பசியாறும் நீலி


விடைபெறும் போது பகிர்ந்த இறுதி பானத்தில்
நீ கிள்ளிப் போட்ட பிண்டயிலை
பின் நான் பருகிய எல்லா பானங்களிலும் மிதக்க தொடங்கியது
அதனின் உள்நாக்கு கசப்பு
மகிழ்வு பானத்தையும்
கொண்டாடும் துயரப்பானமாக மாற்றியது
சிதறி உடையும் நட்சத்திரங்களில் கொப்பளிக்கும்
குருதியில் மிதக்கிறது அவ்விலை
ஏராளமாய் அருந்தினேன்
எல்லாவற்றிலும் மிதந்தபடியேயிருந்தது பிண்டயிலை
கனவுகளிலிருந்து மீண்டெழ
பருகும் பானம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை
அகாலமான கனவொன்றில்
காமம் எழுப்பும் முலை பிளவில் அவ்விலை
அதன் மேல்
யாரோ ஒருவர் படிந்திருப்பது போன்ற தோற்றம்
மிகவும் அச்சம் கொள்ளச் செய்கிறது
துயர காயங்களில் வடியும் உள்நாக்கு கசப்பின்
தீராத மகத்துவத்தை
அள்ளிக் குடித்துப் பசியாறுகிறாள் நீலி
-----------------------------------------------------

(டிசம்பர் 2016 கணையாழி இதழில் வெளியான கவிதை)
நன்றி : கணையாழி