1.
சட்டென்று
கவிழ்ந்த இருளில்
மீண்டு எழுகிறது
மெளத்தின் ஓசை
2.
இரைச்சலால் நிரம்பி
நெரியும்
தனிமையின் இருத்தல்
தெறிக்கிறது
குதித்தோடும் சிறுமியின்
சிணுங்கிய
கொலுசொலியில்
3.
எரியும்
மரங்கள்
கேட்கிறது
வீணை
அழுமோசை
4.
இழவு வீட்டின் விடிகாலை
ஓலம்
பிற்பகலில் தேய்வது
வரை...
நினைவுக்கு வருகிறது
நகர
ஒண்டுக்குடித்தனத்தில்
நடுநிசியில் கேட்கும்
குழந்தையின் வீறிட்டலில்
5.
ஒரே ஒரு
துளிதான்
ஓயாது கடலோசை
6.
ஒரு ஆழ்கிணறு
ஒரு கரும்பாறை
ஒரு கூழாங்கல்
ஒரு பூக்காத செடி
சலனமில்லாத நீரோடை
மீளாத தனிமையில்
கேட்கிறது
பிரிவின் வலியோசை
7.
கர்ப்பகிரஹத்தில்
எதிரோலிக்கிறது
கருவறையற்றவளின்
விசும்பலோசை.
நன்றி : இனிது இனிது - இலக்கிய இதழ்
இனிது இனிது தொடர்ப்புக்கு : அ. கார்த்திகேயன்.
அலைபேசி : +91 9952722942
**************************************************
