கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை:
1. ரொட்டி -------------- எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்; கடைசி மகள் உவர்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்; அலுவலக நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்; எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் நெரூதா, உங்களின் ரொட்டிகளைப் போல..
2.நம் வீடு ------ என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது வேட்டை நாய்களை ஏவினேன் பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய் ஆற்றின் வழித்தடத்தில் நாம் அமைத்த வீட்டினை நோக்கி ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.
நன்றி : கவிஞர் Amirtham Surya(அட்டகாசமான வடிவமைப்புக்கு நன்றி நண்பா) & கல்கி வார இதழ்.
மடியில் கிடந்த இரண்டு பந்துகளைவிடச் சின்னஞ்சிறிய சிவப்பு நிறப்பந்து உன் இடது பிஞ்சுக் கையில் கச்சிதமாய்ப் பொதிந்திருந்தது 'கேட்ச்' என்று என்னை நோக்கி வந்ததைத் தவறவிடுகின்றேன் கரைபுரண்டு ஓடும் நதியின் குளிர்ந்த கூழங்கற்கள் வந்தடைகின்றன அடுத்ததாக மூவண்ண பந்தை வலதுப் பிஞ்சிலிருந்து எறிய, தவறவிடுகின்றேன் மிதக்கும் நந்தவனத்தில் பதினோரு துளையிட்ட புல்லாங்குழலை மாயா வாசிக்க கேட்கிறேன் இறுதியாக உன் இருகைகளிலும் பிடித்தெறிந்த பலவண்ணமுள்ள பந்தைச் சரியாகப் பிடித்த நொடியில் கிடுகிடு பள்ளத்தாக்கில் இவ்வுலகை இழுத்துச் செல்கிறது பெரும்பாதரசக் குண்டு
(சோலைமாயவனின் மாயாவிற்கு )
நன்றி : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019 நன்றி :Jaikumar Mankuthirai, தி இந்து குழுமம்