வண்ண நிலவின் மகரந்தம்



அந்த மலைக்கோயில்
படிக்கட்டு இடறியச் சாக்கில் 
விரல்களைப்  பற்றிக் கொண்டாய்
உன்னிலிருந்து 
சின்னச் சின்னப் பூக்கள் உதிர்ந்தன

கைகள் நிரம்பக் கண்ணாடி வளையல்
சிகப்பு நிற நகச்சாயம்
சின்னூண்டு நெற்றிப்பொட்டு
திருவிழா கொண்டாடும் சிறுமியை போல் 
வாங்கிக் கொண்டாய்
மழைத்த வீதிகள் நேரிசை இயம்பின

வெகுதூரம் நடந்தே கடந்தோம்
நின்ற இடத்தில்
நின்றிருந்த  மரத்தில் சாய்த்து 
சாய்ந்து கொண்டாய்
வண்ண வண்ணமாய் நிலவுகள் சூழக் கிடந்தோம்

பகிர்ந்துண்ண இவ்விரவு
மிகச்சன்னமான நிலவொளி
அவ்வொளி கசியும் இவ்வறை
பெரிதினும் பெரிதான இவ்வுலகம்
தளும்பித் தளும்பி வழிந்தோடும்
மகரந்தமாகிறோம்

-வேல் கண்ணன்
நன்றி : அழகிய சிங்கர் மறறும் நவீன விருட்சம் 100வது இதழ்
ஓவியம் : Orestes Gaulhiac(இணையத்தில் எடுக்கப்பட்டது)

No comments: