வழிகளை மாற்றிக்கொள்பவன்

மின் கம்பத்தின் கீழ் நிற்கும் அந்த இளைஞன்
மிக நளினமாக உடையணிந்திருந்தான்
சில நிமிடங்கள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என்னை மட்டுமல்ல, எதையுமே கவனித்ததாக தெரியவில்லை
வலுக்கட்டாயமாக பார்வையை பிடுங்கிக் கொண்டு 
அவனை கடந்து தெருமூலையில் இருக்கும் 
தேநீர் விடுதிக்குச் சென்றேன்
சில நிமிடங்களில் அவன் நின்ற திசையிலிருந்து வந்த ஒருவர்
'அந்தா.. அங்க ஒருத்தன் பஸ்ஸுக்கு குறுக்கால குதிச்சுட்டான்ப்பா
ஸ்பாட் அவுட்.. ச்ச்.. சின்ன வயசுபய.'
அவனாக இருக்காது
என்றாலும், திரும்பி அவ்வழி செல்லவில்லை

தினமும் இதே நேரத்தில் இவ்வழி கடப்பேன்
இன்று
அந்த மாடிவீட்டு பெண் என்னைப் பார்க்கிறாள்
என்பதில் உற்சாகமானேன்
நேற்று வரை நான் மட்டுமே அவளைப் பார்த்திருந்தேன்
மாலை திரும்பும் போது அந்த வீட்டில் கூட்டமாக இருந்தது
விசாரித்ததில் பெண்னொருத்தி தூக்கிட்டு கொண்டாளாம்
அவளாக இருக்காது என்றாலும், 
அன்றிலிருந்து அவ்வழி செல்லவில்லை
எல்லா வழிகளிலும் துயரம் நடந்து கொண்டேயிருக்கிறது.
நானும் துயரங்களை தூக்கி சுமப்பவனாகவே திரிகிறேன்

(கவிதைக்காரன் இளங்கோவிற்கு..)

நன்றி : மலைகள்.காம்
நிழற்படம் : கவிஞர் அய்யப்ப மாதவன்