காற்றில் படரும் காக்கை சிறகின் சாம்பல்

-ஆழி வீரமணியின் 'ஆழ்கடலுள் இறங்கும் மண் குதிரைகவிதை நூல் குறித்த என் பார்வை.
(மார்ச் 2015 கணையாழி-யில் வெளியானது)


சென்னை காக்கைகள் ஊர்(நகரமல்லாத)காக்கைகளிடமிருந்து வித்தியாசப்பட்டவை. ஊர் காக்கைகள் முற்றத்தில் ஏதேனும் சிதறிய உணவு பண்டங்கள் கிடந்தால் தயங்கி தத்தித் தத்தி கொத்தி செல்லும்.  கைக்குழந்தை அதன் பிஞ்சுகையை சற்று வேகமாக உதறினாலே போதும் காத தூரம் பறந்து சென்று விடும். அதற்கென வைக்கப்படும் படையலை கூட நாம் 'எட்டநின்றால் தான்  வாயை வைக்கும். சென்னை  காக்கைகள் இப்படி அல்ல. அசந்த நேரத்தில் உணவு பொருள் நிலவறையில் இருந்தால்  கூட லவட்டி செல்வதில் கில்லாடி.  வேண்டுமானால் துரத்தி பாருங்கள்பறப்பது போன்ற பாவனை கூட செய்யாது. இந்த குணத்தை நகரத்தின் நெருக்கடியில் இருந்தே கற்றுக் கொண்டிருக்கும். வேறு ஒன்றையும் கவனிக்கலாம். உணவுப் பண்டங்கள் கிடைக்கும் பொழுது கரைந்தழைத்து பங்கிட்டு உண்ணும் பழக்கம் எல்லாம் இல்லை. இதனை கண்டிப்பாக நகரத்து மனிதனிடம் இருந்தே
கற்றிருக்க வேண்டும்.  உணவுவேளையில் சந்திக்க நேரிட்டால் கூட 'சாப்பிடீங்களா?' என்பதே வழக்கம். மீறி 'சாப்பிடலாமா?' வந்தால் அவர்கள் 'Fresh Piece' என்று தெரிந்து கொள்ளலாம்காக்கைகள் பற்றிய இப்படியான தொடர்  சிந்தனை வருவதற்கு ஆழி வீரமணியின் 'ஆழ் கடலுள் இறங்கும் மண் குதிரைகவிதை தொகுப்பே காரணம்.  எனக்கு தெரிந்த வரையில் கவிஞர் ஆழி வீரமணி சாதியத்திற்கு எதிர் குறியீடாக அதுவும் தொன்று தொட்டு வரும் வழக்கசொல்லாடல் அடிப்படையிலேயே  முதன் முதலாக காக்கையை   பயன்படுத்தி உள்ளார்.

‘பித்ருக்கள்’ என்ற கவிதையில் 

சேரிமனிதர்கள்
புழங்கமுடியாத 
ஊர்க்குளத்தில்
செத்தமாட்டுக்குடலை
மிதக்கச்செய்யும்
காக்கைகள் 
நிச்சயம்
என் பித்ருக்களே

இதற்காகவே அடுத்த முறை காக்கைகளுக்கு 'பிடிச் சோறுஅதிகம் வைக்கவேண்டும்.தொகுப்பில் இதே போல் 'காக்கை எச்சிலையும்ஆண்டைகளுக்கு எதிராகவும், நிலம்,விதை,  குளியல்,தன் கூட்டை காத்தல் சார்ந்து சரியான அவதானிப்புடன் சொல்லிச் செல்கிறார் வீரமணி. காற்றில் படரும் காக்கை சிறகின் சாம்பல் நிறம் நம் மீதும் படர்கிறது

கேட்கப்படும் பலதரப்பட்ட கேள்விகளுக்குள்  'ன் சாதி என்ன?' என்ற கேள்வி ஒன்றாகாது. இதே போல் காதலுக்கென இறப்பதும் ஒன்று போல் இல்லைஇதனை தொகுப்பில் பத்தே பத்து பக்க (15-25) வித்தியாசத்தில் சிலம்பரசனின் காதலுக்கும் தவறவிட்ட மூன்றாவது ரயிலுக்கும் தெரிந்து கொள்ளலாம். 
இந்த பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதே நோக்கமாக கொண்டிருக்கும் தலைக்கட்டு’ தான் இங்கே எத்தனை? வாய்க்காலில் மிதந்தலையும் மதுப் போத்தலுக்கும் பாலத்தின் கீழ் நசுங்கி கிடக்கும் மதுப் போத்தலுக்கும் எவ்வளவு வித்தியாசம்?.  
சாதீய அரசியல் இன்னும் எத்தனை இளவரசனை காவு கொள்ள காத்திருக்குதோ..

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த வேலையில்லா பட்டதாரிகளை பற்றிய ஒரு உளவியல் ஆய்வில் கலைக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையவில்லை என்றால் பெரிதாக ஒன்றும் செய்யமாட்டார்கள். அனேகமாக கலை சார்ந்த பல வடிவங்களில் அது வெளிப்படும். அப்படியான வெளிப்பாடு அவர்களுக்கு நன்மையோ இல்லையோ கலைகளுக்கு நல்ல மாற்றத்தை தரும்.” என்பதே. இது பட்டதாரிகளுக்கு  பொருந்தி போகிறதா என்று தெரியவில்லை என் போன்ற கல்லூரியை வெறித்துக்கொண்டே கடந்து செல்பவர்களுக்கு பொருந்திப் போகிறது
வஞ்சம் தீர்ப்பேன்- என்ற கவிதை இதையே சொல்லுகிறது.
கைவிட்ட காதலிக்கும்
கருணையின்றி எனை நிராகரித்த பெருந்தகைகளுக்கும்
நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்
உங்களை பல தருணங்களில்
குற்றவுணர்வு கிணற்றில் தள்ளி
வஞ்சம் தீர கைகொட்டி சிரித்திருப்பேன்
என் கவிதைகளால்.

இதில் கடைசி வரியே என் போன்றவர்களால் முயற்சி செய்யமுடிகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

பல கவிதைகள் மெல்லிய அங்கதத்துடனும் வட்டார சொல்லாடலுடனும் இயல்பாக வெளிப்படுகிறது. இது தமிழ்க் கவிதையில் புதிது அல்ல எனினும் வீரமணிக்கு சரியாக கைக்கூடியிருக்கிறதுஇதனை அவர் தம் வாழ்வியல் முறையில் மற்றும் வட்டாரத்தில் இருந்தே இயல்பாக எடுத்தாள்கிறார். காக்கை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.  இதனை தக்க வைத்தல் நலம்.  முதல் தொகுப்பை பொறுத்தவரை இடைவெளிஎன்று ஒன்று இருந்தால் அடுத்தடுத்த தொகுப்பில் நிரப்பவோ முன் நகர்ந்து செல்லவோ முடியும். அப்படியான வெளி’ தொகுப்பில் இருக்கத்தான் செய்கிறது. தொகுப்பாக தொகுத்த/வெளிவந்த பிறகே பலருக்கும் புலப்படுகிறது நான் உட்பட. ஆழி வீரமணிக்கும் அது தெளிந்திருக்கும்.

விண்ணில் பறப்பது கனவுகளில் மட்டுமேயதார்த்த உலகம் கனரக வாகன நகரங்களுக்கு இடையில் தினக்கூலியாய் சைக்கிள் மிதிக்கவைக்கிறது என்பதை சொல்லும் சந்திரகாந்தாவும் கேப்டன் வியோனும்சரி 'பூக்களால் மலர்ந்துன் வீடு', 'செம்பருத்தியில் உதிரும் சிறகு','பெரியார் நகரின் கண்ணீர்த்துளி ','காணாமல் போன மரங்கொத்திகள்போன்ற கவிதைகளிலும் நிஜ உலகத்தையே படம் பிடித்து காட்டுகிறார். தொகுப்பு முழுக்கவே இது போன்ற யதார்த்த சாட்டையை சுழற்றி கொண்டே வருகிறார். ஆங்காங்கே வீசும் நறுமணத்தில்
கொஞ்சமாய் நம்மை மறந்து லயித்தாலும் இந்த சாட்டையை உடனே சுழற்றி யதார்த்த உலகில் உலாவவிடுவதில் கவிஞர் குறியாக இருக்கிறார். இது தொகுப்பின் பலம் என்று நான் கருதுகிறேன்.

ஒடுக்கப்பட்டவர்களின் வலி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்களுக்கு  மட்டுமே தெரியும் என்றொரு கூற்று உண்டு.  ஆம். பசித்தவனுக்கே தெரியும் பசியின் வலிமை. இங்கே 'பசிஎன்பது அடுத்தவேளை உணவை-கொஞ்சம் கூடுதலாக- தயாரித்து வைத்துக்கொண்டு 'விரதம்'  இருப்பதல்ல. கடைசியாக உண்ட உணவு தான் கடைசியோ என்கிற நினைவுடன் பசித்திருப்பது. இதனை நான் முழுமையாக ஏற்றுக் கொள்பவன். 
ஈழத்தில் நடந்த கடக்கவியலா சோகத்தை சொல்லும் 'எங்கும் அமைதிஎன்ற கவிதையில் இந்த வரிகள் வருகிறது. பெற்றோர் முன்பே/ ஆடை மாற்ற பழகிவிட்டார்கள்/இளம்பெண்கள் (பக்கம் 37)  ஒரு அரசியல் துரோகத்தின் விளைவாக நம் கண் முன்னே பதற பதற நடத்தப்பட்ட கொடுமையின் விளைவு இது. இதை கவிஞர் உணர்ந்து எழுதி இருக்கிறர் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் முழுமையாக அந்த வலியை புரிந்து  நமக்குள்ளும் கடத்துகிறார். 
இதே போல ஒடுக்கப்பட சமூகத்தின் கனல் தெறிக்கும் கோபத்தை  தொகுப்பு முழுக்க பரவி  இருப்பதை என்னால் புரிந்து கொள்ள(மட்டும்) முடிகிறது.  அந்த புரிதலுடனே ஆழ்கடலுள் இறங்கும் மண் குதிரை தொகுப்பை இந்த கட்டுரை மூலம் நான் அணுகி இருக்கிறேன். குறிப்பாக கீழ்வரும் கவிதையில் பல தலைமுறை தாண்டிய  கோபம் 'கனல்தெறிப்பதை புரிந்த கொள்ள முடியும்.

எதிரே வரும்போதெல்லாம் 
ஒதுங்கிப்போகச்சொன்ன
ஊர் வெட்டியானிடம் 
செமத்த அடி வாங்குகிறார் 
கட்டையில் எரியும் 
பெரிய குடும்பத்து ஆண்டை.

இறுதியாக 
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் கவிதை வழியாக ஒலிக்கும் போது  கொண்டாடுவதை விட கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். அதுவும் காலம் தாழ்த்தாமல். அப்படியான தொகுப்பு 'ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை'

வேல் கண்ணன் 

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை-கவிதை தொகுப்பு
ஆசிரியர் : ஆழி. வீரமணி
வெளியீடு : செம்மண் பதிப்பகம்
#86, புது மனைசாரி தெரு
முதனை அஞ்சல்
விருத்தாசலம் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
அலை பேசி : 98841 95134
விலை :ரூ.60/

நன்றி : கணையாழி மார்ச் 2015 

No comments: