வாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்


One Good thing about music. when it hits you. you feel no pain. - Bob Marley
மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் அந்த அறையின் கதவு ஒருக்களித்து இருக்கிறது.
இப்போது அதன் வழியாக ஒரு மயில் உள்ளே நுழைகிறது. அதன் உடலும் தலையும் அசைத்துக்
கொண்டே ஒரு வித தயக்கத்துடனும் அங்குமிங்குமான ஒரு தேடலுடனும் மெதுவாக காலடி
எடுத்து வைக்கிறது. இந்த மயில் இருக்கும் இடத்தில் வெண்பனியை வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளலாம்.. இந்த பாடலின் ஆரம்பமும் இப்படியாகவே இருக்கும். மென்மையாக
தொடங்கும் தாள நடை, அந்த நடையை இடர் செய்யாமல் மெல்லியதாய் எழும் குழலோசை.
பின் சிணுங்கும் கிங்கிணி..இதில் விடிகாலையின் ஏகாந்தத்தை மிகச் சில நொடிகளில் உணர முடியும்.
அதனை முழுவதுமாக உள்ளிழுப்பதற்குள் ..23 வது நொடியில் பனிக்குழைவின் ஒரு பகுதியினுள்
நின்றுக் கொண்டே கம்பளி போர்வையின் கதகதப்புடன் பாடகரின் குரல் நம்மை வந்தடையும்.
இந்த பாடல் முழுக்கவே 'பூவே' என்ற சொல் வரும் ஒவ்வொரு இடத்திலும் அந்த சொல்லாலும்
அது உதிர்ந்து விடாமல் இசைப்பார் பாடகர்(KJ.ஏசுதாஸ்). தொடங்கும் பல்லவியில் 'வரலாமா.. அனுமதி
கிடைக்குமா' என்றபடியே வரும் தாள நடை சரணத்தில் கைகளை கோர்த்துக் கொண்டு நடக்கும்.
இணைப்பாக வரும் அனு பல்லவியில் கோர்த்துக் கொண்ட கைகள், மென் ஊஞ்சாலட்டும்.
வயது வரம்புக்கு உட்பட்டு காதலும், தேவை மட்டுமே கருதி தேடலும் ஏற்படுவதில்லை.
அதே போல் இந்த பாடலின் ராகம் தாளம் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை
(முன்பே அறிந்தவர்கள் இந்த பாடல் ஏற்படுத்த கூடிய என் அனுபவத்தை பார்வையிடுவீர்கள் என்று நம்புகிறேன்).
முதல் சரணத்தின் முன் வரும் இடையிசை, எங்கோ ஒரு பாறையின் இடையில் உருவாகிய
ஒரு மெல்லிய ஊற்று கனிந்து கொப்பளித்து மேடு பள்ளங்களை தத்தி தாவி குதித்து ஆறாகவோ
நதியாகவோ ஓடி ‘ஹோ.. ‘வென சரசரவென்று கீழிறங்கி தரை தொட்டு, தொட்ட வேகத்திலேயே
எழுந்து பின் நெகிழ்ந்து ஓடும் அருவியென குளிர்விக்கும். இதே போல், இரண்டாம் சரணத்தின்
முன் வரும் இடையிசையிலும் முதலின் மிச்சம் போல ஆங்காங்கே தோன்றினாலும் காடு, மலை, பள்ளம்,
 மணலென பல்வேறு நிலங்களில் பாயும் நதிகளானது தனது அனுபவத்தை ஒரு கதைபாடலாக நம்மிடையே
சில நிமிடங்கள் பகிர்ந்து இறுதியில் ஒருமித்து கடலில் சங்கமிப்பது போன்ற காட்சியை உணர்ந்தும்.
மென்மையாக ஆரம்பிக்கும் பாடல் இந்த இடத்தில் ஒரு கடின தன்மையை அடைவதாக தோன்றும்.
"மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்"- என்ற தாவோ தே ஜிங்கை(லாவோ ட்சு ) இங்கே நினைபடுத்த
விரும்புகிறேன். இந்த இரு இசைக்கோர்ப்பு பற்றிய இன்னும் ஒன்றையும் இங்கே தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன். இந்த சரணத்துக்கு முன் வரும் இசைக்கோர்ப்பு மட்டுமே தனித்த இரவில் கேட்க நேர்ந்தால்
தெளிந்த நீர்மையை அள்ளி தெளிக்கும் சில்லிட்ட சிலிர்ப்பை உணரலாம்.
முதல் சரணத்தின் முதல் வரி 'நிழல் போல நானும்" என்னும் முடிவில் அந்த 'ம்மம்'வை விட்டு வெளியே
வராமல் அங்கிருந்து அப்படியே எழும்பி 'ஆஆஆ..'வில் நின்று மறுபடியும் அந்த வரியை இசைத்து
விட்டு 'நடை போட நீயும்.. ' வரிக்குள் அமிழ்வார். அந்த 'நிழல் போல' வில் ஒரு பறவை மெதுவாக மேலெழும்பி
பறந்து, மேகமற்ற வானத்தில் சிறகசைக்காமல் வட்டமடிப்பது போல இருக்கும். எனக்கென்னவோ
இந்த மொத்தம் பாடலில் வெளிப்படும் ஈரத்தின் மென்தன்மை முழுக்கவே இந்த இடத்தில் இருப்பது போலவும்
அல்லது இங்கிருந்து துளிர்த்து பாடலெங்கும் கிளைவிட்டு பரப்பி தாய்மையுற்று இருப்பது போலவும் இருக்கிறது.
முதல் சரணத்தில் வரும் 'நான் வாழும் வாழ்வே உனக்காத்தானே' அடுத்த சரணத்தில் 'நான் செய்த பாவம்
என்னோடு போகும், நீ வாழ்ந்து நான் தான் பார்த்தலே போதும்' என்ற வரிகள் இனி வரும் தலை முறை
காதலர்களுக்கும் பிடித்து போகும் வரிகள். பாடல் முழுக்கவே ஒரு மென்சோகம் இழையோடும் என்ற ஒற்றை
வரியில் கடக்க முடியாத பாடல்.
தொடக்க இசையும் முடிவில் வரும் இசையும் ஒன்று போல தோன்றினாலும், உங்களின் வாசலில் நுழையும் காற்றுக்கும் வெளியேறும் காற்றுக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசமானது. இதனை வலுப்படுத்த இரண்டு விஷயங்களை உங்களின் பார்வையில் வைக்கிறேன்.
1.‘ஒரே நதியின் ஓட்டத்தில் இரண்டு முறை கால் வைக்க முடியாது’ என்ற Heraclitus கூற்று போல ஒரு அனுபவத்தை
கடந்த நாம் பெருங்காதுள்ள யானையை ஒரு குழந்தையை போல் பார்ப்பது இல்லை. இளைப்பாற வீடு அடையும்
நம்மை போல இதனை நினைத்துக் கொள்ளாலாம். 2. முடிந்த இடத்தில் தேடல் ஆரம்பிக்கிறது, அதாவது, உச்சியை
அடைந்த சிஷ்யன் கேட்டான் 'குருவே, இனி என்ன செய்வது','தொடங்கு'என்றார் குரு-என்னும் ஜென் தத்துவ கதை
போல. அல்லது இந்த மொத்த இயங்கியலும் வேறு எங்கோ தொடங்குகிறது.
மேல் சொன்ன புரிதல் நீங்கள் முழுக்கவே இணைந்தும் முரண்பட்டும் போகலாம். எப்படியாகினும், இந்த பாடலை,
 ஊரடங்கிய மதிய பொழுதிலோ இரவிலோ சன்னமாக, நீங்கள் இருக்கும் அறையிலோ அல்லது உங்களை
செவி வந்தடையும் தூரத்திலோ தவழ விடுங்கள். இந்த அனுபவத்தை விட வேறு பல நல்லனுபவங்களை பெற முடியும். அவரவருக்கான வானத்தில் அவரவருக்கான சூரியன்,சந்திரன், நட்சத்திரம்,வானவில், மழை,வெயில்,பனி
தோன்றுவது போல அவரவர் அனுபவங்களை மீட்டு எடுக்கலாம். திரைப்பட இந்த பாடலின் பின்னணி வேறு
 ஒன்றாகவும் இருந்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
பாடல் வரிகள், இசை, பாவம்(Baவம்), குரல் என்று அனைத்தும் ஒத்திசைவாக இயைந்த பாடலாக
இதை நான் பார்க்கிறேன். இதனை என்னளவில் சிறந்த புலமையாகவும் ஒரு தாவோ வாகவும் தெரிகிறது.
நிறைவாக இந்த தாவோ தே ஜிங்கை(லாவோ ட்சு )உங்களின் பார்வையில் வைக்கிறேன்.
''புலமையை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் வளர்வான்;
தாவோவை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் தேய்வான்
தேய்வான், தொடர்ந்து தேய்வான்,
செயல்படாமையை அடைகிறவரையும்
மேலும்
எல்லாவற்றையும் செய்ய முடியும்,
செயல்படாமையினால்''
செயல்படாமையா புலமையா என்பதை இந்த பாடலை ஆழ்ந்து கேட்டவுடன் முடிவெடுக்க விரும்புகிறேன்.
படம் : சொல்லத் துடிக்குது மனசு
ஆண்டு : 1988
இயக்குனர் : பி. லெனின்
பாடல் : வாலி
இசை : இளையராஜா
- வேல் கண்ணன்.




No comments: