அடர் வனமொன்றில்
புதைந்திருக்கும்
உன் மெளனத்தின்
சொற்களுடன் எழுகிறது
ஒரு பறவை ஒரு மிருகம்
பெருமழையொன்றில்
குளிர்ந்திருக்கும்
உன் பார்வையின்
ஆழங்களுடன் விழுகிறது
ஒரு ஆலங்கட்டி ஒரு பாறை
மென்கொலுசொலியில்
ஒளிர்ந்திருக்கும்
உன் புன்னகையின் நெளிவுகளுடன் சுரக்கிறது
ஒரு துளி பால் ஒரு துளி விஷம்
மீளா துயரத்தில்
மீட்டியவாறேயிருக்கும்
உன் சுவாசத்தின்
ராகங்களுடன் துளிர்க்கிறது
ஒரு வாழ்வு ஒரு மரணம்
நன்றி : ஆனந்த விகடன்
