சுருக்கமா சொல்றேன்.. கொஞ்சம் பொறுங்க..
இப்ப நல்லா புரிஞ்சுகிட்டேன், நாம மத்தவங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை நம்ம பேசற மாதிரியே சொல்லிடலாமுன்னு, இதுல குறிப்பா ஒன்னு சொல்லணும், ஆத்துல தண்ணி மொண்டுகிட்டு  பல மைலு தூரம் அலம்பாம வீடு வந்து சேர்கிற அக்காமாறுங்க மாதிரி ஒரு சொல்லு கூடவும் இல்லாம கொறையவும் இல்லாம சொல்லிடணும்,  தண்ணி, கரண்ட் மாதிரி சொல்லு சிக்கனமும் ரொம்ப முக்கியம். அதுக்கு கவிதைன்னு கதைன்னு எந்த கழுத பெயரை வச்சுக்கிட்டாலும் சரி..  இப்படி என்ன சொல்ல வச்சது என்னை வெகுவா பாதிச்ச மு.சுயம்புலிங்கத்தோட 'நீர்மாலை' புத்தகம்.  இதுக்கு முன்னாடி இவரு கவிதை தொகுப்ப வாசிச்சிருக்கேன்.. அதை படிக்கும்போது நாம வாழற காலத்து மனுசங்க மேலேயும் இந்த மண்ணு மேலயும் அக்கறையும் பரிதாபமும் வந்துச்சு. இந்த 'நீர்மாலை' அதேயெல்லாம் தாண்டி ஏதோ பண்ணிபிடுச்சு.. ஒலகத்த பொரட்டி போட்ட புத்தக மாதிரி என்னைய பொரட்டி போட்ட புத்தகம் இது. 

இதுல புதுசா தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லிட முடியாது. ஏன்னா நம்மளை சுத்தி நடக்கறது தான் எல்லாமே.. ஆனா அதை சொன்ன வெதமும் அளவும் தான் என்னை மலைக்க வச்சுருச்சு.. அதுவும்  நம்ம முன்னாடி அட்டணக்கால் போட்டுக்கிட்டு பல்லு குத்திகிட்டே ஏதோ யோசனை பண்ணிக்கிட்டே பேசுவாங்கல்ல, நம்ம சித்தப்பா. பெரியப்பா மக்க.. அந்த மாதிரி வாஞ்சையுடன் சொல்லப்படுகிற கதயாகவும் தெரியுது.                   

நீங்க இதுக்கு முன்னாடி எளிமையா, பெரிய விஷயத்தை சொன்னவங்களை சொல்லி இவரை சேர்த்துக்கலாம். அப்படி பட்டியல் எல்லாம் நான் சொல்ல விரும்பல. பட்டியலு மேல எனக்கு நம்பிக்கையும், விருப்பமும் இல்ல.. சரி, இப்ப அவரு சொன்ன கதைகளுக்கு வருவோம்.. ஏதோ எனக்கு தோனினதை சொல்லிடுறேன்.. மொத்தம் இருவத்தியெட்டு கதைங்க. ஒன்றையிலிருந்து ரெண்டு பக்கம் அப்படியே போச்சுன்னா ரெண்டரை பக்கம். அவ்வளவு தான். இதுல படங்களும் போட்டுருக்கறது வாசிக்க சுவாரசியமா இருக்கு..

ரக வாரியா கதய பிரிக்க விரும்புல.. ஆனா இதுல வரும் மனுஷங்க, ஜீவராசிங்க,சம்பவம், காட்சி எல்லாம் வேறு ஒரு தகவலை நமக்கு சொல்லுது... இதுல  அம்மங் கொடை, கறிநாளு , நீர்மாலை, வைகாசி விசாகம் எல்லாம் வருதுங்க. அதுல சொல்ற சம்பவம் நமக்கு வெவ்வேறு காட்சியை கொடுக்குது.. ஆங்'.. காட்சினு சொன்ன உடனே 'சோறு' 'ரசனை' 'வேடன்', 'வறுமை' மொதக்கொண்டு சில கதைங்க வெறும் காட்சி பதிவா மட்டுமே சொன்னாலும் முன்னே சொன்ன மாதிரி வேற ஒன்ன புரிய வச்சுடுது.. 

'குடி'ன்ற கதையில குடியால சீரழிஞ்ச குடும்பம் அவங்க ஒழிஞ்ச பின்னால தலை தூக்குதுன்னு சொல்ற எடம் அவ்வளவு சரியா புரியுது.. ''பாவி' கதையில ''எந்த நோயும் இல்ல, சுகர், பிரஷர் இல்ல''ன்னு ஆரம்பிச்சு ''பெருமாளை சேவிச்சுண்டு இருக்கேன்''ன்னு முடியும். ஆனா, நடுவுல சொல்ற மேட்டரே வேற.. யம்மாடி...   இதே மாதிரி 'மண்' கதை முடிவுல 'எங்க அக்கா சந்தோசமாருக்கா' சொல்றது கலங்கடிச்சுடுது.. பேரன் கொலையானத சொல்லும் 'தடயம்' கதையை வச்சு ஒரு நாவலயே எழுதிப்புடலாம்..அம்புட்டு விஷயம் பொதிஞ்சு கிடக்கு அதுல.. தொகுப்பு முழுக்க வெறுமென சொல்லப்படுற சொல்லாடல் ஒரு பெருவாழ்வை சுலுவுல சொல்லப்படுது.. சும்மா சாம்பிளுக்கு சிலது சொல்றேன் பாருங்க..

'அந்த வருசம் அம்மங் கொடைக்கு நாங்க எங்க வீட்ல கறி ஆக்கல.. ஒரு கிடா அறுத்தும்'(ஆடு.பக்:95), 
'எம் மகன் செத்தான்.எங்க கஷ்ட்டம் விலகியது.நிம்மதியா இருக்கோம்.'(குடி,பக்: 27)
'பொம்பளை சீக்கை வாங்கிக் கெட்டிக்கிடக்கான்'(நீர்மலை.பக்:80). 
'குழந்தை சாராயத்தை நுணைத்து விழுங்குகிறது.(சேனை. பக்:67)

சுயம்பு நறுக்குன்னு சொன்னதை நான் இதுக்கு மேலே வெலாவாரியா சொல்றது சரி இல்ல.. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிடுறேன்.. வரலாறுன்னாலே ராசாக்கள் சரித்திரமுன்னு சொல்லுவாங்க. சராசரி மனுசனுடைய தரித்திரம் எதுவும் சொல்லப்படலை.. ஒரு வேளை அந்த காலத்திலேயே சுயம்பு மாதிரி ஆளுங்க இருந்திருந்த அந்த பெருங்கொறை நீங்கியிருக்கும். இப்ப எழுத ஆரம்பிச்சுடாங்க னு சொல்றத விட எழுதறதை தடுக்க முடியலைன்னு சொல்லணும். அந்த வகையில பார்த்தா அந்த காலத்துலயும் இப்படி 'சுயம்புகள்' இருந்து அழிக்கப்பட்டு இருக்கலாம்.. மறுக்கறதுக்கு இல்ல. 
மு.சுயம்புலிங்கம், தமிழ் பேரிலக்கியத்துல எடம் பிடிக்கிறாரோ இல்லையோ ஆனா அவருக்குன்னு ஒரு தனிச்ச இடம் எப்பவும் இருக்கும்.  அந்த எடத்துக்கு நேர்மையா, எளிமையா சொல்ற ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்கன்னு தோனுது. 

நீங்க அவசியம் வாசிங்க.. அப்புறம் நான் சொன்னது சரின்னு தெரியும். நன்றிங்க....

நீர்மாலை(சிறுகதை தொகுப்பு)
மு.சுயம்புலிங்கம்.
வெளியீடு : காலச்சுவடு.
பக்கம் : 96
விலை : 125/-

என் குறிப்பு : போலச் செய்தல் தவறாக இருப்பினும், போலச் செய்தலிலேயே தொடங்குகிறது எல்லாமும்..

No comments: