அதீதத்தின் மேலுறைந்த வெண்மையின் சுவடு


எரிதணல் கற்றைகளை உமிழும் சூன்யம்
உன் மெல்லிசை 
ஒரு தழுவல் 
விரல் தீண்டல் 
எதுவுமற்றுக் கிடக்கிறேன்
உன் கூர்விழியின் சுடரொளியை
காணக்கிடைக்கும்போது
சேமித்துக் கொள்ள முடிவதில்லை
விரல் கோர்க்கையில் கிடைக்கும் இதம் போலவே


கணப்பொழுதில் கண்டடைந்துவிட்டேன் 
உன்னை
முதுவேனிற் காலத்தில் தாயென அள்ளி
கார்காலத்தை மலையெனக் கடந்து
பின்வந்த காலத்தில் இலையென கூம்பி உதிர்த்து
கடும்பனி  காலத்தில் தோள் சாய்ந்து இறுக்கி
இளவேனிற்க்காலம் வரை தோழியென உடன் வருகிறாய்
மிகக் கொடிய சுயநலமியான நானோ
நிர்வாணத்தை தவிர்த்து
வேஷத்தை தொடர்கிறேன்


சீரற்ற உன் மூச்சில் அறிந்தேன்
வாழ்நாளில் நான் செய்த பிழை

அந்தி கதிரவனாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்

மடி சாய்ந்தக் கணமே கேட்டேன்
எனக்கான கல்லறை செய்யப்படும் ஓசை
வெற்றாய் நிலத்தை ஆக்கிரமிக்கும்
எதையுமே வெறுக்கிறேன்
இதமான சூட்டுடன் பாயும் குருதியை
சற்று நேரத்தில்
உறிஞ்சிவிடுவாய்
எஞ்சிய உள்ளீடற்ற எலும்புகளை
இதோ இந்த ஆழிப்பேரலை
கொண்டுச் செல்லும்நன்றி : கணையாழி
ஓவியம் : Man Ray
நன்றி : ஆறுமுகம் முருகேசன், நரன், ந.பெரியசாமி 

2 comments:

NRSNRS said...

Madi sayntha thariname kettem ...,..true lines

NRSNRS said...

Madi sayntha thariname kettem ...,..true lines