நோய்மையின் சாயங்கள்


நீ நானென்று இல்லாமல்
நாமாகியிருந்த இந்த அறை
நீ சென்றவுடன் எங்கிருந்து வருகிறது
நங்கூரம் பாய்ச்சிய பெருஞ்சுமை
நொடிக்கும் நொடிக்குமான தூரம்
எவ்வளவு தெரியுமா
நோய்மையின் கூர்மை உணர்ந்து இருக்கிறாயா

இந்த சுவரின் பின்னே
சிலர் ‘கோ-கோ’ விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்
சிலர் ‘சடுகுடு’ விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்
‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ குழைந்து கேட்கிறது
ஒரு சிறுமி 1.. 2.. 3.. சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
விளையாட்டைப் பார்த்தலைவிடக் கேட்டல் வதம்
பின்மாலையில் வண்டுகளின் ரீங்காரம் செவிவழி புகுந்து
செதில் செதிலாய்ப் பிய்த்துத் தின்கிறது
தூரமாய் கேட்கும் துயர இசைக்கு
உன் சாயல்

இந்த கணப்பொழுதில்
நீரூற்றுப் பெருகி அறையெங்கும்
வியாபித்துக் களித்துக் கூத்தாடி
நீங்காதலைகிறது

(நகுலனுக்கு..)

நன்றி : மலைகள்.காம்

No comments: