புதிய களத்தில் நடனமிடும் நவ மோகினி

(எழுத்தாளர் வ.கீராவின் 'மோகினி' என்கிற சிறுகதை தொகுப்பு குறித்து..)

அம்புலி மாமாவில் முதன் முதலில் கதை படிக்க தொடங்கினேன். அதிலிருந்து ஒரு பித்தாய் ஒரு பக்க கதை, குறுங்கதை, நெடுங்கதை, நீண்ட கதை, நிமிட கதை, நொடி கதை என்று பல வடிவான கதைகளை படித்துக் கொண்டே இருக்கின்றேன். பல பக்கங்கள் நாவல் தரும் அனுபவத்தை திறப்பை ஒரு சிறுகதை தந்து விட முடிகிறது என்று நான் நம்புகிறேன். உண்மையில் நாவல் படிப்பதில் ஒரு சோம்பல்தனம் வந்துவிடுகிறது. தற்பொழுது சிறுகதை குறைந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமீபத்தில் மறைந்த க.சீ.சிவகுமார், அசோகமித்திரன் சிறுகதையில் தான் இயங்கி வந்தார்கள். தற்கால இணைய காலத்தில் கணிசமான அளவு கதை எழுதபவர்களும் கூடி தான் இருக்கிறார்கள். மேலும் என் போன்ற வாசக மனநிலையில் இருந்து சொல்வது என்றால் சிறுகதை’கள்’ ப(கு)டித்து பழகியவர்கள் அதனை வீர்யத்தை எந்த காலத்திலும் குறைந்தது கொள்ள போவதில்லை. அப்படி தேடித் தேடி படிப்பவர்களுக்கு வ.கீராவின் மோகினி ஒரு புதிய அனுபவத்தை தரும். 

நாம் இதுநாள் வரையிலும் அறிந்த அல்லது பொதுவாக பேசிக் கொள்ளும் லாரி பற்றி, அதை சார்ந்தவர்களின் வாழ்வு முறை பற்றிய அதிருப்தியான பார்வையை புரட்டிப் போட்டு, இணக்கமான கோணத்தில் அணுக வைக்கிறது 'மோகினி'. “லாரி டிரைவர் ராஜாகண்ணு” திரைப்படம், பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” காட்டிய பொய் பிம்பங்களை இந்த தொகுப்பு, லாரியின் மொழியேலேயே சொல்வது என்றால்  "நசுக்கி" போடுகிறது. 

இப்படியான கதைகளுக்கு தமிழில் ஒரு மரபு இருந்தாலும் தொகுப்பில் உள்ள கதைகளை அந்த மாதிரியான இலக்கிய வகைமைக்குள் கொண்டு வருவதற்கு சிலர் விருப்பபட மாட்டார்கள். ஏனென்றால், வடிவம் மட்டுமே சிறுகதை என்ற வடிவில் இருந்தாலும் உள்ளடக்கம், மொழி, தொடங்குவது முடிப்பது போன்ற எவ்வித வகை மாதிரியகவும் இந்த கதைகளை சேர்த்துக் கொள்ள முடியாது. ஒன்றை அழுத்தமாக சொல்லலாம், வ.கீரா தொகுப்பில் சில அனுமானங்களை சேர்த்து இருக்கிறாரே தவிர எந்த கதையும் புனைவு அல்ல என்பதை வாசிப்பில் அறிந்துக் கொள்ள முடியும். தொகுப்பில் பல கதைகள் லாரி சார்ந்த வாழ்வு முறையை அதன் சுணக்கத்துடன் அதே சமயத்தில் சுவாரசியம் குன்றாமல் நேரடி சம்பவங்கள், கதாபாத்திரங்கள் வழியே நம்முடன் பகிர்ந்து இருக்கிறார் வ.கீரா.   

டிஜிட்டல் இந்தியாவில் நீண்ட நெடிய முடிவுறாத சாலைகளை போலவே தொகுப்பு முழுக்க லாரி டயர், தார்ப்பாய் போன்ற லாரி உதிரி வஸ்துக்களுடன் சாதியும் வருகிறது. சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் ஒன்றென கலந்து விட்ட சாதி இங்கேயும் இருக்கிறது என்பதுடன் எந்த மண்ணிலிருந்து எழுதினாலும் அந்த மண்ணின் வாசனையுடன் சாதியும் வரும் என்பதில் நாம் திண்ணமடைகிறோம். வ.கீரா மேலும் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக வைக்கிறார். சாதிய ஒடுக்க முறை ஒவ்வொரு சமூகத்திலும் யார் யாரால் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் எவ்வித பூடகமின்றி சொல்லி விடுகிறார்.. தொகுப்பில் லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவின் இடுப்பு விலா எலும்பில் விழும் உதையை(யாரால் அந்த உதை என்பது தனி சுவாரசியம்)விட அந்த வசை சொல் "எச்சப் பொறுக்கிக்கு சாதி ஒரு கேடு..". இந்த வாசவு எல்லோருக்குமானது எப்பொழுதுமானது என்பதாலேயே தொகுப்பில் இந்த கதை என்னளவில் முதன்மை பெறுகிறது. 

கதை சொல்லுபவர்களுக்கு சமகால அரசியல் பார்வை மிக முக்கியமானது. அந்த கதைகள் சொல்லப்படும் காலமும் களமும் புரிந்து கொள்வதற்கு இது ஒரு வகையில் தோதாக அமைந்தாலும் வாசகனை தலையாட்டும் பாணியில் இருந்து விலகி நிற்க வைக்கவும் சுயசிந்தனையுடன் புரிந்து கொள்வதற்கும், ஒரு வகையில் வாசகனை பெருமைபடுத்தும் விஷயமும் ஆகும். 

தொகுப்பு பல இடங்களில் அரசியல் நிகழ்வுகளை விமர்சனங்களை நேரடியாக வைக்கிறார் வ.கீரா. இதற்கு சரியான உதாரணம் "குறத்திக் கவுண்டனுர் கதை" இந்த கதையில் தெரியும் எள்ளல் தாண்டி சாதிய அடுக்கு முறையையும் அதன் எதிரான செயல்பாடுகளையும் அதன் விளைவுகளையும் தெரியப்படுத்துகிறார்.

திருவண்ணாமலை கோயிலில் மோகினி என்ற ஒரு சிற்பம் உண்டு. தரிசனம் முடித்து வருபவர்கள் அதனை பார்க்க மாட்டார்கள். கடவுளிடம் வாங்கிய வரங்களை இவள் பறித்துக் கொள்வாளாம். அதனால் அந்த பக்கமே திரும்ப மாட்டார்கள். 'மோகினியின் உருவங்கள்' கதையில் வரும் மோகினியும் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் வரங்களை அல்ல சாபங்களை. அத்துணை சாபங்களையும் ஒரே புணர்வில் அள்ளி முடிந்து கொண்டு  ஓடிச் செல்வதாகவும் தான் பாவவிமோசனம் அடைந்து விட்டதாகவும் டிரைவர் ராமசாமி நம்புகிறார். தொகுப்பில் மிக சிறப்பாய் வந்து இருக்கும் கதை இது. இப்படி ஒவ்வொரு பாவப்பட்ட ஜீவன்களுக்கும் வாரி அள்ளிக் கொள்ள ஒரு மோகினி இருக்கத்தான் செய்கின்றன போலும். மோகினி கிடைக்காதவர்கள் இங்கே 'பாவியாக, ஆவியாக' அலைகிறார்கள் என்பது வேறு கதை. 

இந்த தொகுப்பில் தனித்து நிற்பது தமிழு மற்றும் லெச்சுமி என்ற இருவேறு சூழலில் வாழ்ந்த பெண்களின் கதை. இரண்டு பெண்களுமே தான் வாழ்ந்த சமூக அமைப்பின் மூலமே சிதைக்கப்பட்டு பலி கொள்ளப்படுகிறார்கள். அதில் குறிப்பாக 'லெட்சுமி', சாதிய அடுக்குமுறை ஒருபக்கம் இருந்தாலும் சாதிக்குள்ளேயே இருக்கும் கட்டுப்பாடுகள் நம்பிக்கைகள் அடுக்குமுறைக்கு ஒரு போதும் குறைந்தது இல்லை குறிப்பாக பெண்களின் மீதான அடக்கு முறை சகிக்க முடியாது. தெய்வ வழிப்பாட்டு முறையும் அதனை சார்ந்த பொருளாதார செலவினங்களும் ஒரே சாதியில் இருக்கும் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை. இந்த விளைவாக வரும் தனி மனித உளவியல் சிக்கலும் மனித உறவுக்குள் பிரிவினையும். பெண் உடலுக்குள் நடக்கும் இயற்கை மாற்றமே அவளை காவு வாங்க வைக்கிறது என்பதை லெச்சுமி கதை சொல்லுகிறது. 

எல்லா காலத்திலும் தொன்ம தெய்வமான சின்ன செல்லியாயிலிருந்து லெட்சுமி வரைக்கும் காவு கொடுக்க வேண்டியிருக்கு. இப்படியான ஒரு தொன்ம தெய்வத்தின் முன் 'கார்த்திக்கு'(நிறமற்றவளின் கண்கள்') அந்த விபரீதம் நிகழ்த்தப்படுகிறது. இப்படியான விபரீதங்களுக்கு ஆண்டாண்டு காலமாய் அறியப்பட்ட பெருந்தெய்வத்திலிருந்து சிறுதெய்வங்கள் என்று சொல்லப்பட்ட எல்லா தெய்வங்களும் வெறும் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கிறன என்பதை நம்மை உணரவைக்கிறார் வ.கீரா. தமிழில் அதிகம் எழுதப்படாத 'திருநம்பி' பற்றிய கதை என்பது இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
    
தொன்ம தெய்வங்களை பற்றிய வேறு ஒரு கேள்வியும் நமக்குள் எழுகிறது. ஆண் தெய்வங்களுக்கு பின்னணி கதையாக வீரமும் விவேகமும் பின்புலமாகவே சொல்லப்படும் அதே சமயத்தில் அனேக பெண் தெய்வங்களுக்கு வலியும் தியாகமும் பின்புலமாக இருக்க கடவது ஏன் என்கிற கேள்வியை இந்த கதைகள் எழுப்புகின்றன.

தொகுப்பில் 11 கதைகள். அட்டைப்படம்(கோபு ராசுவேல்) ஈர்ப்பு தன்மையுடையதாக இருக்கிறது.  வ..கீராவுக்கு இது முதல் தொகுப்பு. ஒரு படைப்பாளின் முதல் படைப்பு அவனின் Innocent மைண்ட்-யை அப்படியே காண்பிக்கும் என்பார்கள். அந்த வகையில் 'சொல்லரிக்கப்படாத காதல் கதை'யையும், சில கதைகளில் கதை முடிந்த பின்பும் சில வரிகளை வலிய சேர்த்திருப்பது போன்றவற்றை தவிர்த்திருந்திருக்கலாம்(உதாரணம்: 'தமிழு"). மேலும் லாரி பற்றிய விவரணைகள் போல அது நடக்கும் களம் இன்னும் விரிவாக சொல்லி, லாரி டிரைவர்கள் சந்தையில் புழங்குவது வழியாக சாமான்ய மக்களுடான உறவை சொல்லியிருக்கலாம். மற்றும் அவ்வப்போது நடக்கும் லாரி நிறுத்த போராட்டத்தை பற்றிய சாதகமோ, பாதிப்போ அல்லது குறைந்த பட்சம் கருத்தோ கதைகளில் எந்த இடத்திலும் வரவில்லை. அதற்கான தளமிருந்தும் மேற்குறித்து இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 

 'கட்சி தமிழால் வளர்ந்து தமிழை அழித்தது','ஒரே தேசமாக இணைக்கும் கம்யூனிஸ்ட் கடமை' போன்ற காத்திரமான நேரடி விமர்சனங்களையும், 'குட்டி குட்டி இரத்தப் பூவா மூஞ்சியல பூத்திருக்கு', 'பொம்பளைன்னா பொம்பளை சாமிக்கும் ஆகாதடி','சவுக்கடி கொடுக்க நாலு சோத்துக்கு செத்த சண்டியருங்க' என்கிற வழக்காடு சொற்தொடரை வ.கீரா சரியான இடத்தில் பொருத்தி வைக்கிறார்.. மொத்தத்தில் இதுவரை புழங்கிறாத புதிய களத்தில் நடனமிடும் நவ மோகினி, வாசகனை எந்த விதத்திலும் ஏமாற்ற மாட்டாள்.

மோகினி(சிறுகதைகள்) 
ஆசிரியர்: வ.கீரா
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் : 104
விலை : 90
(ஜூலை '2017 கணையாழி இதழில் வெளியான என் கட்டுரை)
நன்றி : கணையாழி, யாவரும்.காம், வ.கீரா.


No comments: