என்னுள் ஓடும் நதி


"என்னை நினைவு இருக்கிறதா(அ)ப்பா" முதல் சந்திப்பில் சார் என்று தான் விளித்து இருந்தேன்.இப்பவும் அப்படியாக சொல்ல நினைத்து..
"அப்பா" இயல்பாக வந்து ஒட்டிக் கொண்டது. 
இடம் : ஞாநியின் கேணி நிகழ்வு - வண்ண நிலவன் சந்திப்பு.
'மன்னிக்கணும்.. நினைவு இல்லையே தம்பி'
'ஐயோ.. பரவாயில்லைப்பா.. நான் என் நண்பர் முத்து மூலமாக உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன். சரியாக 15 வருடத்திற்கு முன்பு இருக்கும்"
'ஆங் .. தண்டராம்பட்டு முத்து தானே.. எப்படி இருக்கிறார்? தி.ஜாவின் நளபாகம்- கதை சொன்னாய் தானே?"
'ம்ம்..ஆமாப்பா .. நல்லா இருக்கிங்களா?'
"நல்லா இருக்கேன். சட்ன்னு அடையளம் தெரியலை"
நிகழ்வு தொடங்கி விட்டதால் எங்களின் பேச்சை நிறுத்திக் கொண்டோம்.

முதல் சந்திப்பு :

பள்ளிப் பருவத்தில் எனக்குள் ஒரே ஆசை(அப்போ அதை "லட்சியம்" என்று பெயரிட்டு கொண்டேன்). ஏனோ தானோ என்று 10ம் வகுப்பு வரை தேர்ச்சி(!) பெற்றேன். பிறகு அந்த ஏவும் தாவும் வரவே இல்லை. கேட்கவா வேணும் இருக்கிற ஒரு லட்சியமும் வெறியானது. திருவண்ணாமலை ஆடியோ சென்டரில் அறிமுகமான நண்பர் முத்து மூலமாக பாலு மகேந்திராவை பார்க்க கிளம்பிவிட்டேன். பேருந்து ஏறும் போதே இரண்டு கைகளையும் "L" இப்படி எதிர் எதிராக வைத்து கொண்டே ஏறியதாக நினைவு.

அவருடன் பேசுவது போல், நிற்பது போல், அவர் தூரமாய் எதையோ காண்பித்துக் கொண்டு இருக்க நான் குனிந்து பார்ப்பது போல், பிறகு நான் காண்பிக்க அவர் பார்ப்பது போல்,நானே தனியாக கேமரா பக்கத்தில் தலை சாய்த்து நிற்பது போல்("அட, பாருடா") போன்ற பல கருப்பு வெள்ளை காட்சிகள் உள்ளே ஓடிக் கொண்டே இருந்தது. சென்னை வந்த இரண்டு நாட்களில் பாலு அப்பாவை சந்தித்தேன்.

நண்பர் முத்து : "வணக்கம் சார். இவரு என் friend. சினி fieldல interestஆ இருக்கிற ஆளு.. உங்க கிட்ட உதவி இயக்குனர சேரணும்ன்னு சொன்னாரு.. அதன் கூட்டி வந்தேன்."

பா.மகேந்திரா : ம் .. (என்னை ஏறிட்டு பார்க்கிறார். நான் வணக்கம் சொல்லுகிறேன்) .. என்ன படிச்சு இருக்கிங்க?(சொன்னேன்).. ம்ம்.. பிடிச்ச எழுத்தாளர் யார்?(பாலகுமாரன் என்று சொல்ல நினைத்து தி.ஜானகிராமன் என்று சொன்னேன்.. ஒரு .. ஒரு சீனியாரிட்டி.ஒரு "கெத்" வேணும்ல)
ம்ம் .. என்ன கதை பிடிக்கும் .. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதையை ஒண்ணு சொல்லுங்க("நளபாகம்"இது நான்) ..குட் .. சொல்லுங்க .. (அதான் சொல்லிட்டேனே ..மறுபடியும் "நளபாகம்" என்று சொல்லிவிட்டு திரு திரு வென முழித்தேன்) .. அதாம்ப்பா அந்த கதையை எனக்கு சொல்லு.."

நான் சொல்ல ஆரம்பித்தேன். சரியாக 1 நிமிடம் கூட கடந்து இருக்காது. மறுபடியும் ஆரம்பித்தேன். 30 நொடிகள் கூட கடந்து இருக்காது.. மறுபடியும்..மறுபடியும்.. மறுபடியும்.. ஆரம்பித்து தோற்றேன். இத்தனைக்கும் அந்த கதையை இரண்டு முறை வாசித்து இருக்கிறேன்.
நாக்கு ஒட்டிக் கொண்டது. தொண்டை வறண்டது. முழி பிதுங்கினேன்.

நிதானமாக, இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.  "உட்காருங்க .. தண்ணீர் குடிங்க" என்றார். தண்ணீரை முழுங்கினேன்.

ஆங்கிலமும் தமிழும் கலந்து இருபது நிமிடத்திற்கு மேல் பேசினார். அதன் உள்ளடக்கம் :
"ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது.. நிறைய வாசிக்கணும். வாசித்ததை சொல்லி, எழுதிப் பார்க்கணும். உலகம் முழுக்க படங்களும் படைப்புகளும் வருகிறது. தேடித் தேடி படிக்கணும். பார்க்கணும். அது மட்டும் போதாது. அதை அலசி ஆராய்ந்து, கேள்வி கேட்கனும். அது கடுமையான விமர்சனமாக மாறினாலும் தப்பில்லை. ஆனாலும் பார்க்கறதையும் படிக்கிறதையும் விடவே கூடாது. நிறைய படி .. உனக்கு பிடிச்சதை எழுதிப் பாரு. உன் போன்ற இளைஞர்கள் இங்கே வேணும்.உனக்கு நான் டைம் தாரேன். இந்த கதையை மட்டும் அல்ல உனக்கு பிடிச்ச கதையை எதுனாலும் ஸ்கிரிப்ட்டா எழுதிட்டு வா. நல்ல இருந்த படம் பண்ணலாம்" அவ்வளவு தான்.  பறந்தேன் பறந்தேன் பறந்தேன். 

வாசித்தேன். வாசித்தேன். வாசித்தேன்.
எழுதினேன்.எழுதினேன்.எழுதினேன்.
வாசித்து எழுதினேன். எழுதி வாசித்தேன்.
எழுதுவதில் நிறையவில்லை ஆகையால் வாசிப்பதை மட்டும் தொடர்ந்தேன்.
வாசிக்க வாசிக்க நான் பலவாறு மாறிப்போனேன். 



இரண்டாம் சந்திப்பு:

சென்னையில் ஒரு மொட்டை மாடி சந்திப்பு-பாலு மகேந்திராவுடன் நேர் காணல் ஏற்பாடாகி இருந்தது.(கிழக்கு பதிப்பகம் என்று நினைக்கிறேன்).
முன் வரிசையில் அமர்ந்து இருந்தேன். மறுபடியும் என்னை நினைவுப்படுத்தலாம் என்று அருகில் செல்ல 'நல்லா இருக்கியா' என்றார்.
அந்த நிகழ்வில் யாரோ ஒருவர் எதுவோ கேட்கப் போக மிகுந்த கோபப்பட தொடங்கி விட்டார். அதனுடன் அந்த நிகழ்வு முடிந்து விட்டது.

நெற்றி சுருக்கங்கள்:

சில மாதங்கள் கழித்து வேறு ஒரு நிகழ்வில் சந்தித்தேன். நலம் விசாரிப்புக்கு பிறகு அந்த நிகழ்வு பற்றி அவரே நினைவு கூர்ந்தார். "அப்படி நான் பேசி இருக்கக் கூடாது. தவறு என் மீது தான்." என்று வருத்தப்பட்டார். அவரின் நெற்றி சுருக்கங்கள் அதிகம் காணப்பட்டன.
"சரி, அன்றே கேட்கனும்ன்னு இருந்தேன். என்ன செய்கிறாய் நீ."
சொன்னேன்.
அந்த சமயத்தில் எனக்கு தொகுப்பு எல்லாம் வந்து இருக்கவில்லை. "மொழியின் சிறந்த வடிவம் கவிதை என்பது உனக்கு தெரிஞ்சு இருக்கும். அதனுடைய பவர் அப்ப எப்படி இருக்கணும்?. மேஜர் POET ன்னு ஏன் பாரதியை மட்டும் சொல்றோம். காரணம் என்ன? பின்னாடி ஏன் அப்படி ஒருத்தரால ஆக முடியலை. கவனி . யோசி. சரியா?தொடர்ந்து எழுது" சில மணி நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தது அன்று தான்.

முதிர்ந்த கைகள்:

பிறகு சிற்சில நிகழ்வில் முகமன் சொல்லியோ நலம் விசாரித்தோ புன்னகை செய்தோ விலகிவிடுவேன்.

நீண்ட நாள் பின்பு பனுவல் நிகழ்வில் சந்தித்தேன். மெதுவாக மாடிப்படி ஏறிக் கொண்டு இருந்தார். முன்பு புகைத்த காட்சி ஏனோ வந்து போனது. அருகில் சென்றேன். மூச்சிரைத்து. இன்னும் இரண்டு படிக்கட்டுகள் இருக்க என் கைகளை பற்றிக் கொண்டார்.
அவரின் முதிர்ந்த கைகள். என் உடலெங்கும் ஏதோ பிசைந்தது. காரணம் தெரியவில்லை என் கண்ணில் ஈரம்.
"தலைமுறைகள்" பட வேலைகள் தொடங்கிய சமயம் என்று நினைக்கிறேன்.
பட வேலை எப்படிப்பா போய்கிட்டு இருக்கு.
“ம்.. வந்தப் பிறகு பார்த்துட்டு பேசு”

பிடித்த நிறம்:

என் தொகுப்பின் அட்டைப்படம் முதற் கொண்டு தோழர் ஷைலஜா அவர்கள் செய்து முடித்து இருந்தார்கள்.
இறுதியில் இரண்டு அட்டைப்படத்தை தேர்வு செய்து வைத்து இருந்தேன். நிறம் குறித்து சரியான முடிவிற்கு வரவில்லை.
தோழர் ஷைலஜா 'கண்ணன், பாலு மகேந்திராவிற்கு பிடிச்ச கலர் இது' என்றார். முதிர்ந்த கைகள் என்னை பற்றிக் கொண்டது போல் இருந்தது. முழு மனதுடன் தேர்வு செய்தேன்.



இதே ஓராண்டுக்கு முன்பு அந்த செய்தி என்னை அடைந்த போது.. நேரில் செல்வதற்கும் அழுவதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் மனமில்லை.

இவருக்கும் எனக்குமான இப்படியான சந்திப்புகளை உறவுகளை பற்றி அறியாத, எழுத்தாளர் இளஞ்சேரல் அவர்கள் என் தொகுப்பு குறித்த பார்வையை பதிவு செய்து இருந்தார். தலைப்பு :
"பாலு மகேந்திராவும் வேல் கண்ணனும்" அன்று அழ தோன்றியது. அழுதேன்.



#அழியாதநினைவுகளுடன்..


(பாலு மகேந்திரா-வின் ஓராண்டு நினைவு நாள்(13.02.2015) அன்று முக நூலில் பகிர்ந்தது)

No comments: