ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு


இரவு உதிர்ந்து கொண்டிருந்தது.
நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த
இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்
நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.
அதில் எண் வரிசையைப் பதித்துக் கொண்டிருந்தார்
XXX  இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாட கட்டளையிட்டு இருந்தார்.
ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள் 
பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டு பாடத்தொடங்கி விட்டார்கள்.
நிலவற்ற பறவைகள் மறையத்தொடங்கின.
அவரால் ஒரு நாளும் முழு இரவை சேகரிக்க முடியவில்லை.

பகல் கரையத் தொடங்குகிறது.
செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்
குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
வெயிலை அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக் கொண்டிருந்தார் 
XXY   இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான நிலத்தை சுருட்டிக் கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
இலை உதிர்த்த மரங்கள் 
அணுக் கழிவால் கரையொதுங்கிய 
மீனின் கண்களாய் வெறித்துக் கொண்டிருந்தன.
அவரால் எந்நாளும் ஒரு பகலை சேகரிக்க முடியவில்லை.

புத்தனின் விரல் நுனி கதிரொளியால் மினுக்குகிறது
மண்டிக் கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு
ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்து கொண்டிருக்கிறார்.

அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்
ஒப்புக் கொடுத்துவிட்டு கடலைகள் திருப்பிச் செல்லுகின்றன. 

-வேல் கண்ணன்

நன்றி : விகடன் தடம் ஜனவரி 2018

No comments: