என் இனிய பேரிளம் பெண்ணே



பூவாளி தூறலில் நாம் நடந்த
மலையடிவாரத்து மண்ணடி
மெழுகிய பளபளப்பாய் மினுக்குகிறது
மரமல்லி பூக்கள் பன்னீரை கவிழ்த்தபடியே
காற்றில் அசைந்தாடுகின்றன
பட்டுப் பாவாடை சிறுமி கிளை அசைக்கும் 
கொலுசொலியுடன்
கால சந்தி மணியோசையும் கேட்கிறது
பனிப்பூக்கள் மேலும் உதிர்கின்றன

சோம்பிக் கிடந்த உச்சிக் காலத்தில் 
உன்  கீழுதட்டின் செம்மை
நினைவிற்கு வந்துவிடுகிறது 
வெகுண்டு எழும் அரவம்
விரல்களில் விரவும் நாதங்களால் 
நிரவச் சொல்லுகிறது


உன்னைக் காணுற்ற பொழுதெல்லாம் 
நினைவடுக்குகளிலிருந்து
ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது
'ஆயர்பாடி மாளிகை'
அதில் தாய் மடிக்கன்று உறங்காமல் 
மடிமுட்டிக் குடிப்பதாய்த் தோன்றுகிறது
இதழ் உரசும் தேகச்சூட்டில் 
பாடலின் வாஞ்சை நெக்குருகிப்போகிறது
விடைபெற்ற பிறகும் கேட்கும் 
அர்த்த சாம இன்னொலிகளின் 
நித்தியத்தன்மை
மகிழ்வின் சாயலாகிறது

நன்றி : அழகிய சிங்கர் மறறும் நவீன விருட்சம் 100வது இதழ்
ஓவியம் : Vishalmisra (இணையத்தில் எடுக்கப்பட்டது)

No comments: