யாசித்தலின் வலி பற்றிய இசைக்காத இசைக்குறிப்புகள்

          
தடதடத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியின் தாள லயத்திற்கேற்ப தன் சுதியை ஏற்றி இறக்கி பாடிக்கொண்டிருக்கிறான் பார்வையற்ற பாடகன்.தேர்ந்தெடுத்த இசைக்குறிப்புகளை மட்டுமே தட்டியபடி இருக்கின்றன அவன் கையிலிருக்கும் கட்டைகள். சில்லரையுதிர்த்து கடக்கும் நம்மின் ரசிப்புத்திறன் அதற்குள்ளாக மட்டுமே இருக்குமென்பதாய் அவன் கற்பித்துக்கொண்டதாய் இருக்கலாம். யாசித்தலின் வலி பற்றிய இசைக்காத இசைக்குறிப்புகள் தேங்கிக்கிடக்கலாம் அவனிடம்.... இல்லையெனில் தொடர்வண்டியின் சக்கரங்களுக்கு பலியாகியிருக்கலாம்.

'இசைக்காத இசைக்குறிப்பு'

வேல்கண்ணனின் முதல் கவிதை தொகுப்பு...
இலைக்கு இலை நகர்ந்து அசைதலில் காற்றின் இருப்பை உறுதி செய்யும் கவிஞன்.
அணிந்துரை ஏதுமில்லாமல் வாசகனின் சுயத்தேடலுக்கு வழி விட்டிருக்கும் வேல்கண்ணனின் சுயம் பிடித்திருக்கிறது. அது அவரின் கவித்திமிராய் மிளிர்கிறது.
யதார்த்த புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றன தொகுப்பு முழுவதும்

ஆறுதல் (பக்கம் 6 முதல் கவிதை )
அடங்காத பசி
நிற்காத கண்ணீர் ரத்தம்
நிறையாக துளைகள்
செவிமடல்கள்
குறையாக நோய்தாகம்
மீளாத காலம் இளமை..
இன்னும் உடுத்தாத உடை,
முகமூடி பல உடுத்தியவை நினைவில் இல்லை
(சில கிழிந்தும் தொங்குகிறது)
வாசிக்காதது மாதிரியே
எழுதாதவைகளும்
எண்ணற்றவை...
பொழுதுகள் போதவில்லைதான்
நட்சத்திரங்களை
எண்ணுவதற்கு
ஆறுதல்
ஒரே ஒரு நிலவு...

நட்சத்திரங்கள் போல் நம்மைச் சுற்றிலும் துரோகம், சிக்கல், வாதை,ரணம்...... என பல ரூபங்களில் துன்பங்கள் தொடர்ந்தாலும் ஆறுதலாய் இருக்கும் ஒற்றை நிலாக்கொண்டு எல்லா துயர்களையும் துடைத்தெறியலாம்.

மௌனப் புரிதல் (பக்கம் 12)
உனக்கும் எனக்கும்
பொதுவானவை மௌனம்
இருப்பினும்,
நீ மௌனித்த வேளைகள்
என்னை கலவரப்படுத்துகிறது
நான் மௌனித்த வேளைகள்
உன்னை சந்தேதிக்க வைக்கிறது...
ஒரே மௌனம் இருவேறு தளத்தில் பயணிக்கும் இயல்பான தருண்மொன்றை அழகாய் பதிவேற்றியிருக்கிறார்.

உலோக மிகைக்கரு (பக்கம் 28)
பேரண்டத்தில் கடந்து செல்லும்
அடர் மேகம்
வெளியெங்கும் பரவியிருக்கும்
இசைத்துளிகளில் கரைகிறது

கொடிய பாலையில்
வெந்து தவிக்கும் காமம்
முழுநிலவின் ஒளியில்
கரும்பாறையாக உறைகிறது.

ஆழ்கடல் அடர்த்தியில்
மிதக்கும் ரகசியம்
சுவாசக்குமிழ் அமிழ்வில்
சிதறித் தெறிக்கிறது

அறியப்படாதவைகளில்
மிளிரும் கவிதை..
மொழியற்ற மௌனப் பெருங்காட்டில்
தொலைந்தும் போகிறது.

உலோக மிகைக்கரு
ஏதுமற்ற படிவம்
தொடர்கசிவு சொற்களில்
விந்துவால் சூல்கொள்ள
ஆரம்பிக்கிறது...
இப்படியாக சூல்கொண்டிருக்கிறன இவரது கவிதைகள்.

மௌனம், இசை, வீச்சம் போன்று சில சொற்கள் பல கவிதைகளில் வருவது தவிர்த்திருக்கலாம். குறுங்கவிதைகளை நீள்கவிதையாக்கும் பொருட்டு பின்னப்பட்ட வார்த்தையடுக்குகள் அயர்ச்சியையே தருகிறது(நவீனகவிதை, ஒழுங்கற்றக்கவிதை(பார்ம்லஸ்) என அதற்கு விளக்கம் அளித்தாலும்).
எதுவாக இருப்பினும் தேர்ந்த கவிதை தொகுப்பு என்பது என்வரையிலான மதிப்பீடு. வாழ்த்துக்கள் வேல்கண்ணன்


நன்றி : கவிஞர் யாளி கிரிதரன்(கோவை)


1 comment:

இராய செல்லப்பா said...

வாசக மதிப்பீடுகள், படைப்பாளிக்கு ஊக்க மருந்து போல உற்சாகமளிப்பவை. நண்பர் யாளி கிரிதரன் பாராட்டுக்குரியவர்.