Showing posts with label 2020. Show all posts
Showing posts with label 2020. Show all posts

தொடரும்

என் மீதமர்ந்த பறவை
இளைப்பாறிய பின் பறக்கிறது.

மீண்டும்
அமரும் வரை
பின்
தொடரும்
என் கிளை.

பொலிவற்ற முகங்கள்
இருள் கவிழ்ந்த தேவதைகள்.
இலையசைவு துளியுமில்லை
அனல் சுவாசம்
குளிர் வற்றிய கோடை நிலவு
நிழலற்ற நெடுஞ்சாலை முடிவற்ற வானம்
அயர்ந்த உடல் அசைக்கவியலா கால்கள்
அந்தியில் தொடங்கும் ஒப்பாரி நடுஇரவுக்கும்
வலிமுனகல் நடுவே உறக்கம் மிகவும் கடிது
நாளொன்று நெடுயுகம்
ஊரடங்கில் காலமும் முறுவலித்துக் கொண்டிருக்கிறது
ஓய்வற்ற பசியோ கொடிதினும் கொடிது

கனவில் வந்த சிவன்
---------------------------------
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்

இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்

தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்

ஓவியம் : சீனிவாசன் நடராஜன்