Showing posts with label இசைக்காத இசைக் குறிப்பு. Show all posts
Showing posts with label இசைக்காத இசைக் குறிப்பு. Show all posts

உயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைத் தேடும் கவிதைகள்

''கதிர், உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் அன்பின் மாறாத அச்சில் செலுத்துவது எதுவென்று நினைக்கிறாய்? பணமோ, பகட்டோ, பதவியோ, புகழோ, இஷ்டபந்துமித்திரர்களோ... இல்லை கதிர். 'கவித்துவம்'தான் இந்த உலகை இயக்குகிறது. இதை நான் முழுமனதோடு விசுவசிக்கிறேன்; நீ விசுவசிக்கிறாயா..?’’ என்று அன்றொரு நாள் கவிஞர் யூமா வாசுகி என்னைப் பார்த்துக் கேட்டபோது, என்னைப் போலவே அவரது கண்களை நீயும் பார்த்திருப்பாய் என்றால், ’நம்மை, பாவத்திலிருந்து ரட்சிக்க வந்த கருணாமூர்த்தி இவர்தான்’ என்று நீயும் நம்பத் தொடங்கி இருப்பாய் வேல்கண்ணன். காருண்யமும் வாஞ்சையும் பொருந்திய மனிதராக அவரை என் கண்முன்னே காட்டியது அவரது கவித்துவம்தான். அந்தக் கவித்துவம் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!

வேல்கண்ணனின்  கவிதைகள் எதன் பொருட்டும் தன் சுட்டுவிரலை அல்ல, சுண்டுவிரலைக்கூட உயர்த்தி அதிர்ந்து பேசாதவை. அவற்றுக்குத் தன்னை நடுநாயகமாக நிறுவிக்கொள்ளும் யத்தனங்கள் இல்லை; அதனால், பதற்றங்களும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அதற்கான அவசியமே இல்லை. தன்போக்கில் கசியும் ஒரு ஊதுவத்தியைப் போல, தீராத ஆற்றாமையோடு அவை சதா முனகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த முனகல்களுக்கும் வியாதியஸ்தனின் முனகல்களுக்கும் நிரம்பவே வித்தியாசங்கள் உண்டு நண்பர்களே. ஏனெனில், இவரின் கவிதையின் குரலே இந்த முனகல்தான். அதனால்தான் அந்தக் குரலுக்கு ஒரு சுண்டுவிரல்கூட முளைக்கவில்லை என்றேன். ஆனால், அந்த முனகலை ஒருவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான் எனில், ராகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்த பாடகன், ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பும் முன், அவன் செய்யும் ’முன்தயாரிப்புகள்’ என்றே அவற்றைப் புரிந்துகொள்வான். எனவேதான் இந்தக் கவிதைகள் அனைத்தும் இசைக்காத இசைக் குறிப்புகளாக இருக்கின்றன.  ஒவ்வொரு கவிதையும் பால்யம், காமம், கழிவிரக்கம், துயரம், நிராயாசை, தாம்பத்யம், காதல், துரோகம்... என இவை தந்த அனுபவங்களை சதா முனகிக்கொண்டே, தன்னைத்தானே இசைக்க முற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

சரி... வேல்கண்ணன், கவிதை முழுக்க இப்படியே ஆற்றாமையோடு முனகிக்கொண்டேதான் இருக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. அவ்வப்போது ஆறுதலை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார். என்ன... இவர் ஆறுதல் அடைய ஒரு நிலா தேவைப்படுகிறது; வேல்விழி, ஓடிவந்து இவர் கழுத்தைக் கட்டிக்கொள்ளவேண்டி இருக்கிறது; விரல்களிடையே பற்றிக்கொண்டு காதுகுடைவதற்கோ அல்லது தன்னைத்தானே வருடிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கோ ஓர் இறகு வேண்டியிருக்கிறது. சிட்டுக்குருவியின் பாடல் வேண்டி இருக்கிறது; இவரை அகழ்ந்தெடுக்கும் விழிகளில் இருந்து, உயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலா, வேல்விழி, உயிர்க் கவ்வும் ஒரு சொல், சிட்டுக்குருவியின் பாடல், இறகு... இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்ததும் சமாதானமாகிவிடுகிறார். சமாதனத்துக்குப் பிறகு முனகல் இல்லையா என்றால்... இவர் நாசி தொடும் ’துரோகத்தின் கருகல் வாசனை’யும் (நீ வராத மாலை... பக்- 16) கடத்திப்போகப்பட்ட இவரின் ‘பெருங்காதை இளவரசியை மீட்பதற்காக’(வேள்வி... பக்-17) இந்த வாழ்வு இவருக்குக் கொடுத்திருக்கும் பொய்க்கால் குதிரைக்கு, தன் கால்களைக் கொடுத்துவிட்டு ரத்தம் கசியக் கசிய... மீண்டும் முனக ஆரம்பித்துவிடுகிறார். முனகல் நிற்கிற கணத்தில் இவரது கவிதையும் நின்றுவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனில், ’நான் முனகிக்கொண்டேதான்  இருக்க வேண்டுமா?’ என்று வேல்கண்ணன் என்னைக் கேட்பார் எனில், என் அழுத்தம் திருத்தமான பதில்... ’ஆமாம் வேல்கண்ணன்...’ என்பதுதான்.

பிறந்த நிலத்திலேயே கடைசிவரைக்கும் வாழ்ந்து மடிகிற பாக்கியம் 80-களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மிக அரிதாகவே கிடைத்திருக்கிறது. இங்கே ’வாழ்ந்து’ என்கிற பதத்துக்கு மிகுதியாக அழுத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். 80-களுக்குப் பிறகு பிறந்த அதிகமானவர்கள் கழுத்தில், கல்வி, கணினியைக் கட்டிவிட்டு தட்டச்சிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களை நிராதராவாக விட்டுவிட்டது. ஒரு சமூகமாக, அல்லது ஓர் இனக்குழுவாகச் சேர்ந்து வாழ்ந்த மனிதனைத் தகவல் தொழில்நுட்பம் தனித்தனி தீவாக்கிவிட்டது. இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கிக்கொடுத்த ஆகப்பெரும் சாபம், காமத்தை ஒரு கேப்ஸ்யூலில் அடைத்துக் கொடுத்ததுதான். அது, வேலையின் நிமித்தம் கலிஃபோர்னியாவில் இருக்கும் கணவன், காங்கேயத்தில் இருக்கிற மனைவியோடு தொழிற்நுட்ப உதவியுடன் பொய்யாக சல்லாபிக்கும் மெய்நிகர் உலக தலைமுறையை உருவாக்கியதை அன்றி வேறெதையும் செய்யவில்லை. இயல்பாக எழுகிற பாலுணர்ச்சியைச் சரியாகக் கையாளக் கற்றுத்தராத கல்வியாலும், சமுதாயத்தாலும் பலிகொள்ளப்பட்ட சமீபத்திய பலிதானே மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி.

இப்படியாக... மனசுக்கும், தொழில்நுட்பம் தந்த, தனித்த வெக்கையான வாழ்வுக்கும் இடையே ஏதோ ஒன்றைப் போல பிசுப்பிசுக்கும் காமத்தை ‘அறையில்...’ (பக-14) கவிதையில் கச்சிதமாக எழுதிச் செல்கிறார் வேல்கண்ணன். 

சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானநீரில்
நெளிகிறது என் நிழல்... 

என்று எழுதி இருக்கும் வேல்கண்ணன், ’நெளிகிறது’ என்ற வார்த்தையில் இறக்கி வைத்திருக்கும் வெக்கையும், தனிமையும், கொதிக்கிற ஒரு வெங்கோடையின் தார்ச்சாலையில் பாதுகைகள் இல்லாத கால்களோடு இறக்கிவிடப்பட்ட ஒரு சிறுமி அனுபவிக்கிற துன்பத்தைவிட இன்னல் மிகுந்தது.

தொகுப்பில் முதல் வரியில் இருந்து கடைசிவரை கவிதைத் தனம் கூடிவந்ததாக ’அறையில்’ கவிதையைப் பார்க்க முடிகிறது. பழுப்பேறித் தொங்கும் பகலையும், மின்னுகிற இரவுக் களியாட்டங்கள் திணித்த அணர்த்தங்களையும் உள்வாங்கிய ஒரு பி.பி.ஓ. தலைமுறையின் காமம் என்றுகூட இதைச் சொல்லலாம்! 

இந்தத் தொகுப்பில் காமம் குறித்தும்,  காத்திருத்தல் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகள் உள்ளபடியே என்னைக் கவர்கின்றன. அதுவரைக்கும் ஏதோ ஒன்றை முனகிக்கொண்டிருக்கும் பேட்டரி ரேடியோவை... காற்றின் திக்கற்ற ஏதோ ஒரு திக்கில் திருப்பி வைக்கும்போது, அது உயிர்பிடித்துக்கொண்டு கானம் பொழிய ஆரம்பிக்குமே அதுபோலத்தான் காமம் குறித்து வேல்கண்ணன் எழுதும்போது அந்தக் கவிதைகளில் மட்டும் உயிர்ப்பின் பச்சையம் அதிகப்படியாகவே வந்து ஒட்டிக்கொகொள்கிறது.

 இசைக்காத இசைக் குறிப்பு கவிதையில் வரும்

’முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி’ 

என்ற வரியைப் படித்ததும் கொஞ்சம் விக்கித்துப் போய்தான்  நின்றேன். கவிதையை ஒதுக்கிவிட்டு இந்த ஒரு வரி மட்டுமே எனக்குள் பலவகையான சித்திரங்களை எனக்குள் எழுப்பிச் செல்கின்றன. பால் தூர்ந்துபோன சோமாலியாத் தாயின் மார்பை, பசியில் கடிக்கும் குழந்தையின் வாயில் கசிந்த ரத்தத்துக்குச் சமமானது இந்த வரியில் தொக்கி நிற்கும் வியர்வைத் துளி. கார்ல் மார்க்ஸ் மாளாத ஏழ்மையில் தோய்ந்தபோது அவரது குழந்தைகள் ஜென்னியின் மார்பகத்து ரத்தத்தை உறிஞ்சித்தான் பசியாறின என்று எனக்கு மிகையாகச் சொல்லப்பட்ட சித்திரமும் வந்துபோனது. மார்பகத்துக் காம்பில் வியர்வைத்துளியொன்று துளிர்த்து நிற்கிற அளவுக்கான உள்ளார்ந்த கூடல் ஒன்றும் நினைவுக்குள் வந்துபோகிறது.

உன் தலையை அரிந்து 
உன் மடியில் போட்டுக் கொண்டு 
நீயேதான் கோதிவிட வேண்டும்... என்ற இசையின் வரிக்கு முன்பும்

என் ரோஜாக்களைப் பன்றிக்குத் 
தின்னக் கொடுப்பேன்... என்ற வெய்யிலின் வரிக்கும் முன்பும்

காலமழை
குடைகளுக்கு சொந்த நிறத்தைக் கொண்டுவர,
செங்கொடிகள்
“ ஆட்கள் வேலை செய்கிறார்கள் “ என
சகதியின் நடுவே
படபடத்துக் கொண்டிருக்கிறது... என்ற சாம்ராஜ் வரிக்கு முன்பும்

ஒரே ஒரு மதுபோத்தல் அதற்கே நான் வந்தேன்... என்ற இளங்கோ கிருஷ்ணனின் வரிக்கு முன்பும்

எப்படி வாய்ப்பேச முடியாது விக்கித்து நின்றேனோ அப்படி நின்றேன் மேற்சொன்ன வரிக்கு முன்பும். அந்த ஒரு வரிதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியதே அன்றி, வேறு யாரும் இல்லை.

இந்தியாவின் விவசாயம் ஆண்டுக்காண்டு லாபத்தோடு நடந்துகொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்களைச் சொல்லி, ’நான்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியான விவசாயத் துறை அமைச்சர்’ என்று புளகாங்கிதம் அடைகிறார் சரத் பவார். ஆனால் அதே இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியோ... ’பாரதத் திருநாட்டின் உணவுப் பற்றாக்குறையை நீக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தரும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டுமே சாலச் சிறந்தது’’ என்கிறார். இந்த முரண்களில் இறுக முடிச்சுப் போட்டு, எங்கள் தஞ்சையாம், மருத நிலத்தை மீத்தேன் வாயுக்காக பன்னாட்டு முதலைகளிடம் விற்றுவிட்டார்கள். மருத நிலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் நிலகரிக்காக, நிலத்தின் இருதயமான விவசாயத்தைக் கூறுபோட கையெழுத்தாகிவிட்டது. நகைச்சுவையாளர் வடிவேலு அவர்கள், ’இங்கனகுள்ள இருந்த என் கிணத்தைக் காணோம்’ என்று சொன்னதைப்போல, இன்னும் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, தஞ்சை விவசாயிகளுக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னைப் போன்றோரெல்லாம் ’எங்கே எங்கள் காவிரி டெல்டாவைக் காணோம்? எங்கே எங்கள் நதியைக் காணோம், என்கே எங்கள் வாழ்வைக் காணோம்” என்று வாழ வக்கற்று உயிர்ப்பிசைந்து நிற்கப் போகிறோம். அப்போது, ’சோற்றுக்குப் பதிலாக உங்கள் வயிற்றுக்குள் மீத்தேன் வாயுவை நிரப்புகிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று அரசியல் கட்சிகள் எங்களை நோக்கி வருவார்களே அன்றி... ஒருபோதும் எங்கள் நதியோ, எங்கள் நிலமோ, எங்கள் வாழ்வோ திரும்பி வரப் போவதில்லை.

கரையோரத்து மணலை
இரு கைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி

என்று வேல்கண்ணன் எழுதுவதைப் போல நாங்கள் குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்துதான் போக வேண்டி இருக்கும்.

இந்தத் தொகுப்பில் படித்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளக்கூடிய வலி கடத்திகளாக ’பச்சையம்’, ’சுமக்கும் சாலை’ என்ற இரு கவிதைகளும் இருக்கின்றன. இந்தக் கவிதைகள் எழுதிய ஈரம் காய்வதற்குள் நான் படித்தபோது உணர்ந்த வலியை மறுபடியும் இப்போதும் உணர்கிறேன்.

வலியையும் துரோகத்தையும்... இன்னும் சகலத்தையும் தனக்குகந்த முனகல்களாக எழுதும் வேல்கண்ணன்தான், சில ’கண்டிஷன் அப்ளை’ கவிதைகளையும் எழுதி சலிப்படைய வைக்கிறார். கண்டஷன் அப்ளையோடு பிறந்து, கண்டிஷன் அப்ளையோடு வளர்ந்து, கண்டிஷன் அப்ளையோடு மணந்து, கண்டிஷன் அப்ளையோடு புணர்ந்து, கண்டிஷன் அப்ளைகளை குழந்தைகளாகப் பெற்றுக்கொள்கிற இந்த மாநகரத்தில் வாழ்கிற வேல்கண்ணனால், கண்டிஷன் அப்ளை’க்கு எழுதுவதைத் தவிர்க்கமுடியாமல் அல்லாடுவது தெரிகிறது. 

அப்படி இந்தத் தொகுப்பில் ’என் காதல் கவிதையும் நீயும்’, ’மௌன தவம்’, ’மௌனப் புரிதல்’, சரிகை வண்ணத்துப் பூச்சி... போன்ற கவிதைகள் மாளாத  சலிப்பைத் தருகின்றன.  இந்தக் கவிதைகளில் பறக்கிற வண்ணத்துப்பூச்சி, அளவுக்கு அதிகமாகவே தமிழ் நவீனக் கவிதைகளில் பறந்து அலுத்துவிட்டது. தவிரவும் அதற்கு சாயமும்போய்விட்டது. எல்லாவற்றையும்விட எறும்பு இழுத்துப்போகும் இந்த வண்ணத்துப்பூச்சியை காதலின் சின்னமாக எழும்பிப் பறக்கவைக்க முயற்சிக்கிறீர்கள் வேல்கண்ணன். அது பறப்பதற்குப் பதிலாக கவிதையையும் இழுத்துக்கொண்டே பாதாளத்துக்குச் சரிகிறது!

கவிதையில் நீங்கள் புதைத்துவைக்கும் மௌனம் ஏற்கெனவே பலரும் புழங்கிப் புழங்கி துருவேறிய தகரம்தான். அதை எடுத்து நீங்கள் கவிதைக்குள் செருகும்போது கவிதைகள் நீலம்பாரித்து சுகவீனம் அடைகிறது!

தவிரவும், வேல்கண்ணன் சொற்களை இன்னும் இளக்கமாக இலகுவாகப் பயன்படுத்தலாம் என்பது எண்ணம். இந்தச் ’சொல் தயக்கத்தை’விட்டு வெளியே வந்தால் உங்களால் படைப்பூக்கத்துடன்கூடிய, நீங்கள் சொல்வதைப் போல ’உயிர்க் கவ்வும் சொல்லால்’ ஆன இன்னும் சில கவிதைகளை எழுத முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

என்னுடைய ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத் தொகுப்பு வந்தவுடன், கவிஞர் இசைக்கு போன் செய்து, ''நண்பா... என் தொகுப்பு வந்துருச்சு... வெளியீட்டு விழா எப்போனு சொல்றேன் வந்துடு'' என்றேன். ’’நண்பா, என்னால் விழாவுக்கு வர இயலாது. இந்தத் தொகுப்பின் மூலம் உனக்கு இன்னும் அதிகமான காதலிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்றான்.  அந்த ராஸ்கலின் வார்த்தைகள் இன்றுவரை பலித்துக்கொண்டிருக்கின்றன . தவிரவும், அந்தக் கவிதைத் தொகுப்பு, எனக்கு நிறைய நணபர்களையும், ஒரே ஒரு துரோகியையும் அடையாளம் காட்டியது. வேல்கண்ணன் உனக்கும் அப்படியான ஒரு தொகுப்பாக ’இசைக்காத இசைக் குறிப்பு’  அமையட்டும்.

இவை எல்லாவற்றையும்விட வேல்கண்ணன்... இந்தக் கட்டுரையை உனக்கும் எனக்கும் அன்பின் நிமித்தம் ’படா தோஸ்தாக’ இருக்கிற ஜீவகரிகாலனுக்குச் சமர்ப்பித்து, அவரிடம் வழங்குவதுதான் இந்த நேரத்தில் சிறந்த செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையைப் பெற்றுக்கொள்ளும்படி ஜீவகரிகாலனை அழைக்கிறேன்!


(08.03.2014 அன்று  டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த வேல்கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்புக்கான ’இசைக்காத இசைக் குறிப்பு’ அறிமுக நிகழ்வில் வாசிக்கப்பட்டது)

நன்றி : கதிர் பாரதி

பாலு மகேந்திராவும் வேல் கண்ணனும் - இளஞ்சேரல்


         சமீபத்தில் தொடர்ச்சியாக கவிதைகளாகவே வாசித்து வருவதும் அதற்கான
குறிப்புகள் மையக் கருத்துகளுடன் பொருந்திப் போகிற கவித்துவங்களுடன்
உரையாடுதல் என்பதாகவே சிந்தை நகர்ந்து கொண்டிருக்க, நண்பர் கவிஞர் வேல்
கண்ணனின் கவிதைகளுக்குள் வாசித்தும் வசித்தும் வந்தேன்.  முதல்
தொகுப்பின் சொற்கள் வெட்கத்திலிருப்பதை உணர்ந்தேன். ரசனை யெனும் கரையின்
எந்த மையத்திலிருந்து துவங்குவது? ஒரு கட்டுரைக்காக ”இடைக்காலத்தில்
நாவல் எழுச்சி“ எனும் கட்டுரைக்காக காவல் கோட்டம், அஞ்ஞாடி, கொற்கை, உப
பாண்டவம்,பஞ்சும் பசியும், கபாடபுரம், காதுகள். மணல் கடிகை, சங்கம் போன்ற
நாவல்களுடனான மறுவாசிப்பு என்று பொழுது தீர்ந்து கொண்டிருக்கிறது. எழுத
எழுத பிரச்சனைகளும் கையிருப்புகளும் தீர்ந்து போகும் என நான் நினைத்தது
முட்டாள்தனம்தான். (கட்டுரை எத்தனை பக்கம் எனக் கேட்கக் கூடாது)

எழுதுவதற்கு முன்பாக அகம் பிடிபடாத குழப்பம் மேலிடுகிறது. எழுதி வருகிற
பல ஆக்கங்களின் களங்களும் கதாபாத்திரங்களும் உரையாடல்களின் தொந்தரவு
வேறு. இடைவிடாத அலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளுமாக பொழுது கழிய
யாவற்றையும் புறந்தள்ளி வைத்துவிட்டு ஐந்து முக விளக்குப் பொருத்தி
இருட்டறையில் தியானத்திற்குள் நுழைவதைப் போன்று வேல்கண்ணனின் தொகுப்பின்
வழியாக கவிதைகளுக்குள் பயணித்தேன். இதுவும் ஒரு விடுவித்தல். குளுகோஸ்
ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்ட கைகளுடன் வாழ்வது போலத்தான் இருக்கிறது
எழுத்து வாழ்வு.. வலித்தால் எடுத்து மூக்கில் பொருத்திக்கொள்ளலாம்.. வேறு
வழியில்லை.. வாயிலில் மகாசிவராத்திரி பள்ளயம் எடுக்க படிவிளையாட்டு
ஆடிவருகிற பெரியதனம் கருப்பண முதலியார் வம்சத்தின் பங்காளிகள் திருவாபரண
கூடைகளுடன் மக்களை இந்த ராத்திரிகளில் சந்தித்து வருகிறார்கள். நான் ஓர்
ஆட்டம் பார்த்துவிட்டு விரல்களிலிருந்த ஊசிகளைக்
கழட்டினேன்..பிரிட்ஜிலிருந்து வேல்கண்ணனின் கவிதைகளை எடுத்தேன்..

கவிதைகள் உள்ளுக்குள் விரும்பி அருந்தும் தேநீர் போல மென் சூட்டில்
இறங்குகிறது. விரும்பி நீண்ட நாள் அணிகிற புதுத் துணி போல படிந்து
கொள்கிறது. பிடித்த பலகாரங்கள் தீரத்தீர அருந்தி விட்டு காலியான
பாத்திரத்தைப் பார்ப்பது போல நம் அகத்தைப் பார்க்கிறோம். நம் இறைச்சல்
சமூகத்தில் நாம் அமைதியாக வாழ முடியாது. ஒரு வகையில் நாம் அந்த இறைச்சல்
எல்லாம் இசை என்பதாக இசைஞானியைப் போன்று கருதிக் கொள்கிற பட்சத்தில்தான்
வாழமுடியும். உறவு கொள்ள முடியும்.
வேல் கண்ணனின் ஒரு கவிதையுடன் பாலுமகேந்திராவின் நினைவுகளுக்குள்
நுழைவோம். பாலுமகேந்திரா பற்றிய குறிப்புகளும் செய்திகளும் மனத்திரையில்
ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் தலைமுறை வண்ணப்பட ரசிகர்களிலிருந்து டால்பி
ஸ்டிரியோ ரசிகர்கள் வரையிலும் பாதித்த ஒரே கலைஞனாக பாலுமகேந்திரா
மாறியிருக்கிறார். இந்த தலைமுறை இடைவெளி நமக்கு நிரந்தரம் என்பதை பாலு
நிருபித்திருக்கிறார். பாலு அளித்துப் போன பிலிம்ரோல்களை முக்கால்வாசி
தூர்ந்து போய்விட்டது. அந்த வண்ணங்கள் மஞ்சக்கரி பிடித்தாகி விட்டது. ஒரு
நேர் காணலில் தனது புகழ்பெற்ற படத்தின் பிலிம் ரோல்கள் அநாதியாக அழிந்து
போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய  சமீபத்திய படமான “தலைமுறைகள்“ பாக்ஸ்
திரையரங்குகளில் ஆயிரம் ருபாய் டிக்கட் என்பதாக சில காட்சிகள் ஓடியது.
சில மனிதர்களும் நாற்காலிகளும் பார்த்து மகிழ்ந்தது. மெதுவாக ஊறும்
படங்களை எடுப்பவர் என்னும் பெயர் பெற்றவர். இருதயம் மெதுவாக ஓடினால்தான்
நாம் உயிர் வாழமுடியும். நம் ரசனானுபவத்திற்கு எது மெதுவானது. எது
சத்தமானது என்பது தெரியாது.
இந்தக் கவிதை காதலர் தினத்தின் காதலிக்காகவும் இசைஞானிக்காகவும்
பாலுமகேந்திராவிற்காகவும் நமக்காகவும் வாசகர்களுக்குரிய சமநிலை அக
மனதிற்குமாக நின்று அருள்பாலிக்கிற கவிதையாக உள்ளது நீங்கள் வாசிக்கலாம்.
ஒரு சந்தப்பாடலுக்கும் மோன லயத்திற்குமாக எழுதப்படுகிற தன்ணுணர்வு மிக்க
ஒளிபொருந்திய கவிதை.. வேல்கண்ணனின் கவிதைகளில் இந்த மெதுவான தன்மை
இருக்கிறது. ஒலி மெதுவான சந்தம். கண்ணின் கருவிழியின் உட்படலத்தின்
தன்மைதான் குவி ஆடிகள் உருவாகவும் காமிராக்கள் உருவாகவும் வித்திட்டது
என்பதை நாம் மறப்போமா. மனிதனின் குரல்தான் மிகச்சிறந்த இசைக்கருவி
என்றார் இசை மேதை செம்மங்குடி சீனிவாசய்யர். மிகச்சிறந்த காமிரா
கண்கள்தான். வேல் கண்ணனின் கவிதைகள் சிலவற்றைக் குறித்து பேசுவது அவசியம்
காதுகள் கொண்ட கண்கள் உலகில் வசிக்கிறது. கேட்கட்டும் பார்க்கட்டும்..

நிதர்சன ஒளி
உன் வாசல் நெளி
கோலங்களிலிருந்து வண்ணங்களாக
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன
அவைகளிலிருந்து மீறியெழும் வாசனையொன்று
மகரந்தகளை மலரவைக்கிறது

உன் கைகளில் உருளும்
தாயக்கட்டைகளிலிருந்து
தொடர்ச்சியாக
தாயங்கள் விழுகின்றன
தாயங்களிலிருந்து மீறியெழும் புள்ளியொன்று
ஒளிச் சுழலை உறையவைக்கிறது

உன் கேசத்திலிருந்து உதிரும்
இழையொன்று இரவைக்
கவிழ்கிறது
இரவிலிருந்து மீறியெழும் கனவொன்று
நினைவுகளை நிலைக்க வைக்கிறது

உன் தூரிகையிலிருந்து வடியும்
ரகசியமொன்று கதையாக
உலவுகிறது
கதையிலிருந்து மீறியெழும்
சொல்லொன்று புதிரொன்றை விடுவிக்க வைக்கிறது- பக்-29

        பாலுமகேந்திராவின் வாழ்வு கூட இந்தக் கவிதையில் வருகிறது. இழப்பு
ஈடு செய்ய முடியாத முக்கால் நூற்றாண்டு வாழ்வை எண்ணற்ற மனித உணர்வுகளை
பிலிம் சுருள்களில் வைத்த மாதிரிதான் இந்தக் கவிதையும்
பதிவாகியிருக்கிறது. எழுத்தில் வடியும்  சோகம் ஏன் பேசப்படுகிறது. ஒரு
நாள் கழிந்தது என்பார் புதுமைப் பித்தன். அந்த நாள் வெறுமனேவா கழிந்து
போகிறது. எத்தனை சித்திரங்கள் எத்தனை காட்சிகள் எத்தனை மனிதர்கள் எத்தனை
வெளிச்சத்தில். எத்தனை புகை. எத்தனை ஓலம், எத்தனை பொலிவு. இந்தக் கண்
பிலிம் ரோல்களில் உருண்டு படிந்து போகிற காட்சிகள்தான் எத்தனை. நம்மை
விட்டு கழிந்து போகிற நாளை ஒரு எளிய காகித த்தைக் கிழித்து எறிவது போல
எறிந்து விடுகிறோம். அதன் சோகம்தான் எழுத்து. கலைஞர்களின் வாழ்வும்
அப்படித்தான். கலைஞனின் காதலும் கலைஞனின் காதலியின் வாழ்வும் மிகவும்
துயரமானது. எப்படி கவிதை அகத்தின் ஆழத்தில் மிதக்கின்ற உணர்வைப்
பேசுகிறதோ அப்படியாக பாலுமகேந்திரா ஒளியின் வழியாக உணர்வுகளை
வெளிப்படுத்தியவர். நடுத்தரக் குடும்பங்களின் முகங்களாக அவர் மாந்தர்கள்
உலவினார்கள்.  குறிப்பாக பெண்கள் நமது ஊர்க்காரப் பெண்களைப் போன்ற
நிறத்திலிருந் தார்கள். எண்ணைச்சிக்குத் தலையும் காட்டன் மிக்ஸிங்க்
புடவையில் நகம் கடித்தார்கள். ஏமாற்றுகிறவர்களுக்குத் துணையாக
வாழ்ந்தார்கள். உலகம் அவர்களுக்கு எதிராகவே சுழன்றது. தோல்வி வெற்றி
சமகால வாழ்க்கையில் உழல்தல் என்பதாக அல்லாமல் ஒரு செடியாக மலராக ஒரு
கிணறாக ஒரு குண்டு குழியுமான சாலைகளாக உடைந்த சைக்கிளாக பழைய பஜாஜ்
ஸ்கூட்டராக வாழ்வார்கள். ஒரு சமூக உயிரிக்கான அந்தஸ்த்தை பாலுமகேந்திரா
தன் கதை மாந்தர்களுக்கு அளித்தார். ஏறக்குறைய மகத்தான நவீன கவிஞனின்
தலையாய பணியாகவே அமைந்தது. மிக வெளிப்படையான வாழ்க்கை. வேல்கண்ணனின்
கவிதைகளும் அது போன்ற உணர்வைத்தான் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.
        நவீன கவிதைகளில் இந்த மூன்றாண்டுகளுக்குள்ளாக இறைநிலைக கவதை
வடிவங்கள் உருவாகியிருப்பதைக் காணலாம். இறைஞ்சுதல் மனோபாவம் என்பது
ஏறக்குறைய தன்னைக் கண்டடைதல் என்பதுதான் தம் அகத்தைப் பரிசோதிப்பது
போன்றதுதான். நவீன கவிதைகளில் சுயமும் அகமும் பிரழ்வு நிலையில்
உரையாடுதல் என்பதும் கூட இறைநிலையின் வடிவம்தான். கண்ணுக்குத்தெரியாத
பலம் கொண்டமட்டில் சுத்தும் ஒரு சக்தி அது வேறொன்றுமில்லை அகம்தான். அகம்
குறித்து நவீன கவிதை மட்டுமே பேசும். கவியரங்க கவிதைகள் பேசாது. புறம்
பேசுகிற கவிதையில் இறைநிலையைக் காணமுடியாது. வேல்கண்ணனின் உருவகங்கள்
உயிர்ச் சொட்டாய் அகக் குளத்தில் சொட்டி இறைநிலை வளையங்களை கரு
செய்கிறது.

தலைப்பில்  வாசிக்க நேர்ந்த அனுபவங்ளை நாம் பேசும் போது இசைக்காத
இசைக்குறிப்பின்  கவிதையிலிருந்து சில வரிகள்

மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி
தனிச் சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு- பக்-7

இந்தக் கவிதை நமக்கு இசை சம்பந்தமான பழம்பெரும் காவிய நிலைகளை
நினைவுட்டிச் செல்கிறது.
சில ஆத்மார்த்தமான செய்திகளை நாம் பார்க்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களில்
இசை சம்பந்தமான இறைநிலை செய்திகள் உள்ளது. இசைத்தமிழ் பயில்தல் என்பது
அரியதாய் மாறியிருக்கிறது. இசைக்குறிப்புகளுடன் இசைக்கருவிகளை இசைத்துக்
கொள்ளுதல் என்பது சுலபம். அல்லது அதுவே போதுமானது என நினைத்துக்
கொண்டதும் காரணமாகிறது. அதுவும் இறைநிலையின்பம்தான். இந்த தொகுப்பில்
இசைக்குறிப்புகள் இசைக்காத காலத்தைப் பேசுகிறது. திருவையாற்றில் ஒரு கணம்
தியாகராஜ சுவாமிகள் தோடி ராகத்தை மட்டுமே நாற்பத்தியெட்டு நாள் ஆலாபனை
செய்து பாடி இறைவனுக்கு நேர்த்தி செய்திருப்பதாகச் சொல்வார்கள். ராக தாள
லய சுத்தம் எல்லாம் தொலைக்காட்சிகளில் ஒரு பாட்டுக்கும் நான்கு
நீதிபதிகளுக்கு மட்டும் பாடினால் போதும் என்றாகி யிருக்கிறது.

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென  மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்- என்று நுன்மரபு நூலும்- 33 இசையின்
அகத்தைப் பேசுகிறது.

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருள் கிளவி என்மனார் புலவர்- உயிரியல்-62
துறையமை நல்யாழ்த் துணைமையேர் இயல்பு-  களவியல்-1
மறங்கடை கூட்டிய துடிநிலை- என்று –புறத்திணையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க- புறத்திணையும் பாடிக் களித்திருக்கிறது.

இசையொடு சிவணிய நரம்பு என்பது யாழ் எனும் இசைக்கருவியாகும் நரம்பின் மறை
என்பது நரம்பிசைக் கலைகளைப் பற்றிச் சொல்லும் நூல்களாகும். “மறைய“
எனப்பன்மையில் விளித்திருப்பதால் அந்தக் காலங்களில் நரம்பிசை சம்பந்தமான
பல நூல்கள் இருந்திருப்பதாக அறிய நேர்கிறது. மறை என்பது மறைத்தல். மறை
முதனிலைத் தொழிலாகு பெயராய் நூலுக்கு ஆயிற்று. ஒரு இயற்றமிழ் நூலைத் தாமே
பயின்று பொருள் கொண்டு அந்நூலின் பொருளை வழக்கத்திற்குக் கொண்டு வருதல்
போல இசைத்தமிழ் நூலைத் தாமே பயின்று வழக்கத்திற்குக் கொண்டு வரவே
முடியாது. இசையிலக்கண நூல்களையும் நாம அப்படியே பயில முடியாது.
ஆசிரியரொருவர் பயிற்றுத் தர நாம் பயில முடியும் என்பதை இசைத்தமிழ் நூல்
இலக்கண வகைகள் கூறுகிறது. இசைத்தமிழ் நூல்களான பெருநாரை, பெருங்குருகு,
பஞ்ச பாரதீயம் முதலான தொன்னூல்களை நாம் பெற்றிருக்கிறொம். நாம் சில
செய்திகளைத் தெரியாது ஒப்புக் கொள்வதின் மூலமாக நமக்கு நாதே சாபவிமோசனம்
அளித்துக் கொள்கிறோம்.

சீரியாழ் செல்வழி பண்ணி யாழ் நின்
காரெதிர் கானம் பாடினேம் ஆக- என்று புறநானூறு 144 பாடல் பேசுகிறது.
           மேலும் மறை நூல் ஒன்று அன்பில் கோடல் அந்தணர் மறைந்து-
பிறப்பியல்-20 பேசுகிறது. இங்கு மறை என்பது எழுத்துக்களின்
பிறப்பிலக்கணத்தையும் வாழ்நிலை நூலான ஐந்திறம் இலக்கணங்கள் முழுவதையும்
குறிக்கும். எவை எவை நுண் மரபு இலக்கியங்கள் செவ்வியல் பிரதிகள் நம்மால்
பயின்று கொள்ளமுடியாமல் பிரிதொரு ஆசிரியர்களால்  பயிற்று வித்து பயின்று
கொள்கிற நுண்கலை மரபுகள் யாவும் மறை நூல்கள் என்கிறது தொல்காப்பியமும்
ஐந்திறமும்.
       துவைத்தல், சிலைத்தல்,இயம்பல், இரங்கல் என்பனயாவும் இசைகளோடு
சொல்வதற்கும் பேசுவுதற்குமான பொதுமொழிகள். இசைக்குறிப்புகள் இதன் வடிவே
உருவாகிறது. பண், பாட்டு. பாணன், பறவை என்பதன் அடையாளக் குறியீடுகளை
பழம்பெரும் பாணர்கள் உருவாக்கினார்கள். நம் தலைமுறைக்கு
தெரியுமா..தெரியவில்லை.

துவைத்தல், சிலைத்தல், இயம்பலும் இரங்கலும் முறையே ஒலித்தல், சொல்ல்ல்,
இரங்கல் என்னும் பொருளில் வருகின்றன. இம்மொழிகளை வழக்கமாகப் பேசுவது
போலன்றி இசையோடு பேசுவதில்லை. துவைத்தல், சிலைத்தல் முதலியன ஐந்திறம்
தொல்காப்பிய காலத்தில் இசையோடுதான் பேசியிருக்கிறார்கள். வழக்குப் பேச்சே
இசைமொழிகளோடுதான் நடந்திருக்கிறது. பாராயண வகைகளை தமிழ்ப் பண்டிதர்கள்
உருவாக்கினார். சைவ, வைணவ வேளாண் குடிகளில் இலக்கிய மரபுகள் இந்த
இசைமொழிகளுடன்தான் தோன்றுகிறது. இதை நாம் சொல்கிற போது நம்மைப்
பைத்தியகாரன் என்கிறார்கள்..

வேல் கண்ணனின் இனி ஓர் அற்புதமான கவிதையை வாசிக்கலாம்.
நிம்மி

இரவுப்பாடலில் நிலைத்தேயிருக்கும்
துயரமாய்
மதியப் பொழுது

நிராகரிப்பு என்னும் ஆயுதம் ஒன்றுதான்
கையாளும் முறைகள் தான் வெவ்வெறானவை

நிம்மி
தூக்கிக்கிட்டுக் கொண்டதிலும்
இன்றைய என் ஆடையிலும்
மயில்கண் இருப்பது தற்செயலானது

         அக வெளிச்சத்தின் வழியாக வாசித்து உணரக் கிடைத்த கவிதையிது.
வேல்கண்ணனின் இந்தக் கவிதையை வாசித்த பொழுது அதிர்ச்சியில் தள்ளப்பட்டேன்
எனலாம். சார்லஸ்ப்யுவோவ்ஸ்கியின் கவிதை ஞாபகம் வருகிறது.

Long walks at night
That’s  what good for the soul;
Peeking into windows
Watching tired housewives
Trying to fight off
Their beer- maddened husbands. இதையொட்டிய இனியொரு கவிதையை நாம் வாசிக்கலாம்.
சுடர் வெம்மை

அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையைக் கடந்ததால்

அப்பொழுது நான் கடலுடன் பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்- பக்-24

எனக்கு இந்தக் கவிதை மாண்டி டக்ராக்-கின் புகழ்பெற்ற கவிதையை நினைவு படுத்தியது.


 Just because someone says they love you today
Does not mean they will love you forever
Feeling have ways of changing
Promises have ways of breaking
Just because someone kisses you passionately
Does not mean they wont kiss someone else
Kisses are not contracts of forever and ever
Caresses do not mean always together
Just because…………….
………………….
             அகவெளிச்சத்தின் வழியாக வாசிக்கப்படுகிற கவிதைகளாக
வேல்கண்ணனின் கவிதைகள் உள்ளது. முதல் தொகுப்பின் கவிதைகளுக்குரிய
இளமைப்பருவம் வசிக்கிறது. அகம் பற்றிப் பேசுகிற போது அகமாமணி திருமூலரை
நினைக்காமல் இருக்க முடியாது.

அகலிடைத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடைத் தெம்மெய்யைப் போத விட்டானைப்
பகலிடத் தும் இர வும் பணிந்தேத்தி
இரவிடத் தேஇருள் நீங்கிநின் றேனே- திருமந்திரம்-141

இசைக்காத இசைக்குறிப்பு ஒரு சிறந்த பாடலுக்குரிய சங்கதிகள் உள்ளத்தில்
பதிகிறது. பெரு நகர வாசிகளின் கல்வி மனமும் சமகாலத்தின் இலக்கிய மனமுமாக
எழுதி வருகிற கவிஞர்களில் வேல்கண்ணனும் இணைந்திருக்கிறார். நம் பணியைக்
கொஞ்சம் சிரமமேற்கொண்டு பகிர்ந்து கொள்ள முன் வந்தமைக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

வெளியீடு
ஆசிரியர்- வேல்கண்ணன்- அலைபேசி-9865887280
வம்சி பதிப்பகம்
டி.எம். சாரோண்
திருவண்ணாமலை-606 601
9445870995-04175-251468

என் கவிதை தொகுப்பு குறித்து இளஞ்சேரல்(கவிஞர், விமர்சகர்) எழுதியது

நன்றி : இளஞ்சேரல்

யாசித்தலின் வலி பற்றிய இசைக்காத இசைக்குறிப்புகள்

          
தடதடத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியின் தாள லயத்திற்கேற்ப தன் சுதியை ஏற்றி இறக்கி பாடிக்கொண்டிருக்கிறான் பார்வையற்ற பாடகன்.தேர்ந்தெடுத்த இசைக்குறிப்புகளை மட்டுமே தட்டியபடி இருக்கின்றன அவன் கையிலிருக்கும் கட்டைகள். சில்லரையுதிர்த்து கடக்கும் நம்மின் ரசிப்புத்திறன் அதற்குள்ளாக மட்டுமே இருக்குமென்பதாய் அவன் கற்பித்துக்கொண்டதாய் இருக்கலாம். யாசித்தலின் வலி பற்றிய இசைக்காத இசைக்குறிப்புகள் தேங்கிக்கிடக்கலாம் அவனிடம்.... இல்லையெனில் தொடர்வண்டியின் சக்கரங்களுக்கு பலியாகியிருக்கலாம்.

'இசைக்காத இசைக்குறிப்பு'

வேல்கண்ணனின் முதல் கவிதை தொகுப்பு...
இலைக்கு இலை நகர்ந்து அசைதலில் காற்றின் இருப்பை உறுதி செய்யும் கவிஞன்.
அணிந்துரை ஏதுமில்லாமல் வாசகனின் சுயத்தேடலுக்கு வழி விட்டிருக்கும் வேல்கண்ணனின் சுயம் பிடித்திருக்கிறது. அது அவரின் கவித்திமிராய் மிளிர்கிறது.
யதார்த்த புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றன தொகுப்பு முழுவதும்

ஆறுதல் (பக்கம் 6 முதல் கவிதை )
அடங்காத பசி
நிற்காத கண்ணீர் ரத்தம்
நிறையாக துளைகள்
செவிமடல்கள்
குறையாக நோய்தாகம்
மீளாத காலம் இளமை..
இன்னும் உடுத்தாத உடை,
முகமூடி பல உடுத்தியவை நினைவில் இல்லை
(சில கிழிந்தும் தொங்குகிறது)
வாசிக்காதது மாதிரியே
எழுதாதவைகளும்
எண்ணற்றவை...
பொழுதுகள் போதவில்லைதான்
நட்சத்திரங்களை
எண்ணுவதற்கு
ஆறுதல்
ஒரே ஒரு நிலவு...

நட்சத்திரங்கள் போல் நம்மைச் சுற்றிலும் துரோகம், சிக்கல், வாதை,ரணம்...... என பல ரூபங்களில் துன்பங்கள் தொடர்ந்தாலும் ஆறுதலாய் இருக்கும் ஒற்றை நிலாக்கொண்டு எல்லா துயர்களையும் துடைத்தெறியலாம்.

மௌனப் புரிதல் (பக்கம் 12)
உனக்கும் எனக்கும்
பொதுவானவை மௌனம்
இருப்பினும்,
நீ மௌனித்த வேளைகள்
என்னை கலவரப்படுத்துகிறது
நான் மௌனித்த வேளைகள்
உன்னை சந்தேதிக்க வைக்கிறது...
ஒரே மௌனம் இருவேறு தளத்தில் பயணிக்கும் இயல்பான தருண்மொன்றை அழகாய் பதிவேற்றியிருக்கிறார்.

உலோக மிகைக்கரு (பக்கம் 28)
பேரண்டத்தில் கடந்து செல்லும்
அடர் மேகம்
வெளியெங்கும் பரவியிருக்கும்
இசைத்துளிகளில் கரைகிறது

கொடிய பாலையில்
வெந்து தவிக்கும் காமம்
முழுநிலவின் ஒளியில்
கரும்பாறையாக உறைகிறது.

ஆழ்கடல் அடர்த்தியில்
மிதக்கும் ரகசியம்
சுவாசக்குமிழ் அமிழ்வில்
சிதறித் தெறிக்கிறது

அறியப்படாதவைகளில்
மிளிரும் கவிதை..
மொழியற்ற மௌனப் பெருங்காட்டில்
தொலைந்தும் போகிறது.

உலோக மிகைக்கரு
ஏதுமற்ற படிவம்
தொடர்கசிவு சொற்களில்
விந்துவால் சூல்கொள்ள
ஆரம்பிக்கிறது...
இப்படியாக சூல்கொண்டிருக்கிறன இவரது கவிதைகள்.

மௌனம், இசை, வீச்சம் போன்று சில சொற்கள் பல கவிதைகளில் வருவது தவிர்த்திருக்கலாம். குறுங்கவிதைகளை நீள்கவிதையாக்கும் பொருட்டு பின்னப்பட்ட வார்த்தையடுக்குகள் அயர்ச்சியையே தருகிறது(நவீனகவிதை, ஒழுங்கற்றக்கவிதை(பார்ம்லஸ்) என அதற்கு விளக்கம் அளித்தாலும்).
எதுவாக இருப்பினும் தேர்ந்த கவிதை தொகுப்பு என்பது என்வரையிலான மதிப்பீடு. வாழ்த்துக்கள் வேல்கண்ணன்


நன்றி : கவிஞர் யாளி கிரிதரன்(கோவை)


ரியாஸ் குராணா(கவிஞர்,விமர்சகர்)வின் பார்வையில் என் தொகுப்பு

ஒரு கவிஞனுக்கு தனது முதலாவது தொகுப்பே ஒரு சிறந்த அடையாளமாக மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. அந்த அசாத்தியம் வேல் கண்ணன் விசயத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நவீன கவிதைகள் அதிகம் அக்கறைகொண்ட சிறு படிமங்களும், அதற்குப் பிறகான கவிதைகள் அக்கரை கொள்ளும் கதைசொல்லலின் நீட்சியும் சந்திக்கும் புள்ளியிலிருந்து, இவருக்கான கவிதை நிகழ்கிறது.

தனது பிரதிகளை கவிதையாக மாற்றிக் காட்டுவதற்கு வேல் கணண்ணன் கடைப்பிடிக்கும் உத்தி மிக முக்கியமான ஒன்று. அதை மிகச் சரியாக இனம் கண்டு கொள்வதினுாடாக, இவரின் கவிதைச் செயலை மேலும் வளர்த்துச் செல்வதற்கு நாம் உதவலாம் என்றே கருதுகிறேன். ஆனால், இங்கு அப்படி எதுவும் நடப்பதில்லை.

விமர்சித்து கிடப்பில் போடுவார்கள். அல்லது, கவனிக்காமல் கைவிட்டுவிடுவதினுாடாக ஒதுக்கிவிடுவார்கள்.

அனேகமாக திரைப்படங்களில் பயன்படுத்தும் உத்தி, படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்களுக்குள் அனைத்தையும் அறிமுகம் செய்துவிடுவார்கள். அதிலிருந்து கதையை நகர்த்திச் செல்லுவதினுாடாகவே, பார்வையாளர்களுக்கான சவாலை( வாசிப்பை) நிகழ்த்துவார்கள்.

அதுபோலதான். இவருடைய கவிதைகள் ஆரம்பிக்கும் விதம் மிக முக்கியமானது. எப்படி தனது பிரதியை கவிதையாக மாற்றிக் காட்டப்போகிறார் என்பதற்கான ஒரு முக்கிய சமிக்ஞையை தொடக்கத்திலே உருவாக்கிவிடுகிறார். அதைத் தொடர்ந்து, நழுவிச் செல்லும் சிறு படிமங்களும், மெலிதான ஒரு நறேட்டிவ் ( கதைசொல்லலும்) தொடர்கிறது.

இந்த ஸ்டார்ட்டிங் அதாவது ஆரம்பம் என்பது, அனேகமாக கவிதையை நிறைவடையச் செய்யும்போது பயன்படுத்தும் ஒரு அதிரடிப்புக்கு நிகரானதுதான். பிரதியின் முடிவில் ஒரு சாக் தருகின்ற அதிரடிப்பை குறிவைத்துதான் கவிதைகளை இதுவரை நகர்திக்கொண்டிருக்கிறார்கள். இவருடைய கவிதைகளும் அப்படியேதான் இயங்கினாலும்,

இவருடைய ஸ்டார்டிங் மிக முக்கியமானது. அந்த ஆரம்பம் என்பது நம்மை கவிதையைப் பின்தொடர அழைப்பதற்குப் பதிலாக புதியதொரு வேலையைச் செய்கிறது. அந்த இடத்திலிருந்து, இந்தப் பிரதி எப்படி தன்னைக் கவிதையாக நிறைவடையச் செய்யப்போகிறது என்ற ஒரு புறத்தில் சிந்திக்கவும் செய்கிறது.

அந்த வகையில், சமகால கவிதை வெளிக்குள் நுழைந்து தனக்கான இடத்தை உருவாக்கும் ஆற்றல் இவருடைய கவிதைகளுக்கு இருக்கிறது. வருக,வருக என அனைவரும் அன்போடு வரவேற்போம்.

கவிதைச் செயல் என்பதை முற்றிலும், கவித்துவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்தது மாத்திரம்தான் என நம்பிக்கொண்டிருக்பார்களோ என எப்போதும் எனக்கு சந்தேகமிருக்கிறது.

கவிதை உருவாக்கத்திலுள்ள தொழில்நுட்பங்கள் தமிழில் மிகக் குறைவு. சொல் தேர்வு தொடங்கி, அதை எடுத்துரைப்பது வரை. இது இவருக்கு மாத்திரமுரிய பிரச்சினையல்ல. தமிழ்க் கவிதைகளுக்குரிய பொதுவான பிரச்சினை என்றே நினைக்கிறேன்.

ஒரு பிரதியை கவிதையாக நிறைவடையச் செய்வதில் இந்த தொழில்நுட்பத்தின் பங்குதான் 90 வீதமானது. அவைகளில் கவனம் செலுத்துவதோடு, ஒரேவகையான எடுத்துரைப்பு முறைமையை தவிர்த்து, புதிய புதிய முறைமைகளை சிந்திக்கலாம் என்பது எனது முக்கிய விமர்சனமாகும். கற்பனைச் செயல் ஒரேமாதிரியாக இருக்கும்படி தொடரலாம். அது சிலநேரங்களில் ஒரு கவிஞனின் தனித்த அடையாளமாக மாறும் வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கிறது.

எடுத்துரைப்பு என்பது, கவிதையாக நம்பும் பிரதியினுள், அங்கு உருவாக்கப்படும் சூழல் மற்றும், கவிதைச் சம்பவங்களின் உள்ளார்ந்த இயங்குதல் விதிகாளால் தீர்மானிக்கப்படவும், வழிநடத்தப்படவும் வேண்டும்.

இவரின் ஒரு கவிதை இதோ.

அறையில்

பழுப்பேறிய சுவரில் தெரிக்கிறது
எனக்கான பொழுதுகள்
அதன் நிழலில் கரையத்
தொடங்குகிறது யாரும்
தீண்டாத என் ஓவியம்

சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானல்நீரில்
நெளிகிறது என் நிழல்
இறுதிவரை வருவேன் என்றவனும்
நிழலுடன் தங்கிவிட்டான்

இந்த அறைக்குள்ளேயே சரியத்
தொடங்கிவிட்டது வெயில்
பேசியே சலித்துவிட்டது சிலந்தி
பிசுபிசுப்பாய் கசிந்தது
புழுக்கத்தின் வீச்சம்

இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம்

நன்றி : ரியாஸ் குராணா

என் கவிதை தொகுப்பு குறித்த முதல் பார்வை

இசைக்காத இசைக் குறிப்பு
 ---------------------------------------

                                                  -இது இவருடைய முதல் கவித் தொகுப்பு.
 நன்றியைத் தவிர வேறேதுவும்  முன்னுரை இல்லை. பெருங்கவிகள் யாரும் அணிந்துரையும் தன்னைப் பற்றிய செய்திகளும் ஏதுமற்று
இவர் தம்  கவிதைகளையே பேச விட்டுருக்கிறார். பிறமொழி அலங்கார சொற்கள் பெரும்பாலும் இல்லை.. அழுத்தான உணர்வைச்
சொல்லும் எளிதான அழகான தமிழ் சொற்களுக்காகவே இவரை மழைச் சாரலால் வாழ்த்தலாம். கவிதைகளில் நிறைய இடங்களில் மௌனத்தின் பொருமலோசை கேட்கிறது..

மௌனப் புரிதல் கவிதை  வெகு அழகான புரிதல். முத்தங்களை சேகரிக்கும்
பெட்டகம்..  போன்று  பெரும்பாலும் அழகான அகப்பொருட் கவிதைகள்.
“ பாலத்தின் கீழ் ஓடும்
கருஞ்சாக்கடையின் முனையிலிருந்து
மேலெழுந்து நிற்கிறது எனது நகரம் “ ..

“ பெருங்காதை இளவரசியை மீட்பதற்கு
மிஞ்சியிருப்பது பொய்க்கால் குதிரை...”

“ நித்திரையற்ற இரவு
என் விழிக் கருவளையமாய்...”

“ சிலுவைகளின் மீதான அச்சங்கள்
நடுநிசி விழிப்புகளை தந்து விடுகிறது... “
“ மணலை அள்ளி மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து ஓடிக்கொண்டிருக்கிறது நதி...”
“ கழைக்கூத்தாடி சிறுமி காசுகேட்கிறாள்...
செல்லும் பேருந்து வந்துவிட்டது
என்னிடம் இருப்பது ஒன்றுதான்
பயணத்தைத் தொடங்கவில்லை இன்னும் நான்.”
“ எரியும் மரங்களில் கேட்கிறது
வீணை அழும் ஓசை...”
“ கர்ப்பகிரகத்தில் எரிரொலிக்கிறது
கருவறையற்றவளின் விசும்பலோசை..”.
“ தேங்கிய நீரில் காற்றின் அதிர்வட்டம் சொல்கிறது
மழையின் கதை...” ----- என அட்டகாசமான கவிதைக் கூறல்கள்  தொகுப்பெங்கும்..

செரிவான இருளறையில் கரும்பூனையின் நகர்தலென சில மறைமுகக் கவிதைகள் நம் கால்களை ரகசியமாய் சுரண்டுகின்றன... வலியின் வீச்சமெடுக்கும் சில கவிதைகள் கொடூரமானதாய் இருக்கிறது.. அவை நவீனக் கவி உருக்கான முயல்வுகளாய் இருக்கலாம்..

    ஒரு சில இடங்களில் நீள் கவிதைக்கான முயற்சிகளில் சின்னச் சின்னதாய்
ரசிக்கத்தக்க குறுங்கவிதைகள் கொஞ்சம் பொருந்தாது கோர்க்கப்பட்டுள்ளன...
ஆனால் அவை அத்தனையும் தனித்தனியாக ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாது..

     “ ஒரு சொல் பாதாளக் கரண்டியிலும் அகப்படாத கிணற்றாழங்களில் கசியும் துளை “ ... என்ற இவருடைய கவிதை வரி போல   என்னால்  உணரப்பட்டவையல்லாது பெரும்   பொருட்கள் இவர் தொகுப்புக்குள்   உலவுவதாக நினைக்கிறேன்...

     நெடுநாள் முன்பே அறிமுகமான நண்பன் என்பதால் என் விமர்சனம் ஏதும்
மனச்சுருக்கம் ஏற்படுத்தாது என நம்பிக்கையுடனும் மனங்கனிந்த
வாழ்த்துக்களுடனும்... ----

கனிமொழி.ஜி.

நன்றி :  தோழி கனிமொழி