச் செய்யப்போகிறது என்ற ஒரு புறத்தில் சிந்திக்கவும் செய்கிறது.

அந்த வகையில், சமகால கவிதை வெளிக்குள் நுழைந்து தனக்கான இடத்தை உருவாக்கும் ஆற்றல் இவருடைய கவிதைகளுக்கு இருக்கிறது. வருக,வருக என அனைவரும் அன்போடு வரவேற்போம்.

கவிதைச் செயல் என்பதை முற்றிலும், கவித்துவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்தது மாத்திரம்தான் என நம்பிக்கொண்டிருக்பார்களோ என எப்போதும் எனக்கு சந்தேகமிருக்கிறது.

கவிதை உருவாக்கத்திலுள்ள தொழில்நுட்பங்கள் தமிழில் மிகக் குறைவு. சொல் தேர்வு தொடங்கி, அதை எடுத்துரைப்பது வரை. இது இவருக்கு மாத்திரமுரிய பிரச்சினையல்ல. தமிழ்க் கவிதைகளுக்குரிய பொதுவான பிரச்சினை என்றே நினைக்கிறேன்.

ஒரு பிரதியை கவிதையாக நிறைவடையச் செய்வதில் இந்த தொழில்நுட்பத்தின் பங்குதான் 90 வீதமானது. அவைகளில் கவனம் செலுத்துவதோடு, ஒரேவகையான எடுத்துரைப்பு முறைமையை தவிர்த்து, புதிய புதிய முறைமைகளை சிந்திக்கலாம் என்பது எனது முக்கிய விமர்சனமாகும். கற்பனைச் செயல் ஒரேமாதிரியாக இருக்கும்படி தொடரலாம். அது சிலநேரங்களில் ஒரு கவிஞனின் தனித்த அடையாளமாக மாறும் வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கிறது.

எடுத்துரைப்பு என்பது, கவிதையாக நம்பும் பிரதியினுள், அங்கு உருவாக்கப்படும் சூழல் மற்றும், கவிதைச் சம்பவங்களின் உள்ளார்ந்த இயங்குதல் விதிகாளால் தீர்மானிக்கப்படவும், வழிநடத்தப்படவும் வேண்டும்.

இவரின் ஒரு கவிதை இதோ.

அறையில்

பழுப்பேறிய சுவரில் தெரிக்கிறது
எனக்கான பொழுதுகள்
அதன் நிழலில் கரையத்
தொடங்குகிறது யாரும்
தீண்டாத என் ஓவியம்

சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானல்நீரில்
நெளிகிறது என் நிழல்
இறுதிவரை வருவேன் என்றவனும்
நிழலுடன் தங்கிவிட்டான்

இந்த அறைக்குள்ளேயே சரியத்
தொடங்கிவிட்டது வெயில்
பேசியே சலித்துவிட்டது சிலந்தி
பிசுபிசுப்பாய் கசிந்தது
புழுக்கத்தின் வீச்சம்

இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம்

நன்றி : ரியாஸ் குராணா

No comments: