நகரம் என்னும் வேசையின் வசை மொழி

(பயணியின் ‘மீள மேலும் மூன்று வழிகள்’-கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி… நன்றி : எனில்.காம்)

                                  கவிதை என்பது… இப்படித் தொடங்கினால் நீங்கள் அடுத்த நொடியில் back buttonனை கிளிக் செய்து விடுவீர்கள் என்று தெரியும். மாறாக, காலம் கடந்து நிற்பது எதுவுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று ஆரம்பித்தல் ஓரிரு நிமிடங்கள் நீங்கள் நிற்பீர்கள் என்ற எண்ணத்தில் தொடர்கிறேன். காலம் கடந்து நிற்பது எதுவுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பல யுகங்கள் கடந்தும் பல கலை வடிவங்கள் நம்முன்னே நிலைத்து நிற்பதில் உறுதிப்படுத்துகின்றன.ஓவியங்களும் சிற்பங்களும் ரூப சாட்சி. கவிதைகள் அரூப சாட்சி.

1. “காமக் கடும்புனல் உய்க்கும்…”

இந்த குரல்(றள்) யுகம் தாண்டி ஒலிக்கிறதே எப்படி?

2. கையில் ஒரு விளக்கேந்தி
என்னை சந்திக்க வரவில்லை யாரும்,
நானே எனக்கு வழிக்காட்டிக்கொண்டு
அந்த மங்கிய நிலவொளியில்
படிகளில் ஏறிச் சென்றடைய
வேண்டியிருக்கிறது

பயணியின் ‘மீள மேலும் மூன்று வழிகள்’-கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி…
அன்னா அக்மதோவாவின் இந்தக் கவி வரிகள் பல மைல்கள் கடந்து நமக்குள் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துகிறேதே, எப்படி? இன்றளவில் எண்ணற்ற கவிதைகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் போதும் கவிதைகள் பற்றியும் கவிதைகள் சார்ந்தும் சொற்பமே சொற்பமாகத் தான் பார்வைகளும் கலந்துரையாடலும் நடக்கின்றன, இதற்குக் காரணமாக, மொழி சார்ந்த கலையில் மிக நுட்பமானது கவிதை என்பதாலும் அது பற்றிய விமர்சனம் கூட ஆழமான புரிதலுடன் இருக்க வேண்டும். என்பதாலும் நுனிப்புல் மேய்ந்துவிட்டுப் போய்விட முடியாது என்பதாலும் இருக்கலாம். சில நாட்களுக்கு முன் கவிதைகள் குறித்த கலந்தாய்விற்குச் சென்றிருந்தேன். ஒருவர் பேசத் தொடங்கினார். “நான் ஒரு ஆடிட்டர். எதையுமே அப்படித்தான் அணுகுவேன்” என்று ஒரு கவிதையை வாசித்துவிட்டு அதனைத் தணிக்கை செய்யத் தொடங்கினார். பாவம் கவிதை, என் கண் முன்னே துடிக்கத் துடிக்கச் செத்துப்போனது. செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தேன். இதனை இங்கே சொல்வதற்குக் காரணம்.. கவிதையை அணுகுவது என்பது அறிவை நம்புவதை விட உணர்வு ரீதியாக இருப்பது சரியானது என்பதைஉறுதிப்படுத்தத்தான்

மேலுள்ள இரண்டு கவிதைகளிலும் மேலோங்கிய உணர்வு நிலை இருப்பதை நீங்கள் உணர முடிகிறது தானே?

இதன் மூலம் அறிவார்ந்த கவிதை எழுதக் கூடாது என்றும் நிலைக்காது என்றும் அவைகள் கவிதையே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. உணர்வு சார்ந்த நிலையே கவிதையை நிலைக்க வைக்கிறது என்று நான் நம்புகிறேன். இது என் பார்வை. ஒரு உணர்வுபூர்வமான அதுவும் மன அழுத்தமுள்ள எரிச்சலை அதிகம் வெளிப்படுத்திய தொகுப்பாக பயணியின் ‘மீள மேலும் மூன்று வழிக”ளை நான் பார்க்கிறேன். மற்ற ஊர்களை விட நகரத்தில் பெரும் மக்கள் கூட்டத்தை எங்கும் காணலாம். இந்த ஏரியா என்றில்லாமல் எல்லா ஏரியாவிலும் எல்லாவிதமான வசதிகளையும் நீங்கள் பெறலாம். ஆனாலும் நகரத்தில் ஒவ்வொரு மனிதனும் நிபந்தனையின்றி தனிமைப்படுத்தப் படுகிறான். இந்த்த் தொகுப்பில் அநேக கவிதைகள் நிர்பந்திக்கப்பட்ட தனிமையை-நோய் வாய்ப்பட்ட வேசையையின் வசை மொழியாகவும் நகரம் என்னும் நோய் பீடிக்கப்பட்ட ஆண் குறியை, யோனியில் திணிக்கும்போது வரும் எரிச்சல் வசையாகவும் எனக்குப் படுகிறது. நேரம் என்னும் அடைப்பிற்குள் பல்வேறு மனிதர்களைக் கபளீகரம் செய்யும் நகரம், கவிஞனைத் தொடும் போதும் அவன் வெகுண்டு எழுந்து அதற்குள் அகப்படாமல் தப்பியோட நினைக்கிறான். ‘ஊர்ந்து செல்லும் இரவு’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் பாருங்கள்..

இப்புலர்காலையை
சுய புணர்ச்சியுடன் தொடங்குகிறேன்
அலுவலகம் சென்று சக அலுவலக கூதியான்களை
மாலை வரை சகித்திருந்துவிட்டு…
…..
ஊர்ந்து செல்லும் இரவை
புகைபிடித்துக் நகர்த்தி கொண்டிருக்கும் போதே
இந்தத் தாயோளி காலை வந்து விடுகிறது

இன்னொரு கவிதையில் பொழுதுகளை பாகப் பிரிவினையாக்குவதற்கு பெரிதும் காரணமான ‘சூரியனை நான்கு துண்டாக்கி’ திசைக்கு ஒன்றாக எறிகிறது. நகரம் என்பதற்கு நகரத்தை நோக்கிய நகர்தல், நகரத்திற்குள்ளே நகர்தல் என இரு வேறு அர்த்தம் கொள்ளலாம். இதில் முதல் ஒன்று வேகமாக நடந்து விடும் / நடத்தப்படும். ஆனால் இரண்டாவதோ நேரத்திற்குள் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நகர்வது அவ்வளவாக சாத்தியபடாது. கவிதை இப்படி ஆரம்பிக்கிறது..

இந்த நாசமாய்ப்போன நகரப் பேருந்து/ஒருநாளும் என்னைச் சரியான
நேரத்தில்/இந்த நிறுத்தத்தில் இறக்கி விட்டதேயில்லை

இது நகரத்தில் அன்றாடம் வழமை. இதன் விளைவுககள் தான் நம்மை வெறுப்படையச் செய்யும்.
இதில் இருந்து மீள்வதற்கு ‘மூன்று வழிகளை’ கவிதை சொல்லுகிறது.
1. பேருந்தை எரித்து விடுவது
2. அலுவலகத்தைத் தகர்ப்பது
3. குடும்பத்தைக் கொலை செய்து விடுவது.

இவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை மட்டுமில்லாமல் பிரிக்க முடியாதவையும் கூட. குடும்பத்தைக் கொலை செய்தல் என்பது குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து விடுபடுதல் அல்லது வெளியேறுதலாக பார்க்கிறேன். பயணியின் முதல் தொகுப்பு “ரகசியமொழி”. நான் வாசித்ததில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் இத்தொகுப்பு. புதுஎழுத்து வெளியீடு. அட்டைப்பட ஓவியம் மணிவண்ணன். நேர்த்தியாக வந்து இருக்கிறது. தொகுப்பு முழுக்கவே நகரம் திணிக்கும் வாழ்வு குறித்தான எரிச்சலுடன் மட்டும் இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அவைகளில் இருந்து விடுபட்ட கவிதையாகவும் எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகவும் “குழந்தைகள் உலக”த்தை பார்க்கிறேன். அந்தக் கவிதை..

குழந்தைகளை நம்
அதிகாரப் பூர்வமாக மிரட்டிகிறோம்
குரூரத்தால் ஒடுக்குகிறோம்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குகிறோம்
மேலும் அவர்கள் மெளனமாய்
நம்மைக் கடந்து செல்கிறார்கள்
அவர்களின் பாதைகளிலும்
பொம்மைகள் பலவிதமாய்
இறந்து கிடக்கின்றன

இதில் //மெளனமாய் நம்மைக் கடந்து செல்கிறார்கள்// என்பதில் பெரியவர்களாகிய நம்முடைய இயலாமையைக் கவிதை கேலி செய்கிறது. அதைத் தாண்டியும் வன்மம் என்பது ஆயுதம் சார்ந்து அல்ல எண்ணங்களை சார்ந்தது என்பதை நம்மிடையே உறைய வைக்கும் உண்மை. தொகுப்பில் மிக முக்கியமான கவிதையாக நான் இதனைப் பார்க்கிறேன்.

பயணி முன்னுரையில் அவர் எழுதிய கால வரிசைப்படி தொகுத்து இருப்பதாகக் கூறி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துச் சில கவிதைகளைத் தவிர்த்திருந்திருக்கலாம். (உ.ம்)-நிர்வாண அம்மன், முட்டாள்

கவிஞன் 1, கடைசிப் பெட்டிக்குள் நுழையும் ரயில். விமர்சனம் சொல்லவேண்டும் என்பதால் இதனைச் சொல்லவில்லை நல்லதோர் தொகுப்பில் தவிர்த்து இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். தொகுப்பில் உள்ளாடைகள் களவு பற்றிய இரண்டு கவிதைகள் (அதன் உளவியல் சிக்கல் சார்ந்தே வருகிறது) நகரத்திலிருந்து வெளியேறி வேரை நோக்கிய திரும்புதலின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ‘இப்பொழுது சிக்னலை கடக்கத் தொடங்குகிறேன்’, முன்னோர்களில் தன்னைத் தேடி

தன்னிடமே வந்து நிற்கும் தேடலைக் கூறும் ‘கண்ணாடி எதிரில்’, இரு வேறு கடவுள்களை ஒரு நேர்கோட்டில் சந்திக்க வைக்க முயற்சிக்கும்

‘சிவம் கதவை தட்டிக் கொண்டிருக்கிறான்’, சாமந்திப் பூவின் மாயமணம் வீசும் அமுதாக்கா இறந்துவிட்டாள்’, எழுதித் தீராத ‘முடிக்கப்படாத கவிதை’
ஆகியவைகள் ஒரு தனித்த அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக “நானொரு பேடி”

ஒரு நாள் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். அங்கு வரவேண்டிய எந்தப் பேருந்தும் வரவில்லை என்பதால் நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. ஒரு டிப்-டாப் இளைஞன் நின்று விதவிதமான சப்தங்களை எழுப்பியவண்ணம் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தான். கூட்டம் அவனை மட்டுமே மெளனமாக கவனித்து கொண்டிருந்தது. சில பேருந்துகள் திடீரென்று பணிமனையில் இருந்து வரத்தொடங்கின. அவ்வளவுதான், இப்படி என்று சொல்ல முடியாத ஏகப்பட்ட கூச்சல், தள்ளு..முள்ளு. இப்போது அந்த இளைஞன் ஒரு ஓரத்தில் நிதானமாக மிகுந்த அமைதியுடன் நின்று கொண்டிருந்தான் கூட்டத்தைப் பார்த்த வண்ணம்.
அந்த இளைஞனாக பயணியின் கவிதைகள் எனக்குத் தெரிகிறது.


                                                                         கவிஞர் பயணி

மீள மேலும் மூன்று வழிகள்
பயணி
வெளியீடு : புது எழுத்து
விலை : 70/-

நன்றி : எனில்.காம்

http://www.eanil.com/?p=38



No comments: