Showing posts with label 2018. Show all posts
Showing posts with label 2018. Show all posts

தொடர் துரோகங்களால்
தழும்புகளின் அளவு பருக்கின்றன
6.1 அடியில் சில அங்குலமே மிச்சமுண்டு.
சடுதி பயணப் பொழுதில்
நிமிடங்களில் தவறிவிடுகிறது இறுதிப் பேருந்து.
'பயணத்திற்கு உகந்தது அல்ல உங்களின் மனவுடல்'
மருத்துவ அறிக்கை.
தோட்டத்து பழச்சாறு மீருசி
ஒரு சிலதைத் தவிர
எப்போதுமே அந்த சிலதிலிருந்து
முன்பொருகாலத்தில் புதையுண்ட
சொல்லொன்றை அகழ்ந்து எடுக்கிறேன்.
காணக் கிடைக்காத மலர் என்று தோழி சொல்கிறாள்
நெடியபோதை தரும் பழமையான வைன் என்கிறான் நண்பன்
1178 வருடத்திற்கு ஒரு முறை வரும் கிரகணம் என்கிறார் அப்பா
எனக்கு
வெளியேறுவதற்கான கதவு என்று தோன்றுகிறது.

நிகழ்

Image may contain: text
இடது திருப்பத்தில் முதல் கதவின் வழி
பெருந்திரளான இரவு
தனித்த பகல்
தயங்கும் மதியம்
மரபு வேலியில் படர்ந்த கலப்பின கொடியில் நவீன மலர்
பெருந்திரளான நிறம்
தனித்த வாசனை
அடர் இதழ்
நித்திய வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களின் இடையே
சாம்பல் பறவையொன்று
பெருந்திரளான சிறகு
தனித்த அலகு
மெலிந்த உடல்
சலனமற்ற ஆழ்கடலின் மேற்பரப்பில் வெளிறிய உடல்
பெருந்திரளான நாம்
இறந்த காலம்
உறையும் புறக்கணிப்பு
- வேல் கண்ணன்
நன்றி : சொற்கள் - காலாண்டிதழ் மார்ச் 2018

இருள்

மெதுவாக உள்நுழைந்து நெளியும் காதல்
புறம் பேசச் சொல்கிறது
மெல்லிய கனத்துடன் அலைவுறும்
இறகு காற்றுடன் உயிர்த்திருக்கிறது
மீச்சிறு பனித்துளிகள் நிலமெங்கும்
வெண்மீன்களை பரப்புகின்றன
மென்னொளி கீற்றில்
மிகச் சன்னமான பாடலை
கருப்பு வெள்ளை ஓவியம் இசைக்கிறது.
பளீரிட்ட வெளிச்சம்
இருள் மடிந்த கணம்
வாரிச் சுருட்டிக் கொள்கிறது
திட திரவ சுவாச காமம்.
-வேல் கண்ணன்
நன்றி : சொற்கள் - காலாண்டிதழ் மார்ச் 2018
Photography : Aamre Carthick

What is there to sing in glory of my land

என் நிலம் சார்ந்து பாட என் நிலத்தில் என்ன இருக்கிறது
தெருக்கள் முழுவதும் குழந்தைகளின் சிதறுண்ட உடல்கள் குவிந்த பிறகு
'இங்கே வீடிருந்தது' என்ற சுட்டிக்கு பிறகு
தானிய நிலங்கள் எரிந்து சாம்பலான பிறகு
உங்களின் அமிலங்களால் நதி நிரம்பிய பிறகு
உங்களின் க்ளோரின் வாயு எங்களின் சுவாசத்தில் கலந்த பிறகு
என் நிலம் சார்ந்து பாட என் நிலத்தில் என்ன இருக்கிறது
முன்பு இருந்ததைப் பாடினால்
நாஸ்டால்ஜிக் என்றும்
சமூக அமைப்பைப் பாடினால்
பின் நவீனத்துவம் என்றும்
அழிந்த காரணம் சொன்னால்
பிரிவினை பேசுகிறான் என்றும்
அரசியல் விவாதித்தால் துரோகி
என்றும் எத்தனை விதமான தலைப்பு..
என் நிலம் சார்ந்து பாட என் நிலத்தில் என்ன இருக்கிறது
இப்போது உங்களின் நிலத்தில் உள்ள எல்லாமே
என் நிலத்திலும் இருந்தது
கூடுதலாக மனிதமும்
.....
Vel Kannan’s poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
• 
What is there to sing in glory of my land
As it stands today....
After heaps of torn limbs and torsos of children
filled the streets
After the allusion ‘here was a house’
After agricultural fields had burnt and turned to ashes
After the river became brimming with your acids
After your chlorine gas mixed in our breath.
What is there to sing in glory of my land
As it stands today....
If I hail what prevailed earlier
- Nostalgic
If I sing about the social structure
- Post-modernism
If I state the cause for the chaos and annihilation
- Divisive
If I discuss politics
- Traitor
Alas, what all labels and adjectives….
What is there to sing in glory of my Land
As it stands today
All that are in your land now
were in mine too....
In addition – Humanism.

ஆங்கில மொழி பெயர்ப்பு : கவிஞர் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நன்றி: கவிஞர் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

ஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு


இரவு உதிர்ந்து கொண்டிருந்தது.
நிலமிழந்தவர்களின் முகாமிலிருந்த
இறந்தவர்களைச் சுமந்து செல்லும் வாகனமொன்றில்
நட்சத்திரங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.
அதில் எண் வரிசையைப் பதித்துக் கொண்டிருந்தார்
XXX  இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான வானத்தை அகற்றுவதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
நிலவை மறைக்க அவர் குழந்தைகளைப் பாட கட்டளையிட்டு இருந்தார்.
ஆணவத்தின் பிடியுண்ட சொற்களை அறியாத குழந்தைகள் 
பாடுங்கள் என்றவுடனே நடனமிட்டு பாடத்தொடங்கி விட்டார்கள்.
நிலவற்ற பறவைகள் மறையத்தொடங்கின.
அவரால் ஒரு நாளும் முழு இரவை சேகரிக்க முடியவில்லை.

பகல் கரையத் தொடங்குகிறது.
செயற்கைக் கருமுட்டை தயாரிக்கும் நிறுவனத்தின்
குளிர்ப்பெட்டி இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில்
வெயிலை அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
பரப்பிக்கிடந்த வெக்கையை நெகிழியால் வழித்துக் கொண்டிருந்தார் 
XXY   இலச்சினை தரித்த அதிகாரி.
அனைவருக்குமான நிலத்தை சுருட்டிக் கொள்வதே அவருக்கு இடப்பட்ட கட்டளை.
இலை உதிர்த்த மரங்கள் 
அணுக் கழிவால் கரையொதுங்கிய 
மீனின் கண்களாய் வெறித்துக் கொண்டிருந்தன.
அவரால் எந்நாளும் ஒரு பகலை சேகரிக்க முடியவில்லை.

புத்தனின் விரல் நுனி கதிரொளியால் மினுக்குகிறது
மண்டிக் கிடந்த இருள் உதிரும் நள்ளிரவு
ஆதித்தாய் கூரையற்ற ஒரு வீட்டினை நெய்து கொண்டிருக்கிறார்.

அரூபக் காலக்காட்சிகள் சிதிலமின்றி நீரோவியங்களாய்
ஒப்புக் கொடுத்துவிட்டு கடலைகள் திருப்பிச் செல்லுகின்றன. 

-வேல் கண்ணன்

நன்றி : விகடன் தடம் ஜனவரி 2018