Showing posts with label 361˚. Show all posts
Showing posts with label 361˚. Show all posts

நீ வராத மாலை



நீ வராத மாலை 
வெயில் பாயை உதறி சுருட்ட
தொடங்கிவிட்டது 
கையசைக்காமல் பறந்து சென்றது
பறவை கூட்டம்
நீர்த்து போன இறுதி சொட்டும் உறுதிப்படுத்தியது 
நகர்ந்து வந்த இந்த நாளை நரகமாய் 
வெந்து கொதித்த பொழுதுகள்
துளிர்த்த சில பூக்களையும் பிராண்டின 
கண் தெரியாத பாலியம் நடுநிசியின்
கூரிய நகங்களால்  விரட்டி அடிக்கப்பட்டது 

எனது
வனத்தின் எல்லை பகுதியிலிருந்த 
நெடுமரங்களும் நிலாக்களும் சரிந்தன 
துரோகத்தின் கருகல் நாசியை தொட்டன 
வேற்றுஆட்களின் நடமாட்டம் தெரிகிறது 

உன் 
சுகந்த விழிகள் உழுத பாறைகளில் 
சுரக்கும் பாலில் பொடித்து 
பருகுவேன் 
  
நஞ்சான 
 
   இந்த 
காத்திருத்தலை.
 
நன்றி : 361˚ ( 3 'வது - சிற்றிதழ்)
நன்றி : நிலா ரசிகன்  

வேள்வி




இயங்கு திரையில் தொலைகிறது இயற்பியல் தாவோ 
மாயக்கம்பளம் கோணங்கியின் எழுது மையில் கரைகிறது 
நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின் 
நிர்மூலங்கள் 
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும் 
இலவ மனம். 
சுற்றத்தாரை பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது 
ஒற்றைப்பனை
பெருங்காதை  இளவரசியை
மீட்பதற்கு மிஞ்சியிருப்பது  
பொய்க்கால் குதிரை 
உறைந்த சுவாசம் 
புல்லாங்குழலுக்குள் இசைத்த வண்ணமிருக்கின்றன 
அணையா கீதங்கள்
இறுதி சொற்களுக்குள் 
தொடங்கிவிடும் கவிதையாய் 
இறுதி நொடிக்குள் வாழ்ந்து விடலாமென்று 
நாமும் பிறகும் 

நன்றி :  361˚

தொடர்புக்கு : 
361degreelittlemagazine@gmail.com

நன்றி : நரன்