கருமேகங்கள் சூழும் மணற் துகள்
மென்குளிர் படர
கருமேக போர்வைக்குள்
நுழையத் தொடங்கியது அந்திப்பொழுது
வானத்தின் வெளிர்கீற்றும் தூறலும்
நம் இறுதிச் சந்திப்பை நினைவுப்படுத்தின.

அச்சந்திப்பில்
உனது புனிதப் பாடலால் தான்
என் பசி தாகம் தீர்ந்தது
அதனின் சொற்களால்
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டேன்.
அங்கிருந்தே என் பயணம் தொடங்கியது

பயணம் முடியும் தருணத்தில்
உன்னிடமிருந்து ஒளித்  துளிகள்
வந்தடைந்தன

கற்களும் முட்களும் தந்த வலிகள்
நொடி கணத்தில் நினைவிற்கு வந்த போதும்
ஆற்றுமணற் துகளென நெகிழ்வாய்
அள்ளிச் சேர்த்துக்கொண்டேன்
தாகமும் பசியும் எடுக்க
மணற் துகளை உண்ணத் தொடங்குகிறேன்

தேவலாயத்திலிருந்து புனிதப் பாடல்
கேட்கிறது

No comments: