இந்த நாள் உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறதுமுன் அந்தியில் பேரலை கண்டு வியந்த இத்தருணத்தில்
முதல் முறை கைகளைப் பற்றிக் கொண்டதை நினைத்துக் கொள்கிறோம் .
நதியின் குளிர்மை வானமெங்கும் விரவியிருப்பதை உணர்கிறோம்.
கீச்சொலிகளின் சங்கமம் சிற்றோடையின் ரீங்காரத்தைக்  கடத்துகின்றன.
தூய மெல்லுடலின் கனிவு முன் பனியை மலர்த்தியது.
மோனத் தகிப்பு நிலமெங்கும் புனைவதை தேகச்சூடு உணர்த்துகிறது.
மேனியெங்கும் மேவிய விழி வருடல் ரோமங்களில் மீச்சிறு துளியை உதிர்க்கிறது.
வார்த்தை தள்ளாடுகையில் தூவலாய் தெளிக்கிறது கதகதப்பான பசலை.
சர்ப்பம் நிகர்த்த பெருமூச்சு நம்மிடையேயான இடைவெளியை சுக்குநூறாய்  நொறுக்குகிறது.
விரல் சேர்ப்பில் செவ்வந்தி தளர்ந்து இருள் போர்வையில் ஒடுங்குகிறது.
இந்நாள் வரை துயின்ற மழையொலி சிலிர்த்து எழுகிறது 
பிழம்பின் பொறிகளென.
இரவின்  பேருரு தீண்டலற்ற
தனிமையின் அகாலத்தை அசை போடுகிறது.

நன்றி : விகடன்தடம்'ஆகஸ்ட் 2017