Showing posts with label வார்ப்பு. Show all posts
Showing posts with label வார்ப்பு. Show all posts

ஒரு வரி கூட எழுதவில்லை



ஒரு வரி கூட எழுதவில்லை
முதல் ஜாமம் கடந்து விட்டது
இரண்டாம் ஜாமம் கடந்து போகிறது
ஒரு வரி கூட எழுத முடியவில்லை

இள மஞ்சள் இளங்காற்று தொடரும் கண் அயர்ச்சி
பதற்றத்துடன் எழுதல் அல்லது எழுப்பபடுதல்

இயற்பியல் சித்தாந்தங்களின்
பக்கங்கள் வலுக்கட்டாயமாக
திருப்பப்படும் திணிக்கப்படும்

பற்றிக்கொண்ட வேகம்

வெப்பம் வெப்பக்காற்று
வெக்கை வெக்கை வெக்கை
தெறித்து விடும் கண்ணெரிச்சல்

நகுலன் ஒரு சமயம் எரிந்தது போல்
காண்பதெல்லாம் 

என்கையில் ஒரு கத்தி எதிரே பல
தளர்ந்த நடை நரம்பு தளர்ந்த மஞ்சள்
இருப்பினும்
தளராத நெரிசல் அதிகரித்த கவுச்சி

பாதி வேக்காட்டை முழு வேகத்துடன் முழுங்கி
சாயும் போது ........'ஒரு வரி கூட எழுதவில்லை
இன்று எழுதி விட வேண்டும்
ஒரு வரியாவது' 

நன்றி : வார்ப்பு 

காலச்சுவடுகள் *

வார்ப்பு குழுமத்தின் படமும் வரிகளும்



 ஆதாரமின்றி சுழலும் சக்கரத்தில்
மேலும் கீழுமாய் உருளும் நாகரிகம்
மேடு பள்ளங்களை உருவாக்கி -
சீரமைப்பு நடப்பதாக அறிவித்து -
கொண்டேயிருக்கும் அதிகார ஆளுமைகள்

நிற வேறுபாடின்றி எரிக்கும் நெருப்பு
பிணவாடையில் கரையும் பேரன்பு
ரத்த ஆற்றில் மூழ்கும் மனிதநேயம்
கழிவுகளை உறிஞ்சி கொள்ளும் நிலம்
மேலும் வலியது வெல்லுமென சமாதானங்கள்

இப்படியாக பதிந்த சுவடுகளை காலம்
கடற்கரையில் சிறுமி கூழாங்கற்களை
சேகரிப்பது போல் சேகரிக்கும்
இரைச்சலின்றி.  

* படமும் தலைப்பும் வார்ப்பு  குழுமத்தை சார்ந்தது
நன்றி : வார்ப்பு

ஒரு விண்ணப்பம்

  
தெய்வமொன்று நேரில் வந்து
'வரமொன்று தருகிறேன்' என்றது.
நம்புங்கள், தமிழில் தான் பேசியது.
வியப்பான வினாவுடன் பார்த்தேன்.

"புரிகிறது, இருப்பதே என்னிடம் ஒன்று தான்

ஒன்றுக்கு மேல் கேட்டு விட்டால்?"
சரிதான். கொடுத்தே நொந்து போயிருக்கும் போல.

"வரம் பலிக்க வேண்டுமென்றால்

எனக்கொன்று செய்யவேண்டும் ..."
அது தானே பார்த்தேன்....

"நான் நான்கு கோப்பையை தருகிறேன்

ஒன்றில் தூயபாலை நிரப்பவேண்டும்"
நிரப்பினேன்.

"அடுத்ததில் தூயமது....."

இடைமறித்தேன்; நிரப்பினேன்.

உற்று என்னை கவனித்தபடி

"மூன்றாவதில் மனித ரத்தம்..."
நொடியில் நிரப்பினேன்.

"நான் மனித ரத்தம் கேட்பது

உனக்கு அதிர்ச்சியை தரவில்லையா ... ?"
'இல்லை. பழக்கப்பட்டுவிட்டது.
புத்தனின் பெயராலேயே இங்கு ரத்தம் குடிக்கப்பட்டது.
பிறகென்ன ...
நொடியில் நிரப்பிய காரணமும் அதுதான்'

தெய்வம் மெளனமானது.

நான்காம் கோப்பையை காட்டி
"தூய மழைநீர் ..." என்றபடியே மறைந்தது.
தூக்கி வாரிப்போட்டது எனக்கு.

பித்தேறி வெற்று கோப்பையுடன் அலைகிறேன்

உங்களிடம் இருந்தால் தாருங்கள் ...
தருபவர்களே வரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்
தருவீர்களா ... ?


நன்றி : வார்ப்பு

காணவில்லை : நீயும் நானும்


நம்மிடையே நிகழ்ந்த நிகழ்வொன்றில் 
ஐந்து தலை நாகமொன்று 
நிரம்பிக்கொண்டது இடை....வெளியை. 

உன்னுடையது என்று நானும் 
என்னுடையது என்று நீயும் 
தனித்தனியே விலகிக்கொண்டோம் 

நான் விட்டு சென்ற ஆளுமையையும் 
நீ தெளித்து சென்ற அலட்சியத்தையும் 
விழுங்கி செழித்தது 
மாறிமாறி பழிச்சொன்ன சொற்கள் 
உற்சாககபானமானது 

ஒரு பின்மாலையில் 
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர 
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய 
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம். 

சில நாட்களாகவே 
நாமிருவரையும் காணவில்லை 



நன்றி : வார்ப்பு 

கொடூர விலங்கொன்றின் சாயை


கொடூர விலங்கொன்றை வளர்த்து வருவதாக சொன்னார்கள்
கொடியது ஆயினும் சைவ உண்ணி தான்,
வற்றினாலும் புசிக்கது அசைவத்தை எனவும் சொன்னார்கள்

விரல் நீள மெமரி கார்டில பதிவு செய்தவன் கேட்டான்
வளர்ப்பது ஏன் ? வெளியேற்றப்படும் நாள் எது ?
வெள்ளை நிற சட்டை அணித்தவர் பதில் சொன்னார்:
சூழல் கனிந்து வரும் காரணம் அன்று தெரியும்

மறுநாளில் தலை முதல் வால் வரை செய்தியானது

உலக அரங்கில் ஆலோசித்தனர்
விண்வெளி கண்கள் இருப்பிடம் தேடிமொய்த்தன.
தீனி செலவு கணக்கிடப்பட்டது ரகசியமாக
உள்துறை ஆட்கள் வேவு பார்த்தார்கள்

சந்தையில் விலங்கின் கற்பனை ஓவியமும்
கட்டுடைத்த கதைகளும் விற்று தீர்த்தது.
கேலிச்சித்திரம் ஒன்று எழுதி எழுதி அழிக்கப்பட்டது.

பிறிதொரு நாளில்
பெருந்தலைவனின் தலைமறைவு குறித்தும்
நடிகைகளுடன் தொடர்பு குறித்தும் செய்தியானது.

ஆனாலும்
குழந்தைகள் விளையாடும் தோட்டத்திலும்
கனவிலும்
கொடிய விலங்கு ராட்சத பேருருவமாய்
உலவிவருகிறது இன்னமும்.

நன்றி : வார்ப்பு
          ~ ~ ~

ஆத்மா நாம் நினைவாக ..







நலம் விரும்பிகளே!


நானிருப்பது கரையான்புற்று
பாம்பு வரும் முன் 
வேறிடம் சென்றடைவேன்
பறவைகளின் கூடு
ஆமைகள் அடைகாக்கும் குழிகள்
தவறினால் விழி திறந்த நிலம்

ஊதாரிகளுக்கு 
உங்களின் கதவுகளிலும் சன்னல்களிலும்
தெரியும் வானம் கொள்ளாது
முடிவிலிகளைத் தேடிக்களைத்த
கால்கள் இளைப்பாறுகின்றன அலைகளில்
வெடிப்பில் கசியும் இரத்தத்தில்
பசியாறுகின்றன மீன் குஞ்சுகள்
வெளுத்து பிளந்த உதடுகள்
ஈரக்காற்றில் சுவாசிக்கின்றன

சுமந்த புத்தகங்கள்
இறக்கைகள் அல்ல என்பதை நான் அறிவேன்
சிலுவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிக
படைப்பு அனுபவம்
பார்வை உலகம்
எனக்கும்.

அவ்வப்போது
காறியுமிழ்ந்த எச்சிலை துடைத்துவிடுகிறேன்
மேல்விழுந்த கற்களை புதைத்துவிடுகிறேன்
வீச்சமும் வடுக்களும் இருக்கத்தான் செய்கின்றன

தளர்த்திய கச்சையின்
இடைத்துணியின் பின்னிருக்கும்
இளஉறுப்புகளினால் பெரிதான சலனமில்லை
தன்னை சூடேற்றி கொள்வதை தவிர
நேர்ப்பார்வையை தவிர்ப்பது நானல்ல.

நீளஅகலங்களை குறித்து
குழி வெட்டுதலுக்கோ
சிதையூட்டுவதற்கோ
சொல்லியனுப்ப வேண்டியதில்லை
சில நொடிகளில்
மரணிக்க நேரிடும் என்னை
இந்த நதியே இழுத்து செல்லும்
கரையொதுக்காமல் 

(ஆத்மாநாமிற்க்கு.... )

நன்றி : வார்ப்பு    

*************************





சென்றுன் எதிரியைத் தேடு
நீ வளர்த்த
பூனையின் மயிர்க்கால்களிலும்
தண்ணீர்பாம்பின் உடலிலும்
ஒட்டியிருக்கக் கூடும்.
வெவ்வேறு வெளிச்சத்தின் சாயலுக்கேற்ப
முகங்கள் மாறக்கூடும்
கூடுவிட்டுக் கூடுபாயவும் கூடும்.

நிதானித்த வேளை; தோல்சாய்ந்த வேளை
வெப்ப தகிப்பின்
பின்னிரவில் கண்விழித்த பொழுது
நண்பகல் மரணச்செய்தியின்
வெற்றுச் சுட்டில்.
இவ்வுலகின் இருண்ட
பகுதியுனுள்ளும்
சென்றுன் எதிரியைத் தேடு *
உன் நிழலிலும் கூட.

(*நன்றி :  ஆத்மாநாமின் கவிதை வரி ) 

இது ஒரு மீள்பதிவு
நன்றி : உயிரோசை 

*********************

ஆத்மா நாம் :::  எனக்குள் தணியாத தழல் ஏற்படுத்தியவர். எனது பார்வையை  பெரிதும் மாற்றியதில் பெரும் பங்கு இவரின் படைப்புகளுக்கு உண்டு. இயற்பெயர் :  மதுசூதன். பிறப்பு : 1951, 18 , ஜனவரி.  மிக முக்கியமான - சிறந்த - அரிதான இலக்கியவாதி.
'ழ' வின் ஆசிரியர். கவிதை எழுதுபவர்களும் எழுத நினைப்பவர்களும் ஆத்மா நாமை தவறாமல் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
மேலும் அறிய 'ஆத்மா நாம் படைப்புகள்' (வெளியீடு : காலச்சுவடு).
இம்முன்னுரையில் குறிப்பட்டது போல் இவரின் கவிதையின் இதயம் ஒரு "நிச்சலன மெளனம்" தான். 
மிக நேர்த்தியாய் உடை அணியும் பழக்கம் உடையவர் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். லுங்கி மற்றும் உள்ளாடைகளுடன்
இவரை பார்த்தவர்கள் மிக மிக குறைவு. அப்படியான படைப்பாளி  06.07.1984 அன்று  பேன்ட் சர்ட்டை கழற்றி படிகளில் வைத்து விட்டு கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு  தள்ளிய இறுதி நாட்களின் மனச்சிதைவை  நினைத்தால் மனம் பதறுகிறது. 
இதன் பதிப்பாசிரியர் திரு. பிரம்மராஜன்   அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி 
இனி அவரின் கவிதையில் இரண்டு  :

மறுபரிசீலனை

நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்
நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன.
நீ பழைய மனிதன் தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்
நான் மனிதன்தானா  என்று சோதித்துக்கொள்ளும்
நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள்ளென
பச்சைப் புல்வெளியிடை சிக்கிக்கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப்பறக்கும் பிணத்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்
தூங்குபவர்களையும் தூங்குவது போல் நடிப்பவர்களையும்
எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்
புறப்பட்டாகிவிட்டது கருப்புப் படை.

 திருஷ்டி

பானைத்தலை சாய்த்து
புல் பிதுங்கும் கைகளோடு
சட்டைப் பொத்தான் வெடிக்க
தொப்பையில் புல் தெரிய தனியாய்
யாருன்னைத் தூக்கில் போட்டார்
சணற்  கயிற்றால் கட்டிப் போட்டு
உன் காற்சட்டை தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு
                           
                                                ஆத்மா நாம்

காகித கப்பல்












மண்வாசம் வீசும் திசையில் விரைகிறேன்
வழியெங்கும் மழை
எதிர் வரும் காற்றிலும் இழுத்து செல்லும் நீரிலும்
பேரிரைச்சலும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறேன்.
நீ அனுப்பிய காகித கப்பல் கடந்து செல்கிறது
துளியும் சலனமில்லாமல்.

நன்றி : வார்ப்பு
                            *    *   *

காவேரி அக்கா




யாரும் பார்க்கவில்லையென
எல்லோரும் பார்க்க
பக்கத்து வீட்டு
ஆறுமுகம் சாருடன்
கைகோர்த்து சுற்றிய
காவேரி அக்காவை
பார்த்து மகிழ்ந்தேன்.

அழுது அடம்பிடித்து
அடிவாங்கி விஷம்குடித்து
பிழைக்கவைத்து பயமுறுத்தி
பிடிக்காத மாமாவிற்கே
கட்டிவைத்த காவேரி அக்காவை
பார்த்து கலங்கினேன்.

தாலி ஏறிய நாளில்
கேலியும் கிண்டலும்
சிரித்தபடி இருந்த
காவேரி அக்காவை
பார்த்து வியந்தேன்.

பின் 'மாசமாகி' வந்து
பிள்ளையும் பெற்ற
காவேரி அக்காவை
பார்த்து யோசித்தேன்.

குழந்தைக்கு
பால்மறக்கடித்த சிலநாட்களில்
அதே ஆறுமுகத்துடன்
ஓடிப்போன
அதே காவேரி அக்காவை
பார்த்து
என்ன செய்ய ....?

மாசி 06, 2010 வார்ப்பு இணைய இதழில் வெளியான கவிதை.
நன்றி :  வார்ப்பு 
 
நன்றி : காவேரி அக்கா குடும்பத்தினருக்கு,

பார்வையாளன்




அரங்கம் சென்றேன்
முதல் நபரும் முடிவான நபராகவும் நானிருந்தேன்
முதல் வரிசையில் நான்காவதாக அமர்ந்தேன்
எழுந்து
ஏழாம் வரிசை சென்றமர்ந்தேன்
இருக்கை சப்தமிட்டது
உடன் எழுந்து
பின்வரிசை சென்றமர்ந்தேன்
மேடையில்
காட்சிகள் தோன்றி மறைந்தன
எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை.

நன்றி : வார்ப்பு

சுவாசம்

















மீன் விற்கும் ஒருத்தியும்
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்
ஒரே வீட்டில் இருந்தார்கள்

இவர்கள்
கண்ணயர்ந்தவேளையில்
சுவரில் சாய்ந்திருக்கும்
கூடைகள்

நூகர்தலுக்கு
இடம் வலம் ஏது?
கலந்தேயிருந்தன
வாசனையும் வீச்சமும்

ஆத்திரமோ அவசரமோ
நாள் ஒன்றில் மாறிப்போன
கூடைகளிருந்து கூடுதலாகவே
விற்றும் தீர்த்தன

சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து
கலந்தே வெளியேறுகிறது
நாசிகள் தேர்ந்தெடுத்து
கொள்கின்றன தேவையானவற்றை

நன்றி : வார்ப்பு

ஒப்பம்
















(வார்ப்பு இணைய இதழ் 16-11-2009 வெளியான எனது கவிதை)

கையொப்பம்  கேட்டார்கள்
அவரவருக்கான காற்றில்
அவரவருக்கான வானத்தில்
பறப்பதற்கு.


நிரப்பபடாத ஒப்பந்த படிமத்தில்
கிழிந்து தொங்கியது வானம்
சுவாசிக்கவும் மிச்சமில்லாத
காற்று.

மறுக்கையில்
நிர்முலமாக்கபட்ட பிடரியில்
வெடித்தது துவக்கு.


ஒன்றன் பின் ஒன்றாக
கையொப்பம் இட்டு நிமிர்கையில்
உடைந்தது சூரியன்.

நன்றி : வார்ப்பு

என் காதல் கவிதையும் நீயும்..

(வார்ப்பு இணைய இதழில் 'என் காதல் கவிதையும் நீயும்...' என்ற தலைப்பில்
 வந்த எனது கவிதை. தலைப்பு வார்ப்பு குழுமத்தை சார்ந்தது.)

தினம் கவிதை கேட்கிறது
உன் இதழ்
உடனே தந்தும் விடுகின்றன
உன் கண்கள்
எழுதத்தான் மனமில்லை
வெற்று மைக்கொண்டு
உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை.

நன்றி : வார்ப்பு