காட்டில் நிர்வாணமில்லை


மெல்லிய துணியிலிருந்து அடர்துணி வரை
மறைப்பதும் வளர்ப்பதும்
காட்டுத்தீயின் வெடிப்புகளையும் வீக்கங்களையும்
காட்டுத்தீயின் புண்கள் ஆறுவதேயில்லை
'பாற்கடலை நீந்திக்கடப்பது எளிது
பூவுடலுக்குக் கொடிது
எரியும் காடுகளைத் தாங்குவது '
என்றாள் யாழினி


எரியாத கனவில்
எழுதி வைத்திருந்தாள் யாழினி இவ்வாறாக;
என்மீது காடு வளர்ந்தது
வளர காரணமென்று அறிந்தேன்
மறைத்தலும் இருளுமென்று

நீரில்லாமல் காடு காய்த்தது
நீரில்லாமல் காடு கனிந்தது
நீரில்லாமல் காடு புளித்தது
நீரில்லாமல் காடு பழுத்தது
நீரில்லாமல் காடு உதிர்த்தது
நீரில்லாமல் காடு பூக்கவேயில்லை

மெல்லிய துணியில் உரசியது
அடர் துணியில் புகைந்தது
இருளில் ஜ்வாலையானது
எரியும் காடுகளைத் தாங்குவது
பூவுடலுக்குக் கொடிது
அழைக்க யாருமில்லை
அணைக்க விழியில்லை
அழிக்க மட்டும் வழியுண்டு: தீக்கு தீயே
எரித்து கொள்கிறேன் என்னையும் -


நிர்வாணங்களில் காடு வளர்வதில்லை
நிர்வாணங்களைக் காடு ஏற்பதில்லை
காட்டில் நிர்வாணமில்லை

பின் குறிப்பு :
யாழினி தன்னை எரிக்கும் போது வீட்டில் யாருமில்லை
குளியறையில் தன்னை எரித்துக் கொண்டாள்
உள்தாழ்ப்பாள் ஏதும் போடவில்லை
சப்தங்கள் எழுப்பவேயில்லை
கருகிய நாற்றம் அறிந்தே ஓடி வந்தார்கள்
மண்ணெண்ணெய்  வீச்சத்துடன் நல்லெண்ணையும் வாசமும் அடித்தது
அரைவேக் காட்டில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்
பலப்பல  தொடர்கேள்விகளுக்கு இறுதியாய் சொன்ன பதில்
தெளிவாகக் கேட்டாலும் யாருக்கும் புரியவில்லை
அவள் சொன்னது; 'காடு எரிகிறது இப்பொழுதும்'  


நன்றி :  உயிரோசை

22 comments:

நிலா மகள் said...

தலைக்கு நல்லெண்ணையும் உடலுக்கு... கடவுளே... கொடூரம்!! மனம் நடுங்குகிறது யாழினியை, அவளது சுற்றத்தை நினைத்து....

ஹேமா said...

கொடூரம்...!

சி. கருணாகரசு said...

காடுகள் கூட கண்ணீர் வடிக்கும்.... யாழினிக்கு. படைப்பு மிக நேர்த்தி.பாராட்டுக்கள்.

தோழரே... நான் சிங்கை வந்து விட்டேன்.
நீங்க நலமா?

திருநாவுக்கரசு பழனிசாமி said...

"காடு எரிகிறது இப்பொழுதும்"

கனவுகளின் காதலன் said...

கலங்க வைத்துவிட்டீர்கள் நண்பரே.

உயிரோடை said...

கவிதையின் நீளத்தை குறைந்திருக்கலாம். "காடு எரிகிறது இப்போதும்" இந்த உணர்வு நன்றாக இருக்கிறது.

சுந்தர்ஜி said...

கவிதையின் பொருள் என்னைத் தொட்டாலும் வனத்தின் அடர்பாதை சென்றடைவதில் சோர்வேற்படுத்தியது.ஆனால் அது உங்கள் பாதை.

நிலா மகள் said...

நிதானமான மறு வாசிப்பில் பலப்பல அர்த்தங்கள் பிடிபடுகின்றன.

முதல் பாராவில் காட்டுத்தீயை மனசென உருவகப் படுத்திக் கொண்டேன். இரண்டாவது பாராவின் 'காடு'-உடல் மூடும் ஆடைகள். மூன்றாவது பாராவின் காட்டுக்கான நீர் - சக மனிதர்களின் அன்பு. நாலாவது பாராவில் ... அணைக்க 'விழி'யில்லை ... யாழினி பார்வையற்றவளோ .. அல்லது எழுத்துப் பிழையோ..? ஐந்தாவது பாரா காடு- உலகம்.

பின்குறிப்பில்... 'சப்தங்கள் எழுப்பவேயில்லை '- யாழினியின் வைராக்கியமும் மன உறுதியும் தெரிந்தது. 'அரைவேக்காட்டில்'- அழுதேவிட்டேன் . 'காடு எரிகிறது இப்போதும்' ... அவளின் மிச்சமிருக்கும் உணர்வுகளின் ஒரே அர்த்தம்.

தத்துவார்த்தமான சோகக் கதையொன்றை கவிதையாக்கி விட்டீர்கள் வேல் கண்ணன்!

எனது அவதானிப்புகள் சரிதானா?

santhanakrishnan said...

வனத்தின் எல்லா மர்மங்களும்
புரிபடாவிட்டாலும்
விழி நுனியில்
கண்ணீர்த் துளி.

சைக்கிள் said...

கவிதையின் வடிவம் நன்றாக இருக்கிறது திரு.வேல்கண்ணன். பேசுபொருள் தாண்டி வரிகளை வாசித்தாலும் - குறிப்பாக //நீரில்லாமல்....// என்று வரிசையாக வரும் வரிகள் - வேதனையை வலிமையாகப் பேசுகின்றன. அவற்றின் வடிவமும் நன்றாக இருக்கிறது. பேசுபொருள் பேசப்படவேன்டியதுதான். முழு கவனத்தோடே கனமாக எழுதப்பட்டுள்ளது ஆனால் வேறு கோணங்களில் தன்னிலைகளை - இங்கே யாழினி - போல - உருவாக்க வேண்டிய - அவசியத்திற்கு கவிதை பயணிக்க வேண்டும் என்பது ஒரு தேவையாகப் பட்டது. நீங்கள் முரண்பட்டால் விட்டு விடவும்.

ஜோயல்சன் =9841004800 said...

அருமை திகைததில் இருந்து மிள்ளவில்லை இனமும்.........

Geetha said...

வலி உணர்த்திய வரிகள்...

உமாஷக்தி said...

அருமையான கவிதை வேல்கண்ணன்...

Vel Kannan said...

என்னை என்றும் உற்சாகப்படுத்தும்
நிலா மகள்
ஹேமா
தோழர் சி.கருணாகரசு
(நலமே தோழர், நன்றி )
திருநாவுக்கரசு பழனிச்சாமி
கனவுகளின் காதலன்
உயிரோடை
சுந்தர் ஜி
சந்தன கிருஷ்ணன்
ஜோயல் சன்
கீதா
உமா சக்தி
உங்களின் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்

Vel Kannan said...

நிலா மகள்,
முழு புரிதலுக்கு மிக்க நன்றி
//கதையொன்றை கவிதையாக்கி விட்டீர்கள் வேல் கண்ணன்! //
முழு உண்மை கதையும் கூட,
இரண்டரை பக்கம் கதை இது.
பின்பு அந்த வடிவத்தில் திருப்தி அடையாததால் இந்த வடிவம் மாற்றினேன்.
அதனால் தான் இந்த வடிவம் உயிரோடை.
சுந்தர் ஜி ,
//வனத்தின் அடர்பாதை சென்றடைவதில் சோர்வேற்படுத்தியது.//
எனக்கவே அந்த பயணத்தை விடாமல் இருந்ததற்கு நன்றியும் அன்பும் ஜி,
சைக்கிள்
//ஆனால் வேறு கோணங்களில் தன்னிலைகளை - இங்கே யாழினி - போல - உருவாக்க வேண்டிய - அவசியத்திற்கு கவிதை பயணிக்க வேண்டும் என்பது ஒரு தேவையாகப் பட்டது. //
உங்களின் கருத்திற்கு நன்றி. கண்டிப்பாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்கிறேன்.

Vel Kannan said...

திருநாவுக்கரசு பழனிச்சாமி முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்
உமா சக்தி உங்களின் வருகையும் வாழ்த்துகளும் மிகுந்த மகிழ்வை அளிக்கிறது.

hemikrish said...

மிக நேர்த்தியாக இருக்கிறது கவிதை...மனம் பிசைகிறது இறுதியாய் வருகிற வரிகளிலும் இறுதி
ஊர்வலமும்....

Vel Kannan said...

ஹேமி, உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி

சிவகுமாரன் said...

காடு எரிகிறது இப்பொழுதும்
மனதுக்குள்ளும்
அணைக்க இயலாமல்

மண்குதிரை said...

மறுவாசிப்பு செய்ய வேண்டும் நண்பா

Vel Kannan said...

நன்றி சிவகுமார்
நன்றி மண்குதிரை

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

அருமையான படைப்பு. உண்மை பாத்திரமோ, கத பாத்திரமோ யாழினிக்காய் எரிகிறது இதயம்