Showing posts with label 2019. Show all posts
Showing posts with label 2019. Show all posts

பதங்கமாதல்

Image result for chennai city bus 12b




வெக்கைப் பேருந்தினுள் எழுமிச்சைப் 
பெண்ணொருவர் பச்சை வெள்ளரியை 
முன்பின்பாக நடந்து கூவி விற்கிறார்
மாம்பழ அம்மாவிடம்
கிளை நீட்டி கேட்கிறது வெண்டை பிஞ்சு

எழுமிச்சை இலவசமாகத் தந்த பசேலென்ற 
பாம்பைத் தலை வால் கிள்ளித் தருகிறார் மாம்பழம்

ஒடிந்த பாம்பு
வெண்டைப் பிஞ்சின் வாயில் நலுங்குகிறது 

விஷவெக்கை முறிந்து 
பேருந்தில் குளுமை நிரம்புகிறது

(12B-க்கு)

நன்றி  : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

இரண்டு கவிதை கல்கி அக்டோபர் 13, 2019

Image may contain: 2 people, including Vel Kannan, people smiling

கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை:

1. ரொட்டி
--------------

எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்;
கடைசி மகள் உவர்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்;
அலுவலக நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்;
எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று
முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் நெரூதா,
உங்களின் ரொட்டிகளைப் போல..

2.நம் வீடு
------
என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.

நன்றி : கவிஞர் Amirtham Surya(அட்டகாசமான வடிவமைப்புக்கு நன்றி நண்பா) &
கல்கி வார இதழ்.

உருண்டோடும் மூன்றாம் உலகம்




மடியில் கிடந்த இரண்டு பந்துகளைவிடச்
சின்னஞ்சிறிய சிவப்பு நிறப்பந்து
உன் இடது பிஞ்சுக் கையில் கச்சிதமாய்ப் பொதிந்திருந்தது
'கேட்ச்' என்று என்னை நோக்கி வந்ததைத் தவறவிடுகின்றேன்
கரைபுரண்டு ஓடும் நதியின் குளிர்ந்த கூழங்கற்கள் வந்தடைகின்றன
அடுத்ததாக மூவண்ண பந்தை
வலதுப் பிஞ்சிலிருந்து எறிய, தவறவிடுகின்றேன்
மிதக்கும் நந்தவனத்தில் பதினோரு துளையிட்ட
புல்லாங்குழலை மாயா வாசிக்க கேட்கிறேன்
இறுதியாக உன் இருகைகளிலும் பிடித்தெறிந்த
பலவண்ணமுள்ள பந்தைச் சரியாகப் பிடித்த நொடியில்
கிடுகிடு பள்ளத்தாக்கில் இவ்வுலகை இழுத்துச் செல்கிறது
பெரும்பாதரசக் குண்டு

(சோலைமாயவனின் மாயாவிற்கு )

நன்றி : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:


தற்கொலைக்கு முடிவெடுத்து
கொலை செய்யத் துணிகிறேன்
கொலை
கொலைகள்
கொத்து கொத்தாய் கொல்வதற்கு
சரியான வழி யுத்தமென..
பலனாக கிடைக்கும்
சிதிலமடைந்த நகரங்கள்
அடையாளம் சிதறுண்ட தேகங்கள்
என்பதை நினைவிலும் சகிக்காமல்
தற்கொலையுண்டேன்
புனிதம் தழுவிக்கொண்டது
---
நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு

நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது 2வது கவிதை:

மகனே! சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியம் பாட்டன் காலத்தியது என்று தாத்தன் சொன்னார் அவருக்கும் அவரின் தாத்தன் சொன்னதாம் அதோ, ஓவியத்தின் வலது மூலையில் தினவெடுத்த தோளுடன் இருப்பது உன் பூட்டன் நடுவில் திசைமுழுக்க பார்வையை வியாபித்திருக்கிறாரே அவரே, ஆதித்தாய் முதலில் காணுற்ற போது இந்தளவிற்கு இரைச்சலில்லை தூரத்திலிருந்து அகவல் ஒலியும் சிற்சில பரபரப்பும் நிலவியது தாத்தனுக்கு ஒளி ஒலியுடன் வாசனையும் சமீபத்திருந்தது. என் பால்யத்தில் முதன் முதலாக செல்கள் அரிக்கத் தொடங்கியிருந்தது இன்று கரையான்கள் கூடாரமிட்டு இருக்கின்றன விரைந்து வா கோடாரி கொண்டு பாளங்களாக பிளந்து எடுப்போம் ---- நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு

உறக்கம்

No photo description available.

அடர்ந்த இரவில் உறங்கும் குழந்தை
நீண்ட பயணம் செல்கிறது
நீண்ட இரவில் உறங்க முற்படும் நாம்
வட்ட வடிவ பயணத்துக்குள் நுழைகிறோம்
*
ஆழ்ந்த இரவின் உறக்க எல்லையில்
ஒரே சமயத்தில் இரண்டு கனவுகள்
ஒரு கனவில் நானும் ஒரு கனவில் உறக்கமும்
கனவு காண்கிறோம்
அக்கனவுக்குள் நித்தியதுயில் கொண்ட நீங்கள்
நகரும் நத்தை கொம்பின் மீதான பனித்துளிக்குள் பால் வீதி
*
ஒரு முறையேனும் ஓசை எழுப்பாமல்
இரவுக்குள் நுழைந்து விட வேண்டும்
இரவு நுழைவது போல
--
நன்றி : சஞ்சிகை , 

ஜூன்'19 'க்ளைமேட்' கலைவெளி மாத இதழில் வெளியான எனது கவிதை.


இரண்டு கவிதை:
----------------------
1
நெளிந்த சொற்களுக்குள் மெனெக்கெட்டு
எப்படியோ மீனை பிடித்துவிட்டேன்.
செதில் நீக்கம் செய்துகொண்டிருக்கையில் 
பூண்டு மஞ்சள் கல் உப்பை தயார் நிலையில் வைத்து இருக்கிறீர்கள்.
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே குழம்பை கொதிக்க வைக்கிறீர்கள்
தூய்மையான துண்டாடிய மீன்களை உங்களிடம் தருகிறேன்.
"தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது, மீன் எங்கே?"
இரக்கமில்லாத உங்களின் கேள்விக்கு
எங்கிருந்து கொண்டுவருவது கவிதையை

----------------------
2
ஒவ்வொரு நாளையும் ஒரு வட்டத்துக்குள் கடக்கிறேன்.
நேற்றைய வட்டத்தின் உட்புற சுவர் மஞ்சள்
முன்தினம் கரும்பச்சை
அதற்கும் முன் அடர்நீலம்
'அதெல்லாம் வேண்டாம்'
மத்திமவயது பெண் கதவை சாத்தும்
இன்றைக்கு கருப்பு
என்றென்றைக்குமே கனவுக்குள் வெள்ளை மட்டுமே உலவுகிறது

--
No photo description available.

நன்றி : 'க்ளைமேட்'