பச்சையம்
அவனின்
மருத்துவப் பரிசோதனையின்
முடிவிற்கு காத்திருந்தது
இந்த ஆற்றங்கரையோர மரத்தனடியில் தான்
முடிவில் மரம் அதிர்ந்தது
அவனின்
தொடர் சிகிச்சையில்
இளைப்பாறலும்
வலி குறைந்த நேரங்களிலும்
இங்கே தான் நின்றிப்போம்
மொத்தப் பிணியையும்
இம்மரமே உறிஞ்சுக்கொள்வதை
போல சாய்ந்தே நின்றிருப்பான்
அவனின்
அறுவை சிகிச்சையின் போது
நின்றிருந்தேன் தனியாக
தளிர்களையும் கிள்ளாமல்
அவனின்
சாம்பலை ஆற்றில் கரைக்கும்
இந்த கணம்
மரம் பச்சையத்தை கவிழ்க்கிறது
______________________________ ___
சுமக்கும் சாலை
இன்று கடக்கும் இந்த சாலை
அவனை நினைவு படுத்துவது
நெடுநாள் பின் கடக்க நேரிட்டதாகவும்
இருக்கலாம்
அவன் கடந்த போதெல்லாம்
கையசைத்த ஹிண்டு பெரியவர்
கையசைத்த ஹிண்டு பெரியவர்
காரணமாகயிருக்கலாம்
இதேசாலையில் இருக்கும் வீட்டிலிருந்து
கேட்கும் அதீத இருமல்
காரணமாகயிருக்கலாம்
சாலை முனையில் திரும்பும்
சிவந்த உயரமான அந்த மனிதர்
காரணமாகயிருக்கலாம்
இறுதியாக அவனைத் தூக்கிச்
சென்றபோதுயிருந்த
இதே இலையுதிர்வு தூறல்களாகவும்
இருக்கலாம்
இல்லாத போதும்
என்றுமே அவனைச் சுமந்தபடிதான்
இருக்கும் இந்த சாலை
நன்றி : உயிர் எழுத்து - November '2012
5 comments:
மனம் கனக்கிறது கண்ணன்.
ஒரு இரவில் அண்ணாசாலையின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் உங்கள் அண்ணனைப் பற்றிப் பேசிய இருள் கண்ணெதிரே கடந்து செல்கிறது.
//இல்லாத போதும்
என்றுமே அவனைச் சுமந்தபடிதான்
இருக்கும் இந்த சாலை//
பீறிடும் துக்கத்தை வரிகளில் வார்த்திருக்கிறீர்கள். செயலற நின்ற மனசு நகர மறுக்கிறது. போனவர்களுடன் போய்ச்சேராத நினைவுகளின் சுமை அழுத்தி உயிரெடுக்க...
வரிகளில் வலி புரிகிறது... மனம் கனத்தது...
என் துயரத்தை என்னுடன் சேர்த்து சுமந்தற்கு நன்றி
நோகிறது.
Post a Comment